ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட, 29 வயது இளைஞரான பொறியியல் பட்டதாரி சிவபிரசாந்த் பிப்ரவரி மூன்றாம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் போட்டியிட முயன்றதால், அ.ம.மு.க-வையும் களமிறக்கி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் எனக் கணக்கு போடப்பட்டதாம்.
ஆனால், ஓர் அணிதான் போட்டியிட வேண்டுமென்ற பா.ஜ.க-வின் அழுத்தம், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும் ஆதரவை வைத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக இரட்டை இலையை வசப்படுத்திய பழனிசாமியின் திட்டம் போன்ற காரணங்களால் பன்னீர்செல்வம் தரப்பு போட்டியிலிருந்து விலகிக்கொண்டது.

நிலைமை இப்படியாகும் என்பதை எதிர்பாராத டி.டி.வி.தினகரன் தரப்பு, தி.மு.க கூட்டணியைத் தோற்கடிப்பதே நமது நோக்கம், அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் அது சாத்தியமாகும் என அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்கு தூது விட்டுப் பார்த்ததாம். பன்னீரையே வேண்டாம் என்கிறபோது, டி.டி.வி எதற்கு என முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாம் பழனிசாமி தரப்பு. `எங்களையே கூட்டணியிலிருந்து கழற்றிவிட பழனிசாமி முயற்சி செய்து பார்க்கிறார், இந்த நேரத்தில் போய் எப்படி உங்களைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள... எனக்கூறி பா.ஜ.க தரப்பும் கைவிரித்துவிட்டதாம்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட எஸ்.ஏ.முத்துக்குமரனுக்கு நோட்டாவுக்கும் கீழ் ஆறாவது இடம்தான் கிடைத்திருந்தது. நோட்டாவுக்கே 1,546 வாக்குகள் கிடைத்திருந்த நிலையில், அ.ம.மு.க-வுக்கோ 1,204 வாக்குகள் மட்டும்தான் கிடைத்தன. இது மொத்த வாக்குகளில் ஒரு விழுக்காடு கூட இல்லை. இத்தனைக்கும் தே.மு.தி.க-வோடு கூட்டணியும் அமைத்திருந்தார்கள். இப்போதோ தே.மு.தி.க தனித்துப் போட்டியிடுகிறது. அ.தி.மு.க-வின் அனைத்து அணிகளையும் ஒன்றிணைப்பதே பணி என்ற சபதத்தோடு சசிகலா இருப்பதால், அ.ம.மு.க-வுக்கு ஓட்டு கேட்க அவரையும் அழைக்க முடியாது.
அதுபோக, ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் பணிமனை அமைத்து பணிகளைத் தொடங்கியிருந்தாலும், செலவுகளை எதிர்கொள்ள நிதி திரட்டுவது சவாலாகவே இருந்ததாம். முன்னணி நிர்வாகிகள் பலரும் ஏற்கெனவே அ.ம.மு.க-விலிருந்து விலகிவிட்ட நிலையில், இருப்பவர்களும் கட்சிக்கே நிதி கொடுக்க மறுக்கிறார்களாம். கள நிலவரம் அறிந்து தேர்தல் நிதி பற்றி வாய்திறக்கவே மறுத்துவிட்டார்களாம்.

இப்படி எல்லா பக்கமும் கேட் போடப்பட்டுவிட்டதால், என்ன செய்வது எனப் புரியாமல் டி.டி.வி.தினகரன் திகைத்து நின்றபோதுதான், இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. `அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலை வைத்துக்கொண்டு, இப்போது புதிய சின்னத்தில் போட்டியிடுவது சரியாக இருக்காது’ என்று கூறிவிட்டு, போட்டியிலிருந்து விலகுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் டி.டி.வி.தினகரன். “குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காதது மட்டும்தான் போட்டியிலிருந்து விலகியதற்குக் காரணம். வேறு எதுவும் இல்லை” என்றும் விளக்கமளித்திருக்கிறார் அவர்.

இது தொடர்பாக அ.ம.மு.க-வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சண்முகவேலு நம்மிடம் பேசியபோது, ``முழுவீச்சில் நாங்கள் தேர்தல் பணியாற்றிக்கொண்டிருந்தோம். அ.தி.மு.க-வுக்கு முன்பே நாங்கள்தான் பணிகளைத் தொடங்கி, வீடு வீடாக வாக்கு சேகரித்தோம். குக்கர் சின்னம் கிடைக்காதது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. வேறு வழியில்லாமல் போட்டியிலிருந்து விலகவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்றார்.
ஆனால், தோல்வி பயத்தால்தான் அ.ம.மு.க போட்டியிலிருந்து விலகியிருப்பதாக அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா குற்றம்சாட்டுகிறார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ``குக்கர் சின்னம் இருந்து மட்டும் கோவில்பட்டியில் தினகரனால் வெற்றி பெற முடிந்ததா? இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காத அனுபவம் அ.ம.மு.க-வுக்கு முன்பே இருந்திருக்கிறது. எனவே, முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடாதது ஏன்... ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி முகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு என்ற கதையாக, சப்பையான காரணங்களைக் கூறி, போட்டியிலிருந்து டி.டி.வி.தினகரன் விலகிக்கொண்டது, அவருக்கு இருக்கும் பயத்தையே காட்டுகிறது. அ.ம.மு.க போட்டியிட்டாலும் அ.தி.மு.க-வை எந்தவகையிலும் பாதிக்காது. போட்டியிடாதது வேண்டுமானால் தி.மு.க கூட்டணிக்குச் சாதகமாக இருக்கலாம். தனிக்கட்சி வைத்திருக்கும் அவர் தனியாக மக்கள் ஆதரவைப் பெற முடிந்தால் பெற்றுக்கொள்ளட்டும். கூட்டணியில் இணைவதற்கான அவரின் அழைப்பை எப்போதும் அ.தி.மு.க ஏற்காது” என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துவிட வேண்டுமென்பதுதான் டி.டி.வி-யின் நோக்கம் என்கிறது அ.ம.மு.க-வின் வட்டாரங்கள். டி.டி.வி-யின் அடுத்த அரசியல் நகர்வுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!