Published:Updated:

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பின்னணி... ரூ.600 கோடி சொத்து குவித்தாரா அன்பழகன்?

அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
அன்பழகன்

நெடுஞ்சாலையை கிராமத்துடன் இணைக்கும் குறுகிய பாதையில் சென்றால் பிரமாண்டமாக வரவேற்கிறது, கே.பி.அன்பழகனின் பங்களா.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பின்னணி... ரூ.600 கோடி சொத்து குவித்தாரா அன்பழகன்?

நெடுஞ்சாலையை கிராமத்துடன் இணைக்கும் குறுகிய பாதையில் சென்றால் பிரமாண்டமாக வரவேற்கிறது, கே.பி.அன்பழகனின் பங்களா.

Published:Updated:
அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
அன்பழகன்

ஊழல் புகாரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை வரிசைகட்டி ரெய்டு நடத்திவருகிறது தி.மு.க அரசு. எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரைத் தொடர்ந்து ஆறாவது நபராக தருமபுரி மாவட்டத்தில் கோலோச்சும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனை வளைத்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.

அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அமைதியான பாணியில் அரசியல் செய்தாலும், தருமபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க-வை வலுவாகக் கட்டமைத்து வைத்திருக்கிறார். அதனாலேயே, தி.மு.க தனிப்பெரும்பான்மையாக ஆட்சியில் அமர்ந்தாலும், அந்தக் கட்சியால் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றிபெற முடியவில்லை. அ.தி.மு.க மூன்று தொகுதிகளையும், அதன் கூட்டணியிலிருந்த பா.ம.க இரண்டு தொகுதிகளையும் மொத்தமாக அள்ளின. இதற்கு அன்பழகனின் தேர்தல் யுக்தியே காரணம் என்று கூறப்பட்ட நிலையில்தான், தற்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அன்பழகன் அமைச்சராக இருந்தபோது எழுந்த ஊழல் புகாரைத் தூசுதட்டியிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பின்னணி... ரூ.600 கோடி சொத்து குவித்தாரா அன்பழகன்?

‘அன்பழகன் அமைச்சராக இருந்த 23.05.2016 தொடங்கி 06.05.2021 காலகட்டத்தில் ஊழலில் ஈடுபட்டதோடு, வருமானத்துக்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்திருக்கிறார்’ என்று சமீபத்தில் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர்மீதும் வழக்கு பதிந்தனர். இதையடுத்து, ஜனவரி 20-ம் தேதி விடியற்காலை 5 மணிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், சென்னை ஆகிய இடங்களில் அன்பழகனுக்குச் சொந்தமான 57 இடங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் அதிரடியாகச் சோதனை நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி செல்லும் மெயின் ரோட்டில் இருக்கிறது கெரகோடஅள்ளி கிராமம். நெடுஞ்சாலையை கிராமத்துடன் இணைக்கும் குறுகிய பாதையில் சென்றால் பிரமாண்டமாக வரவேற்கிறது, கே.பி.அன்பழகனின் பங்களா. இந்த பங்களாவுக்கு இரண்டு கார்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டீம், தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனைத் தட்டி எழுப்பியது. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ரெய்டு சம்பவங்களில் நடந்ததுபோல இவருக்கு முன்கூட்டியே எதுவும் தகவல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. திடீர் ரெய்டால் அன்பழகன் அதிர்ச்சியடைந்தாலும், சுதாரித்துக்கொண்டு சோதனைக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்திருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பின்னணி... ரூ.600 கோடி சொத்து குவித்தாரா அன்பழகன்?

வீட்டைச் சல்லடை போட்டு அலசியது லஞ்ச ஒழிப்புத்துறை டீம். ஊர் முழுவதும் சொந்த பந்தம் என்பதால், வீட்டுக்கு முன்பு சில நிமிடங்களில் கூட்டம் சேர்ந்துவிட்டது. அரக்க பரக்க வந்து சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊடகங்களிடம் இரட்டை விரல்களைக் காட்டி போஸ் கொடுத்தனர். கால்கடுக்க நின்றிருந்தவர்களுக்குக் காலை 8 மணியளவில் சுடச்சுட காபியும், பிஸ்கட்டுகளும் அன்பழகன் தரப்பிலிருந்து வழங்கப்பட்டன. பிறகு வெண்பொங்கல், சாம்பார், கிச்சடி ஆகியவற்றையும் சுடச்சுட பாக்கு மட்டையில் வைத்துக் கொடுத்தனர். சோதனையின்போது, வீட்டுக்குள் இருந்த அன்பழகன் வெளியில் தலைகாட்டவில்லை. அவரின் மனைவி, மகன்கள்தான் போர்டிக்கோ வரை வந்து எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றனர். மதியம் 1 மணியானதும் குஸ்கா ரெடியாகி வந்தது. சிறிது நேரத்தில் அன்பழகனின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், முல்லைவேந்தன் வந்தனர்.

