Published:Updated:

கறுப்புப் பணம்... அதிகார துஷ்பிரயோகம்..?- சிவக்குமாரை அடுத்து சிக்கும் முன்னாள் அமைச்சர்!

தன் சொந்த மாவட்டமான துமகுருவில், சித்தார்த்தா என்ற பெயரில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை நடத்திவருகிறார்.

ஜி.பரமேஸ்வரா
ஜி.பரமேஸ்வரா ( twitter )

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் வீடுகளில், சமீபத்தில் மிகப்பெரிய ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும், அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவருமான பரமேஸ்வர கங்காதரையா என அழைக்கப்படும் ஜி.பரமேஸ்வராவின் இல்லம் மற்றும் கல்லூரிகளில் இன்று காலை 6.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர். கர்நாடகாவில் எடியூரப்பா அரசு அமைந்த பிறகு, இன்று குளிர்கால சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.

ஜி.பரமேஸ்வரா
ஜி.பரமேஸ்வரா
twitter

இந்தச் சூழ்நிலையில் ரெய்டு நடத்தப்பட்டுவருவது கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கர்நாடக காங்கிரஸின் மிக முக்கியப் பிரமுகர் ஜி.பரமேஸ்வரா என்னும் ஜி.பி. இரண்டு முறை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்த ஒரே நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். பரமேஸ்வரா, சித்தராமையா அரசில் துணை முதல்வராகவும், அதற்கு முன்பு ஆறு முறை அமைச்சராகவும் இருந்தவர். சித்தராமையாவுக்கு அடுத்து, கர்நாடக காங்கிரஸின் முகமாக அறியப்பட்ட ஜி.பி, முதல்வர் ரேஸிலும் இருந்தவர். தன் சொந்த மாவட்டமான துமகுருவில், சித்தார்த்தா என்ற பெயரில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை நடத்திவருகிறார்.

எடியூரப்பா அடித்தது சிக்ஸரா... கேட்சா? தகிக்கும் கர்நாடக அரசியல்

தன் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம், மெடிக்கல் சீட்டுக்காகப் பல கோடி ரூபாய் பணம் நன்கொடையாக வாங்கப்பட்டதாகவும், அதைத் தனது கல்லூரிகளின் பெயரில் உள்ள டிரஸ்ட்டுகளில் கறுப்புப்பணமாக முதலீடு செய்துள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக, கர்நாடக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ``பரமேஸ்வரா, தனது சுய லாபத்திற்காகத் துணை முதல்வர் பதவி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திக்கொண்டார் என்று வந்த குற்றச்சாட்டை அடுத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது" என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.பரமேஸ்வரா
ஜி.பரமேஸ்வரா
twitter

அதன்படி, பெங்களூருவில் உள்ள பரமேஸ்வராவின் வீடு, துமகுருவில் உள்ள கல்லூரி என அவருக்குச் சொந்தமான 30 இடங்களில் சோதனை நடந்துவருகிறது. கல்லூரிகளில் ரெய்டு என்ற செய்தி அறிந்தவுடன் பரமேஸ்வரா, துமகுரு விரைந்துள்ளார். அந்த நேரத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று ரெய்டு நடத்தி வருகின்றனர்.

Vikatan

பரமேஸ்வராவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வரும் அதே வேளையில், மற்றொரு காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் எம்.பி-யுமான ஆர்.எல்.ஜலப்பாவுக்குச் சொந்தமான மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைதுக்குப் பிறகு, கர்நாடக காங்கிரஸின் முதல்கட்ட தலைவர்களில் ஒருவரான பரமேஸ்வரா வீட்டில் ரெய்டு நடத்தப்படுவது, அம்மாநில அரசியலில் அடுத்த புயலைக் கிளப்பியுள்ளது. ரெய்டு குறித்துப் பேசியுள்ள பரமேஸ்வரா, ``ரெய்டைப் பற்றி எந்தத் தகவலும் வரவில்லை. அதனால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

ஜி.பரமேஸ்வரா
ஜி.பரமேஸ்வரா
twitter

எங்கள் தரப்பிலிருந்து ஏதேனும் தவறு இருந்தால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்'' எனப் பேசியுள்ளார். இதேபோல், ரெய்டுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையாவோ, ``இந்தத் தொடர் ஐ.டி ரெய்டுகள் மோசமான நம்பிக்கையில் அரசியல் ரீதியாக நடத்தப்படுகிறது. கொள்கை மற்றும் ஊழல் பிரச்னைகளில் எங்களை எதிர்கொள்ளத் தவறியதால், அவர்கள் கர்நாடகக் காங்கிரஸ் தலைவர்களை மட்டும் குறிவைக்கிறார்கள். இதுபோன்ற தந்திரங்களை எல்லாம் நாங்கள் கண்டுகொள்ளப்போவதில்லை" என்று கூறியுள்ளார்.

`3 ஆண்டுகளுக்கெல்லாம் இந்த ஆட்சி தாங்காது!’ - சித்தராமையா ஆரூடம்