Published:Updated:

`மீண்டும் ரெய்டு; வீட்டுக்குப் பின்புறம் வீசப்பட்ட பணப்பை'! - வேலூர் தி.மு.க பிரமுகரிடம் ரூ.27 லட்சம் பறிமுதல்

ஏற்கெனவே நாடாளுமன்றப் பொதுதேர்தலின் போது அதிகமான பணப்புழக்கம் புகார் காரணமாக வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை சோதனை

வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை

வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உட்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். ஐ.டி ரெய்டில், துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாக ரூ.10.57 கோடி சிக்கியதால், வேலூர் தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்துசெய்தது. இதைத்தொடர்ந்து, வேலூர் தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றத்தை அணுகிய ஏ.சி.சண்முகம், தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டார்.

`மீண்டும் ரெய்டு; வீட்டுக்குப் பின்புறம் வீசப்பட்ட பணப்பை'! - வேலூர் தி.மு.க பிரமுகரிடம் ரூ.27 லட்சம் பறிமுதல்

அதேநேரத்தில் வேலூர் ரெய்டு குறித்து வருமான வரித் துறை, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை வைத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிகள் தொகுதி முழுவதும் அமல்படுத்தப்பட்டு வேலைகள் தொடங்கியுள்ளன. மீண்டும் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர். தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதனால் வேலூர் தேர்தல் களம் மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட அலமேலுமங்காபுரம் புதுவசூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது வீட்டில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து பிற்பகல் முதல் சோதனை நடத்திவருகிறார்கள். ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்த அதிகாரிகள் ஏழுமலையின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவைப் பார்த்ததும் பணப்பையை வீட்டுக்குப் பின்புறம் ஏழுமலை வீசியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அதிகாரிகள் அந்தப் பையைக் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் ரூ.27.76 லட்சம் பணமாக இருக்க, அதைப் பறிமுதல் செய்து ஏழுமலையிடம் தீவிர விசாரணையிலும் தொடர் சோதனையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட சோதனையில் அந்தப் பணம் தன்னுடையதுதான் என்று ஏழுமலை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழுமலையின் வீடு
ஏழுமலையின் வீடு

ஏழுமலை ம.தி.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் சேர்ந்து முக்கிய பிரமுகராக வலம்வரும் வசூர் நடராஜன் என்பவரின் சகோதரர். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். ஏழுமலையும் காங்கிரஸிலிருந்து தி.மு.கவில் இணைந்தவர் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே நாடாளுமன்றப் பொதுதேர்தலின் போது அதிகமான பணப்புழக்கம் புகார் காரணமாக வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது தொகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.