Published:Updated:

தெலங்கானாவில் ஆபரேஷன் லோட்டஸ்... எதிர்கொள்வாரா கே.சி.ஆர்?!

சந்திரசேகர ராவ்

டி.ஆர்.எஸ் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க பக்கம் இழுப்பதற்காக தலா ரூ.100 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்திருக்கும் விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானாவில் ஆபரேஷன் லோட்டஸ்... எதிர்கொள்வாரா கே.சி.ஆர்?!

டி.ஆர்.எஸ் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க பக்கம் இழுப்பதற்காக தலா ரூ.100 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்திருக்கும் விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சந்திரசேகர ராவ்

`மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்து, அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது பா.ஜ.க-வின் ஸ்டைல்’ என்கிற விமர்சனம் பா.ஜ.க மீது இருக்கிறது. அந்த வகையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ-க்களுக்கு லஞ்சம் கொடுத்து, தன் பக்கம் இழுப்பதற்கு பா.ஜ.க முயன்றதாகப் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. தெலங்கானாவிலும் ’ஆபரேஷன் லோட்டஸ்’ பா.ஜ.க-வால் தொடங்கப்பட்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

தேஜஸ்வி - சந்திரசேகர ராவ் - நிதிஷ் குமார்
தேஜஸ்வி - சந்திரசேகர ராவ் - நிதிஷ் குமார்

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவரும் தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ், 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று பேசிவருகிறார். இதையொட்டி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு மாற்றாக தேசியக் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகக் கூறிவந்த சந்திரசேகர ராவ், விஜயதசமி நாளான அக்டோபர் 5-ம் தேதி தனது கட்சியின் பொதுக்குழுவை ஹைதராபாத்தில் கூட்டினார். அந்தக் கூட்டத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், ‘தெலங்கானா ராஷ்டிர சமிதி’ என்ற கட்சியின் பெயர், ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சந்திரசேகர ராவ் அறிவித்தார். `டி.ஆர்.எஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்த கட்சி, இப்போது `பி.ஆர்.எஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

துரைமுருகன்,  ஸ்டாலின், சந்திரசேகர ராவ், டி.ஆர்.பாலு
துரைமுருகன், ஸ்டாலின், சந்திரசேகர ராவ், டி.ஆர்.பாலு

இனி, `பாரத் ராஷ்டிர சமிதி’ என்று தமது கட்சி அழைக்கப்படும் என்றும், இது தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, ‘மதரீதியாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அரசியல் ஆதாயம் காணும் பா.ஜ.க-வுக்கு மாற்றாக, பாரத் ராஷ்டிர சமிதி இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நல்லாட்சிக்கான மாடலாக தெலங்கானா மாநில ஆட்சி இருக்கிறது என்பதை தேசிய அளவில் பிரசாரம் செய்யவிருப்பதாக அந்தக் கட்சி முடிவெடுத்தது.

பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை சந்திரசேகர ராவ் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில்தான், அவருடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை இழுப்பதற்கு பா.ஜ.க லஞ்சம் கொடுத்ததாக ஒரு விவகாரம் கிளம்பியிருக்கிறது. பா.ஜ.க-வில் சேர்ந்தால், அரசு ஒப்பந்தங்கள் தருவதுடன் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தலா ரூ.100 கோடி தருவதாக டீல் பேசியிருக்கிறார்கள் என்று டி.ஆர்.எஸ் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஷ்வர்தன் ஆகிய நான்கு எம்.எல்.ஏ-க்களுக்கு தலா ரூ.100 கோடி லஞ்சமாகக் கொடுப்படவிருந்தது என்று தெலங்கானா காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

தற்போது நல்கொண்டா மாவட்டத்திலுள்ள முனுகொடே சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அக்டோபர் 31-ம் தேதி வரவிருக்கிறார். அவரது முன்னிலையில் நான்கு எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்று பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

“ரோஹித் ரெட்டியின் பண்ணை வீட்டில்வைத்து, நான்கு எம்.எல்.ஏ-க்களுக்கு பா.ஜ.க தரப்பு லஞ்சம் கொடுக்கிறது என்ற தகவலை டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் காவல்துறைக்கு தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து, ரோஹித் ரெட்டியின் பண்ணை வீட்டுக்குச் சென்றபோது, நான்கு எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-வுக்கு உதவக்கூடிய சிலரும் அங்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள்” என்று சைபராபாத் காவல் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா கூறியிருக்கிறார். இது தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் பா.ஜ.க-வின் முன்னாள் எம்.எல்.சி-யான ராமச்சந்திர ராவ், ‘இது ஓர் அரசியல் நாடகம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

பாரத் ஜோடோ யாத்ராவை தெலங்கானாவில் ராகுல் காந்தி தொடங்கிய நேரத்தில், இந்த விவகாரம் மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஒருவேளை எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க முயல்கிறது என்பது உண்மை என்கிற பட்சத்தில், அதை சந்திரசேகர ராவ் எப்படி எதிர்கொள்வார் என்கிற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது. மொத்தம் 119 தொகுதிகளைக்கொண்ட தெலங்கானாவில், பி.ஆர்.எஸ் கட்சிக்கு 103 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். சந்திரசேகர ராவை வீழ்த்துவது எளிதல்ல. ஆனாலும், தனக்கு எதிரான பா.ஜ.க-வின் காய்நகர்த்தல்களை அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.