Election bannerElection banner
Published:Updated:

`உதயநிதி போட்டி இல்லையா..!’ - தகவல் பரவுவதன் பின்னணி என்ன?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த உதயநிதி ஸ்டாலின், தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஒரு தகவல் வெளியானது. இந்தத் தகவல் பரவியதற்கு என்ன காரணம் என உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த உதயநிதி ஸ்டாலின், அந்தத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்வதற்கான அனைத்து வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். மார்ச் 6-ம் தேதி சென்னையிலுள்ள தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடக்கவிருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்தச் சூழலில், உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் பரவ என்ன காரணம் என அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

``வாரிசு அரசியல், குடும்ப அரசியல் ஆகிய இரண்டு விமர்சனங்களைத்தான் இந்தத் தேர்தல் பரப்புரையில் தி.மு.க-வுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மேற்கொண்டுவருகின்றனர். சமீபத்தில் தமிழகம் வந்து பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும்கூட இந்த இரண்டு விமர்சனங்களைத்தான் தி.மு.க மீது வைத்தனர்.

இந்த விமர்சனங்கள் வரும் என்று தெரிந்துதான் தி.மு.க தலைவர் ஸ்டாலினும்கூட உதயநிதி இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியதாகத் தெரியவில்லை என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணியை உதயநிதி ஸ்டாலின் டிக் செய்ததன் பின்னணி என்ன?

ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இளைஞரணியினர் பலரும் அவரவர் சொந்தத் தொகுதியிலும் உதயநிதி போட்டியிடுவார் என்று நம்பப்பட்ட ஆயிரம் விளக்கு, திருவாரூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும்கூடத் தங்கள் பெயரிலும், உதயநிதி பெயரிலும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

உதயநிதி 100 நாள் பரப்புரை
உதயநிதி 100 நாள் பரப்புரை
twitter/@Udhaystalin

தலைவரின் மகன் என்பதற்காக சீட் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதி செய்த பரப்புரை, அதற்குக் கிடைத்த வரவேற்பு, இளைஞரணிச் செயலாளராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் செய்த கட்சிப் பணி, இளைஞரணியை கிளைக்கழகங்கள், நகர-பகுதி-பேரூர் வட்டங்கள் வரை எடுத்துச் சென்றது, சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து நற்பெயரை பெற்றது... போன்ற பல்வேறு காரணங்களுக்காகவே அவருக்கு தேர்தலில் சீட் வழங்க தலைமைக் கழகம் அனுமதி வழங்கியதாகவே தெரிகிறது.

ஆனால், நாள்கள் செல்லச் செல்ல விருப்ப மனு அளிப்பவர்களில் வாரிசுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவர்களுள் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் மகன் அருண், கடலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் எம்.ஆர்.கே.பி.கதிரவன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுவின் மகன் டாக்டர் கம்பன்... ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்படி விருப்ப மனு அளிக்கும் வாரிசுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் தகவல் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

உதயநிதி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிருந்து கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால், குடும்பத் தொழில் பார்த்துக்கொண்டிருந்த இவர்கள் திடீரென்று நேரடியாகத் தேர்தல் களத்துக்கு வருகிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரே குடும்பத்தில் இருவருக்கு சீட் கிடையாது என்று கூறி சீட் தர மறுத்துவிடலாம் என்ற யோசனையில் இருந்திருக்கிறார். ஆனால், அப்படிச் சொன்னாலும் தன் மகனுக்கு மட்டும் சீட் கொடுத்துவிட்டு நமக்கு இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார் என வெளியே போய் உதயநிதியை உதாரணம் காட்டுவார்கள். அது கட்சிக்குள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில் இப்படியான உட்கட்சிக் குழப்பங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என அந்த யோசனையைத் தவிர்த்திருக்கிறார்.

அதன் பின்னர்தான் தங்கள் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் எதிர்பார்த்த சீனியர்களை அழைத்த ஸ்டாலின், `இந்தத் தேர்தல்ல ஜெயிக்கணும்னு நான் மட்டும்தான் நினைக்கிறேன்னு தோணுது. உங்களுக்கெல்லாம் அந்த எண்ணம் துளியும் இல்லைனு நினைக்கிறேன்’ என்று தொடங்கி அவர்களை வார்த்தைகளால் லெஃப்ட் அண்ட் ரைட் விளாசியிருக்கிறார். `வாரிசுகள்ல ஒருத்தருக்கும் சீட் கிடையாது. அது உதயநிதியாவே இருந்தாலும் சரிதான்’ என்றவர் `இது கலைஞர் காலத்து தி.மு.க இல்லை. ஸ்டாலின் கால தி.மு.க’ எனச் சொல்லிவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.

தி.மு.க நிர்வாகிகள்
தி.மு.க நிர்வாகிகள்

``பரபரப்பாக வேலை செய்துகொண்டிருக்கும் உதயநிதிக்கும் நம்மால் சீட் இல்லாமல் போய்விட்டது. இனி அவருடைய கோபத்துக்கு ஆளாகிவிடுவோமா என்று சீனியர்கள்தான் பயந்து கிடக்கிறார்கள்” என்கின்றனர். மேலும் அவர்கள், ``இதன் மூலம் தி.மு.க வாரிசு அரசியல் கட்சி இல்லை என்ற தகவலை எடப்பாடிக்கும் மோடிக்கும் மட்டுமன்றி தன் குடும்பத்தாருக்கும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்” என்கின்றனர்.

இப்படி ஒருபுறம் கூறப்பட்டாலும், வாரிசுகளைக் களமிறக்கும் சீனியர்களை கட்டுக்குள் வைத்திருக்க, `உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை’ என்று வதந்தி பரப்பப்பட்டதாகவும், அவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவார் என்றும் மற்றொரு தரப்பில் அடித்துக் கூறுகின்றனர். அறிவாலயத்தில் நடைபெறும் வேட்பாளர் நேர்காணலில் இதுவரை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. 6-ம் தேதி, சனிக்கிழமை சென்னை தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெறவிருக்கும் சூழலில் அன்று இதற்கான விடை கிடைக்கும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு