Published:Updated:

கோவைச் சம்பவம்: "காவல்துறையிடமிருந்து வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது தவறான நிர்வாக முடிவு"- சீமான்

சீமான்

"காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பே இந்த வழக்கை அவசர அவசரமாக தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன வந்தது?" - சீமான்

கோவைச் சம்பவம்: "காவல்துறையிடமிருந்து வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது தவறான நிர்வாக முடிவு"- சீமான்

"காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பே இந்த வழக்கை அவசர அவசரமாக தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன வந்தது?" - சீமான்

Published:Updated:
சீமான்

கோவை உக்கடம், கோட்டைமேட்டிலுள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு அருகில் கார் ஒன்று திடீரென்று வெடித்துச் சிதறிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்துவரும் காவல்துறை பல்வேறு தகவல்களைக் கண்டறிந்துவருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்குப் பரிந்துரை செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

முதல்வரின் இந்த உத்தரவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கோவை உக்கடம் அருகே, வாகனத்தில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை, மிகத் தவறான நிர்வாக முடிவாகும்.

தேசிய புலனாய்வு முகமை, பா.ஜ.க-வின் கிளைப் பிரிவுபோல செயல்பட்டு, இஸ்லாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநில தன்னாட்சியென முழங்குகிற தி.மு.க அரசு, தேசிய புலனாய்வு முகமையின் வசம் இந்த வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

என்.ஐ.ஏ
என்.ஐ.ஏ

வன்முறைச் செயலில் ஈடுபட்டு, சமூக அமைதியைக் குலைக்க முனைவோர் எவராயினும், அவர்களைச் சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேசமயம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை குற்றவாளிகளாகச் சித்திரிக்கும் போக்கு என்பது மிக ஆபத்தானது. விபத்து குறித்த காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே, இந்தக் கோர நிகழ்வுக்கு மதச் சாயம் பூசுவது அப்பட்டமான மதக் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சம்பவம் நடந்தவுடன் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, உரிய ஒத்துழைப்பு வழங்கிவரும் இஸ்லாமிய மக்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கோடு, மதவாதிகளால் செய்யப்படும் கருத்துருவாக்கங்களும், கட்டமைப்புகளும் கடும் கண்டனத்துக்குரியவை. காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பே இந்த வழக்கை அவசர அவசரமாக தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன வந்தது... இந்த வழக்கில் பன்னாட்டு தொடர்பு இருக்கும் வாய்ப்பிருக்கிறது எனக் காரணம் கற்பிக்கும் தி.மு.க அரசு, விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பு அத்தகைய முடிவுக்கு எதன் அடிப்படையில் வந்தது?

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

துப்பறிந்து விசாரணை செய்வதில் பெயர் பெற்ற தமிழக காவல்துறையிடமுள்ள வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பதன் மூலம், தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா முதல்வர் அல்லது காவல்துறையின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டாரா... எதற்காக இந்த முடிவு... காவல்துறையின் மீதே மதச்சாயம் பூசி, மாநில உளவுத்துறையின் தோல்வி எனக் குற்றம்சாட்டும் பா.ஜ.க-வின் கூற்றை ஏற்றுக்கொண்டுதான் வழக்கை கைமாற்றிவிடுகிறதா மாநில அரசு?

தன்னாட்சி அதிகாரம்கொண்ட மத்திய புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு, எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ.க அரசு ஏவிவரும் நிலையில் கட்டற்ற அதிகாரத்தைக்கொண்டிருக்கும் தேசிய திறனாய்வு முகமையை, இது போன்ற வழக்குகளில் நுழைய வழிவகை செய்வது மாநிலத்தின் இறையாண்மைக்கு எதிரானது இல்லையா?

சீதல்வாட், சித்திக் கப்பான்,  டெல்டும்டே, ஸ்டான் சுவாமி
சீதல்வாட், சித்திக் கப்பான், டெல்டும்டே, ஸ்டான் சுவாமி

ஸ்டான் சுவாமி, வர வர ராவ், ஆனந்த் டெல்டும்டே போன்ற சமூகச் செயற்பாட்டாளர்கள், பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைதுசெய்யப்பட்டிருப்பதுபோல, இந்த வழக்கில் அப்பாவி இஸ்லாமியர்களும் கைதுசெய்யப்பட்டால்.... அதற்கு யார் பொறுப்பேற்பது?

தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு வாசல் திறந்துவிடுவதுதான் மாநில தன்னாட்சியை கட்டிக் காக்கிற லட்சணமா முதல்வரே... வெட்கக்கேடு! ஆகவே இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து குற்றம் இழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

அண்ணாமலை
அண்ணாமலை

அதேவேளையில், தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கைத் தாரை வார்த்திருப்பதற்கு என்னுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன். இதோடு இக்கொடும் நிகழ்வை அடிப்படையாகவைத்து, மதப் பூசலுக்கு வித்திட்டு அரசியல் ஆதாயம் தேட முயலும் மதவாத சக்திகளின் சூழ்ச்சியை முறியடிக்க ஜனநாயக சக்திகள் அணிதிரள வேண்டுமென வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.