தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்ததில் 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றியது. மேலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களை தி.மு.க கூட்டணி வென்றுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க., மாநகராட்சியில் 15 வார்டுகள், நகராட்சியில் 56 வார்டுகள் மற்றும் பேரூராட்சியில் 230 வார்டுகள் என மொத்தம் 301 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ``தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி பா.ஜ.க என்ற இடத்தைப் பெற்றுவிட்டது" எனத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, `தமிழ்நாட்டின் மூன்றாவது பெரியக் கட்சி என பா.ஜ.க தலைவர் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. மேலும், பா.ஜ.க மூன்றாவது பெரியக் கட்சி எனக் கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.
சென்னையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்ற பா.ஜ.க காங்கிரஸை விடப் பெரியக் கட்சி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். இனியாவது காங்கிரஸோடு ஒப்பிடுவதை பா.ஜ.க நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் பா.ஜ.க எதிர்ப்புகளை அவர்களால் ஒருபோதும் எதிர்க்கொள்ளவே முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.