Published:Updated:

`டி.டி.வி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும்!' - விவேக் பேச்சால் உக்கிரத்தை வெளிப்படுத்திய சசிகலா

ஆ.விஜயானந்த்

`சின்னம்மா விரும்பினால், நிச்சயமாக விலகிக்கொள்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பணரீதியாக அனைத்துக் கணக்குகளையும் முறையாக வைத்திருக்கிறேன்' என உறவுகள் வட்டாரத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார் விவேக்.

Sasikala
Sasikala

`ஜெயா டிவி சி.இ.ஓ பதவியில் இருந்து விவேக் ஜெயராமன் வெளியேறிவிட்டாரா... வெளியேற்றப்பட்டாரா?' என அரசியல் வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. `சசிகலாவும் கோபத்தில் இருக்கிறார், தினகரனும் உக்கிரத்தில் இருக்கிறார் என்றால் எதற்காக இந்தப் பதவியில் நீடிக்க வேண்டும்?' என வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் விவேக்.

vivek jayaraman
vivek jayaraman

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த 22-ம் தேதி நடந்த 21-ம் ஆண்டு தொடக்கவிழாதான் சர்ச்சைக்கான தொடக்கப் புள்ளி. இந்த விழாவில் பேசிய விவேக் ஜெயராமன், `எந்தவொரு அரசாங்கம் வந்தாலும் நம்முடைய ஜெயா டிவி பெரியளவுக்குத் தாக்குப்பிடித்து நிற்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் அரசு கேபிள் டிவியில் தொடங்கி அனைத்திலும் ஏராளமான பிரச்னைகளை ஏற்படுத்திவிட்டார்கள். அதையும் தாண்டி இந்தச் சேனலை நாம் நடத்த வேண்டும் என்றால், அனைத்துத் தரப்பினருக்கும் முக்கியத்துவம் கொடுத்து புதுமாதிரியாகக் கொண்டு செல்ல வேண்டும். 21 வயது என்பது மிக முக்கியமான காலகட்டம். மனிதர்களுக்கே இந்த வயதுதான் திருப்புமுனையை உருவாக்கும். அப்படியிருக்கும்போது, அம்மா உருவாக்கிய ஜெயா டிவி, 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்றால் இன்னும் 21 ஆண்டுகள் கழித்தும் மிகப் பெரிய அளவுக்குக் கால்பதிக்க வேண்டும். அதற்கான புதிய பாதையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்' எனப் பேசினார்.

Vikatan

`அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும், புதிய பாதையைத் தேர்வு செய்ய வேண்டும்' என்றால், `என்ன சொல்ல வருகிறார் விவேக்?' என இந்தத் தகவலை டி.டி.வி-யின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் ஜெயா டிவி ஊழியர்கள் சிலர். ஏற்கெனவே, `டி.டி.வி தொடர்பான செய்திகளைக் குறைத்து வெளியிடுங்கள்' எனக் கூறியிருந்தார் விவேக். அந்த வரிசையில் இந்தப் பேச்சும் சேர்ந்துகொண்டது. இதைப் பற்றி உறவுகளிடம் பேசிய விவேக், `நான் அனைத்து அரசியல் தலைவர்கள் வரிசையிலும் தினகரனைக் கொண்டு வாருங்கள், அவரை மட்டுமே டிவியில் காட்டிக்கொண்டிருந்தால் போரடித்துவிடும் என்றுதான் கூறியிருந்தேன். இதை அவரிடம் மாற்றிச் சொல்லிவிட்டார்கள்' என விளக்கமும் கொடுத்தார். விவேக்கின் விளக்கத்தால் கொதிப்படைந்த தினகரன், `ஜெயா டிவி ஊழியர்களை வைத்துக்கொண்டு, என் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் குறையுங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம், சின்னம்மாவுக்காகத்தானே நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வருகிறேன். சொந்தச் சேனலிலேயே என்னை ஏன் புறக்கணிக்கிறார்கள்?' எனக் கொந்தளித்தார்.

