என்.எஸ்.இ-யின் (NSE - National Stock Exchange of India Limited) தலைவராக 2013 - 2016-ம் காலகட்டத்தில் இருந்து, பின்னர் பதவி விலகிய சித்ரா ராமகிருஷ்ணாவுக்குச் சொந்தமான இடங்களில் தற்போது ஐ.டி ரெய்டு நடக்கிறது.
என்.எஸ்.இ-யின் தலைவராக இருந்தபோது, சித்ரா ராமகிருஷ்ணா செய்த குற்றங்களைப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை நிறுவனமான செபி இப்போது தெளிவாக விசாரித்து தகவல்களை வெளியிட்டிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கம்பெனியின் முக்கியமான முடிவுகளை, இமயமலையில் வாழ்வதாகக் கூறப்படும் முகம் தெரியாத யாரோ ஒரு சாமியாரின் அறிவுரையைக் கேட்டு அவர் எடுத்திருப்பதாகவும், இந்த விவரங்கள் அனைத்தையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று தன் விசாரணை அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது செபி. இதுவரையில் அந்த முகம் தெரியாத சாமியார் யார் என்பதும் மர்மமாகவே உள்ளது.
மேலும் 2013-ம் ஆண்டு என்.எஸ்.இ முக்கியமான பதவியில் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்திருக்கிறார் சித்ரா. பங்குச் சந்தை செயல்பாடுகள் பற்றித் துளியும் தொடர்பில்லாத நபர் இவர் என்றும், இவர் அந்தப் பதவியை வகிப்பதற்கான தகுதி கொண்டவர் அல்லர் என்றும் சொல்லப்படுகிறது.

என்.எஸ்.இ-யின் தலைமைப் பதவியில் இவரை நியமிக்கும்படி, இமயமலை சாமியார் கூறியதாலேயே நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றச்சாட்டுகள் பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டு வரும் நிலையில், வருமான வரித்துறையால் தற்போது அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.