Published:Updated:

கோவை கார் வெடிப்பு சம்பவ விசாரணையை என்.ஐ.ஏ-க்கு மாற்றியது சரியான `மூவ்’ தானா?!

கோவை கார் வெடிப்பு

``2018 உபா (UAPA) சட்ட திருத்தத்தின்படி என்.ஐ.ஏ-தான் விசாரிக்க முடியும்” இராஜீவ் காந்தி.

கோவை கார் வெடிப்பு சம்பவ விசாரணையை என்.ஐ.ஏ-க்கு மாற்றியது சரியான `மூவ்’ தானா?!

``2018 உபா (UAPA) சட்ட திருத்தத்தின்படி என்.ஐ.ஏ-தான் விசாரிக்க முடியும்” இராஜீவ் காந்தி.

Published:Updated:
கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளுக்கு நாள் அதன் விசாரணையில் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்தும் வருகிறது. இதனால் இந்த வழக்கை என்.ஐ.ஏ-க்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த சம்பவம் குறித்து விளக்கியும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து இதன் விசாரணையை என்.ஐ.ஏ-க்கு பரிந்துரைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், ``கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை மேலும் உறுதி செய்திடவும் முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை வெடிப்பு சம்பந்தமாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
கோவை வெடிப்பு சம்பந்தமாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

இது போன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதால் இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்கு ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல்துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கியப் பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்குத் தக்க பாதுகாப்பை வழங்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ராஜீவ்காந்தி
ராஜீவ்காந்தி

இவ்வாறு என்.ஐ.ஏ-க்கு விசாரணை மாறி இருப்பது ‘சரியான மூவ்...’தான் என்கிறார் தி.மு.க செய்தி தொடர்பு இணைச்செயலாளர் இராஜீவ் காந்தி. மேலும் தொடர்ந்தவர், “ஒரு விஷயத்தில் தீவிரவாத சந்தேகம் இருந்தால் மாநில அரசு ஒப்புதல் இல்லாமலோ இல்லை மாநில அரசின் பரிந்துறையின்படியோ பிரிவு 43D-படி ஒன்றிய அரசு எடுத்து கொள்ளலாம். இந்த சம்பவத்தில் வேறு மாநில மற்றும் வெளிநாடு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்திருக்கிறது. இப்படி இருக்கும் போது சட்டப்படி தமிழ்நாடு அரசு இதில் நடவடிக்கை எடுக்க முடியாது, கூடாது. 2018 உபா சட்ட திருத்தத்தின்படி என்.ஐ.ஏ-தான் விசாரிக்க முடியும். எனவே வெளிநாட்டு தொடர்பு அல்லது வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால் கூட அதை என்.ஐ.ஏ எடுத்து கொள்ள முடியும் என்கிற முகாந்திரம் இருப்பதால் இதை என்.ஐ.ஏ விசாரிக்கலாம் என தமிழக அரசு கருதுகிறது.

அதோடு அந்த நபர் ஏற்கனவே என்.ஐ.ஏ கண்காணிப்பில் இருந்தவர் என்கிற அடிப்படையிலும் இந்த விசாரணையை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கிறார்கள்” என்றவரிடம், ‘இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு மாநில அரசும், அதன் உள்துறையும் தான் என்று பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறதே’ என்கிற கேள்வியினை முன்வைத்தோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

“இது சட்டமே படிக்காத, கீழ்த்தரமான அண்ணாமலையின் குற்றச்சாட்டு. அவருக்கு சட்டமும் தெரியவில்லை, சமூக சூழலும் புரியவில்லை. அவர் எப்படி ஐ.பி.எஸ் ஆனார் என்கிற கேள்வி தொடர்ந்து திமுக வைக்கிறது. ஒரு நபரை என்.ஐ.ஏ விசாரிக்கிறது என்றால் அதன் அறிக்கையை என்றைக்கும் மாநில அரசிடம் கொடுக்காது. தனி நபர் மீது ஒரு சந்தேகம் வந்தால் தனிபட்ட நபரையும் ஒரு தீவிரவாத அமைப்பாக கருதி விசாரிக்கலாம் என்று 2018 சட்டத்திருத்தத்தம் சொல்கிறது. அந்த வகையில், 2019-ஆம் ஆண்டு என்.ஐ.ஏ விசாரித்து, கைது செய்து எச்சரித்த நபர் தான் இந்த செயலில் ஈடுப்பட்டிருக்கிறார். அவர் மீதான அறிக்கையை மாநில அரசுக்கு என்.ஐ.ஏ அனுப்பவில்லை, அனுப்பவும் முடியாது. இப்படி இருக்கும் போது எதற்காக அண்ணாமலை ஒரு பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். அவரின் நோக்கம் சமூக பதட்டத்தை உருவாக்குவது, காவல்துறை-மாநில அரசை குறை சொல்வது. அண்ணாமலை போல் அரைவேக்காட்டுத் தனமாக இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஒரு ஏஜென்சி மீது குற்றச்சாட்டு வைக்க விரும்பவில்லை” என்றார்.

இது தொடர்பாக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “நாங்கள் இதை வரவேற்கிறோம். ஆனால், இது தாமதாமக எடுக்கப்பட்ட முடிவு.  23-ம் தேதி அன்றே இந்த முடிவை எடுத்திருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அன்றைய தினமே இதன் பின்னால் ஒரு பயங்கரவாத சதி இருக்கிறது என்பதை காவல்துறை தெரிந்து கொண்டும், மூன்று நாள்கள் கழித்து... அதுவும் எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுடைய அழுத்தத்திற்கு பிறகுதான் தமிழக அரசு இந்த விசாரணையை என்.ஐ.ஏ-வுக்கு பரிந்துறைத்திருக்கிறது” என்கிறார்.