இன்னொரு பக்கம் அதே கிராமத்தில் அன்பழகனின் உறவினர்கள் ஐந்து பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. கெரகோடஅள்ளி கிராமத்தில், தாத்தா தானப்ப கவுண்டர் பெயரில் பள்ளி நடத்துகிறார் அன்பழகன். அதற்கு எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கும் அவரது குடும்பத்துக்குச் சொந்தமானதுதான். அங்கு சோதனை நடத்தப்படாவிட்டாலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தருமபுரி அ.தி.மு.க நகரச் செயலாளர் பூக்கடை ரவி, பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி உட்பட அன்பழகனுடன் தொடர்புடைய பலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அன்பழகனுடன் நட்பு பாராட்டும் கரூரைச் சேர்ந்த கனிம வள அதிகாரி ஒருவரும் சோதனை வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனிடம் பேசினோம்... ‘‘பொங்கல் பரிசுத்தொகுப்பில் கலப்படம்... ஊருக்கு ஊர் மக்கள் கொந்தளிக்கிறார்கள். இந்தப் பிரச்னையை திசைதிருப்புவதற்காகத்தான் இந்த ரெய்டை நடத்தியிருக்கிறார்கள். ஸ்டாலினுடைய நோக்கமே, ‘நாங்கள் இவ்வளவு அயோக்கியத்தனம் பண்றோம். பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்திருக்கிறோம். இதை ஏன்டா கேட்காமல் வீட்டில் தூங்குகிறீர்கள்... வெளியில் வந்து அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்யுங்கள்’ என்று அ.தி.மு.க-வினரை உசுப்பேற்றுவதுதான்’’ என்றார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பின்னணி... ரூ.600 கோடி சொத்து குவித்தாரா அன்பழகன்?

இந்தச் சோதனையில் பணம், நகைகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து வழக்குக்குத் தொடர்புடைய ஆவணங்களை மட்டும் கைப்பற்றியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

தூசுதட்டப்பட்ட பழைய வழக்கு!

தருமபுரி மாவட்டம், மோளையானூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் எதிரொலியாகத்தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்தச் சோதனையை நடத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. ‘கே.பி.அன்பழகன் தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தி, 800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகளை தன் நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கியிருக்கிறார். மேலும், தனது குடும்பத்தினர் பெயர்களில் நிலங்கள், கட்டடங்கள், மருத்துவமனைகள் என 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் பினாமிகளின் பெயர்களில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இது தொடர்பாக அவர்மீது வழக்கு பதிவு செய்யக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை’’ என்பதுதான் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கின் சாரம்சம். கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போதே தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “கிருஷ்ணமூர்த்தி புகாரில் முகாந்திரம் இருக்கிறது. ஆவணங்கள் திரட்டப்படுவதால் கால அவகாசம் வேண்டும்’’ என்று கோரினார். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது கே.பி.அன்பழகனை லஞ்ச ஒழிப்புத்துறை நெருக்கியிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பின்னணி... ரூ.600 கோடி சொத்து குவித்தாரா அன்பழகன்?

“ஓனர் நானில்லை!” - பொள்ளாச்சி புலம்பல்...

கே.பி.அன்பழகனின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர் என்.சிவக்குமார். இவருக்கு சென்னை நுங்கம்பாக்கம், கதீட்ரல் கார்டன் பகுதியிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வீடு உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இவரது வீட்டில் வாடகைக்குக் குடியேறியிருக்கிறார். அன்பழகன் தொடர்புடையவர்கள் ரெய்டு பட்டியலில் சிவக்குமாரின் முகவரியும் இருந்திருக்கிறது. அதனால், அன்றைய தினம் காலை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த அபார்ட்மென்ட் வீட்டின் கதவைத் தட்டியபோது, கதவைத் திறந்த ஜெயராமன் என்ன ஏதுவென்று புரியாமல், “வீட்டு ஓனர் சிவக்குமார்தான். நான் தற்காலிகமாகக் குடியிருக்கிறேன்” என்று சொல்லியும் போலீஸார் கேட்காமல் வீட்டைச் சல்லடை போட்டுத் தேடியிருக்கிறார்கள். ஆனால், அங்கு எதுவும் கிடைக்கவில்லை! தகவலறிந்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்ற மாய பிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்காகவே இது போன்ற செயல்களை ‘விடியா’ தி.மு.க அரசு செய்கிறது’’ என்றார் காட்டமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism