Published:Updated:

IT Raid: சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி - டெல்லி ‘ஆட்டம்’ ஆரம்பமா?!

செந்தில் பாலாஜி, ஐ.டி ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
செந்தில் பாலாஜி, ஐ.டி ரெய்டு

“செந்தில் பாலாஜி பற்றி கூறுவதற்கு அண்ணாமலை தேவையில்லை. ஏனென்றால் ஸ்டாலின் அவர்களுடையே வாதங்களே போதும்” - நாராயணன் திருப்பதி

Published:Updated:

IT Raid: சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி - டெல்லி ‘ஆட்டம்’ ஆரம்பமா?!

“செந்தில் பாலாஜி பற்றி கூறுவதற்கு அண்ணாமலை தேவையில்லை. ஏனென்றால் ஸ்டாலின் அவர்களுடையே வாதங்களே போதும்” - நாராயணன் திருப்பதி

செந்தில் பாலாஜி, ஐ.டி ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
செந்தில் பாலாஜி, ஐ.டி ரெய்டு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (மே 26) திடீரென சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். கரூர், கோவை உள்ளிட்ட பல இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக, மாநகராட்சிக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் ரெய்டுகள் நடக்கும் இடங்களில் குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

இதே போன்று ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டுக்கு அதிகாரிகள் சோதனையிட வந்தனர். அப்போது, காரிலிருந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு ஓர் அதிகாரி வீட்டுக்குள் நுழையும்போது அங்கு கூடியிருந்த தி.மு.க தொண்டர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி `பையில் என்ன இருக்கிறது' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரியின் காரை உடைத்துச் சேதப்படுத்தினர். இதனால், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடாமலேயே திரும்பிச் சென்றனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மணி, காளிபாளையம் பெரியசாமி ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ள வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தடுத்து அனுப்பினர். இதனால், அந்தப் பகுதிகளில் சோதனை நடத்தாமல், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். அதேபோல கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், நண்பர்களுக்குச் சொந்தமான 22 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயனின் வீடு, அலுவலகங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்திவருகின்றனர்.

Senthil Balaji - செந்தில் பாலாஜி - ஐ.டி ரெய்டு
Senthil Balaji - செந்தில் பாலாஜி - ஐ.டி ரெய்டு

பொள்ளாச்சி அருகேயுள்ள காளியாபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்தின் பண்ணை வீடு, கிணத்துக்கடவு அருகேயுள்ள பணப்பட்டியிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினருடைய கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். கரூரில் தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருமானவரிச் சோதனையை அதிகாரிகள் நிறுத்தும் நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனைக்கு வந்த அதிகாரிகளை தி.மு.க-வினர் தடுத்ததால் பாதுகாப்புக் கேட்டு அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவமும் நடந்தது. கரூரில் 22 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதில் ஒன்பது இடங்களில் சோதனை நடைபெறவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தி.மு.க அரசு 2021-ம் ஆண்டு ஆட்சியமைத்ததிலிருந்து தமிழ்நாட்டில் தி.மு.க அமைச்சர் ஒருவரது இடங்களில் நடைபெறும் முதல் வருமான வரிச் சோதனை இதுவாகும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், பா.ஜ.க அரசு அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது போன்ற ரெய்டுகளை நடத்துவதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

தி.மு.க அமைச்சரவையில் செந்தில் பாலாஜி பவர்ஃபுல் அமைச்சராக வலம் வருகிறார். குறிப்பாக தேர்தல் காலங்களில் களத்தில் செந்தில் பாலாஜியின் பணிகளும் செயல்பாடுகளும் தீவிரமாக இருக்கும். இதை முடக்கும் விதமாகவே டெல்லி ஐ.டி ரெய்டு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்திருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

ரெய்டு தொடர்பாக அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘முதல்வரின் வெளிநாடு பயணம் தொடர்பான செய்திகளைத்  திசை திருப்பவே பா.ஜ.க ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை முடக்கவே இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. எத்தனை ரெய்டுகள் வந்தாலும், என்ன முடிவுகள் வந்தாலும் தி.மு.க-வுக்குக் கவலையில்லை. கர்நாடக மாநிலத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இணையும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது பா.ஜ.க” என்கிற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அதோடு, ‘அண்ணாமலை சொல்கிறார், சொன்னதுபோல் ரெய்டு நடக்கிறது. அவர் என்ன சி.பி.ஐ இயக்குநரா?’ என்கிற கேள்வியையும் முன்வைத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ``வருமான வரிச் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும். அட்வான்ஸாக வரிகள் கட்டிவருகிறோம். ஒருவேளை வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகக் குறிப்பிட்டால் அதையும் சரிசெய்யத் தயாராக இருக்கிறோம். 2006-க்குப் பிறகு என் பெயரிலோ, என் குடும்பத்தினர் பெயரிலோ எந்த ஒரு புதிய சொத்துகளும் வாங்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

ஏற்கெனவே பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல பா.ஜ.க நிர்வாகிகள் மேடைதோறும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தான குற்றச்சாட்டுகளையும், விரைவில் அவர் சிறைக்குச் செல்வார் என்று எச்சரித்தும் பேசிவருகிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க, இன்று நடைபெறும் ரெய்டில் முழுக்க முழுக்க பா.ஜ.க-வின் கைகளே இருக்கிறது என்கிற வலுவான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் சில தி.மு.க நிர்வாகிகள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “செந்தில் பாலாஜி ஏற்கெனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலைக்காக லஞ்சம் வாங்கிய விவகாரத்தை, உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அதோடு அவரின் ஊழல் விவரங்களை இன்றைய முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி சொந்த ஊரிலேயே மிகத் தெளிவாக எடுத்துறைத்திருக்கிறார். செந்தில் பாலாஜி பற்றி கூறுவதற்கு அண்ணாமலை தேவையில்லை. ஸ்டாலின் அவர்களுடையே வாதங்களே போதும்.

IT Raid: சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி - டெல்லி ‘ஆட்டம்’ ஆரம்பமா?!

அப்படிப்பட்ட சூழலில் டாஸ்மாக் ஊழல், மின்துறை ஊழல் குறித்து தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். இந்தச் சூழலில் அடிப்படை ஆதாரம் இல்லாமல் எந்தவோர் இடத்திலும் வருமான வரித்துறையானது சோதனையில் ஈடுபடாது. அப்படியிருக்க, வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கும் அளவுக்கு தன் அதிகார துஷ்பிரயோகத்தை, அகங்காரத்தை செந்தில் பாலாஜி இன்று அரங்கேற்றியிருப்பதிலிருந்தே மிகப்பெரிய ஊழலை அவர் செய்திருக்கிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. செந்தில் பாலாஜி தன் வேலையை ஒழுங்காகச் செய்யாததினால், வருமான வரித்துறை தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறது. இதில் பா.ஜ.க அழுத்தம், அண்ணாமலை அழுத்தம் என்று சொல்வதெல்லாம் வீணான கதை” என்றார்.