Jaya t.v office
Jaya t.v office

இதையடுத்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றை விலைபேசும் முடிவுக்கு வந்தார் தினகரன். இதுகுறித்து ஆதரவாளர்களிடம் பேசிய டி.டி.வி, `நாம் ஏன் ஜெயா டிவி-யை எதிர்பார்க்க வேண்டும், புதிதாக நாமே ஒரு சேனலை உருவாக்குவோம். இன்றைக்கு எத்தனை பேர் ஜெயா டிவி-யைப் பார்க்கிறார்கள்?' எனக் கூறிவிட்டு, தனியார் தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் வேலைகளைத் துரிதப்படுத்தினார். கூடவே, மேடையில் விவேக் பேசிய பேச்சு குறித்து வழக்கறிஞர்கள் மூலமாக சசிகலாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். விவேக்கின் பேச்சுகளால் உக்கிரமாகிவிட்டார் சசிகலா.

தன்னை சந்திக்க வந்தவர்களிடம்,`நல்லதோ கெட்டதோ டி.டி.வி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும். ஆனால், இன்றைக்குக் கட்சியை நடத்துவதற்கு அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். டி.டி.வி-யின் மனம் கோணாமல் டிவியை நடத்துமாறு நான் விவேக்கிடம் கூறியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது தனியாக ஒரு சேனலை வாங்கும் அளவுக்கான நெருக்கடியை நோக்கி தினகரனை ஏன் தள்ள வேண்டும். ஏற்கெனவே அவர் தேர்தல் தோல்வியால் வேதனையில் இருக்கிறார். அப்படிப்பட்டவரை நம்முடைய ஆட்களே இப்படித் துன்புறுத்தலாமா?' எனக் கோபப்பட்டவர், `இந்த விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்' என வழக்கறிஞர்களிடம் கூறியிருக்கிறார்.

t.t.v.Dinakaran
t.t.v.Dinakaran

இதையே மையமாக வைத்து, `விவேக்கை ஜெயா டிவியை விட்டு வெளியேற்றிவிட்டார்கள்' எனத் தகவல் பரவியது. இதனால் வேதனைப்பட்ட விவேக், `என்னுடைய விளக்கத்தை சின்னம்மா கேட்கட்டும். அவருக்கு விரிவாகப் பதில் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நான் விலக வேண்டும் எனச் சின்னம்மா விரும்பினால், நிச்சயமாக விலகிக்கொள்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பணரீதியாக அனைத்துக் கணக்குகளையும் முறையாக வைத்திருக்கிறேன்' என உறவுகள் வட்டாரத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஜெயா டிவியில் நடக்கும் ஆடு புலி ஆட்டம் குறித்துப் பேசும் மன்னார்குடி உறவுகள் சிலர், ``இந்த விவகாரத்தில் தினகரன் வெற்றிபெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். `விவேக் வெளியேறவில்லை, நாங்களே வெளியேற்றிவிட்டோம்' எனத் தகவலைப் பரப்புகின்றனர். சசிகலா சொந்தங்கள் அனைவரையும் ஒதுக்கிவிட்டார் தினகரன்.

Parappana agrahara prison
Parappana agrahara prison

தற்போது இருக்கும் ஒரே நபர் விவேக் மட்டும்தான். அவரையும் சசிகலாவின் குட்புக்கில் இருந்து நீக்கும் வேலைகளைக் கச்சிதமாக முடித்துவிட்டார். `நான் பார்த்துக்கொள்கிறேன்' எனச் சின்னம்மா கூறிய வார்த்தைகளையும் `நான் விலகிக் கொள்கிறேன்' என விவேக் கூறிய வார்த்தைகளையும் முடிச்சுப் போட்டு, `விவேக் நீக்கம்' என வாட்ஸ்அப்பில் தகவலைப் பரப்பிவிட்டனர்" என்கின்றனர் விரிவாக.