Published:Updated:

மாயாவதிக்கு அடுத்த சிக்கல்! - சகோதரருக்கு பினாமியின் பெயரில் 400 கோடி

விஷ்ணுராஜ் சௌ

மாயாவதி சகோதரர் மீதான பினாமி பெயரில், சொத்து குவித்தது தொடர்பான குற்றச்சாட்டு, ‘ RS 400 ‘ என்றபெயரில் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகிவருகிறது.

மாயாவதி
மாயாவதி

பிரதமர்களைத் தீர்மானிக்கும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், எதிரும்புதிருமாக இருந்த சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து பெரும் எதிர்பார்ப்புகளோடு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. ஆனாலும் தோல்வியே வசப்பட்டது.

மாயாவதி
மாயாவதி

இந்நிலையில், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் அவரது சகோதரர் ஆனந்த் குமார், பினாமியின் பெயரில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து சேர்த்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, மாயாவதிக்கு அடுத்த அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்திய அரசியலில் நிலவிவரும் வாரிசு அரசியல் முறையைக் கடுமையாக எதிர்த்த அரசியல்வாதிகளில் மாயாவதியும் ஒருவர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சகோதரர் ஆனந்த் குமாரை அரசியலுக்குக் கொண்டுவந்து, பகுஜன் சமாஜ் கட்சியில் பொறுப்புகளையும் வழங்கினார். ஆனால், அதனை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட கட்சிப் பொறுப்பிலிருந்து ஆனந்த் குமார் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த மாதம் ஆனந்த் குமார், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில், ஆனந்த் குமார் மற்றும் அவருடைய மனைவிக்கு பினாமிகளின் பெயரில், டெல்லி அருகே நொய்டாவில் 7 ஏக்கர் பரப்பளவுகொண்ட 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தான அதிகாரபூர்வமான அறிவிப்பு, கடந்த 16-ம் தேதி டெல்லி பினாமி தடைப் பிரிவால் வெளியிடப்பட்டது. பினாமி சொத்துகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

மாயாவதி
மாயாவதி

அப்போது, இந்த சொத்துகளின் விவரங்கள் குறித்து வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆனந்த் குமாருடைய சொத்துகள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய நிறுவனங்களின்மீது வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகின்றனர். இந்தப் பினாமி சொத்துக்குவிப்பு தொடர்பான குற்றச்சாட்டு, இந்தியா முழுமைக்கும் பெரிய விவாதப் பொருளாக ஆகியுள்ளது. இந்த நிலையில், இது சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக, ‘RS 400‘ என்ற ஹேஷ் டேக், சமூக வலைதளங்களிலும் டிரெண்ட் ஆகிவருகிறது.