Published:Updated:

ப.சிதம்பரம் கைது... அரசியலில் சகஜமா... பழிவாங்கலா?! - என்ன சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்?

த.கதிரவன்

பி.ஜே.பி-க்கு எதிராக என் அப்பா எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாதவர்கள், கைது நடவடிக்கை என்ற பெயரில், பழிவாங்குகிறார்கள். இதெல்லாம் அரசியலில் சகஜம்!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

ப.சிதம்பரம் கைது விவகாரம் நாடு முழுக்க விவாத அனலைக் கிளப்பிவருகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லியில் நேற்றைய தினம் நள்ளிரவில் சுவர் ஏறிக்குதித்து சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்திருப்பது, அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

`சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கும் விதம் சி.பி.ஐ-யின் மாண்பைக் குலைக்கிறது' என்று ஒரு சாராரும், `இது தேவையான, சாதாரண நடவடிக்கைதான்' என்று ஆளுங்கட்சித் தரப்பினரும் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருக்கின்றனர்.

`சிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்!'- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்திடம் பேசினோம்...

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது..
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது..

``2008-ல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு 2017-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். எங்க ஐயா (ப.சிதம்பரம்)வையும் விசாரித்துவிட்டார்கள். கடந்த 2 வருடங்களில் எனக்கு மட்டுமே 20 முறை சம்மன் அனுப்பி விசாரித்திருக்கிறார்கள். 11 நாள் கஸ்டடியிலும் வைத்துவிட்டார்கள். எனக்கு சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், 4 முறை ரெய்டும் நடத்தி முடித்துவிட்டார்கள். இத்தனைக்குப் பிறகும் சார்ஜ்ஷீட் போடவில்லை என்றால், கேஸே இல்லையென்றுதானே அர்த்தம்? ஆனாலும் தொலைக்காட்சிகளின் வழியே பரபரப்பை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

P Chidambaram
P Chidambaram

2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவுக்கு 2019 ஜனவரியில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. அதன்பிறகு 7 மாதங்கள் கழித்து இப்போது தீர்ப்பு கொடுக்கிறார்கள். 2018 ஜூன் மாதத்துக்குப் பிறகு ஐயாவுக்கு சம்மனே கொடுக்கப்படவில்லையே... ஏன் ஒன்றரை வருடமாக விசாரிக்கவில்லை? 2008-ல் நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவத்தை இன்னும் எத்தனை வருடங்களுக்கு விசாரித்துக்கொண்டே இருக்கப்போகிறார்கள்?

`கணக்கில் காட்டப்படாமல் கோடிக்கணக்கிலான சொத்தை உலகம் முழுக்க வைத்திருக்கிறார்' என்று என்மீது குற்றம் சாட்டுகிறார்கள். நான் இரண்டு முறை தேர்தலில் நின்றிருக்கிறேன். இரண்டு முறையும் என் சொத்துக்கணக்கை முறையாகத் தாக்கல் செய்துவிட்டுத்தானே தேர்தலிலேயே போட்டியிட்டேன்.

P Chidambaram
P Chidambaram

அப்படி கணக்கில் காட்டப்படாத சொத்துகள் என்னிடம் இருந்திருந்தால், என்னைத் தேர்தலில் போட்டியிடவிடாமல் செய்திருக்க வேண்டியதுதானே? ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை. இத்தனைக்கும் கடந்த தேர்தலில், பி.ஜே.பி வேட்பாளரைத்தானே நான் தோற்கடித்தேன். எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறது, ஆதாரம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் சார்ஜ் ஷீட் போடவேண்டியதுதானே?

முதலில், எனக்கும் இந்த கேஸுக்கும் என்ன சம்பந்தம்? அரசாங்கம் எடுத்த ஒரு முடிவில், எனக்கு எப்படி சம்பந்தம் இருக்கமுடியும்? அரசு என்ன முடிவு எடுக்கிறது என்று எனக்குத் தெரியாது. அரசு அதிகாரிகள் யாரையும் நான் நேரில் பார்த்ததில்லை, பேசியதில்லை. இதற்கிடையில் ஒரு தனியார் நிறுவனம் வந்து இதுவிஷயமாகப் பேசுகிறது. அந்தத் தனியார் நிறுவனத்துக்குச் சம்பந்தப்பட்டவர்களையும் நான் பார்க்கவுமில்லை, பேசவுமில்லை. ஆக, எனக்கும் இந்த வழக்குக்கும் என்னதான் சம்பந்தம்?

P Chidambaram
P Chidambaram

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஆரம்பித்து காஷ்மீர் விவகாரம்வரை மத்திய அரசுக்கு எதிராக தினம் தினம் பேசிவரும் என் தந்தையின் கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்லமுடியவில்லை. எனவே, என் தந்தையை அச்சுறுத்துவதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் திட்டமிட்டு இந்த வழக்கை ஜோடித்து, இப்படியோர் அரசியல் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

முன் ஜாமீன் மறுக்கப்பட்ட உடனேயே ப.சிதம்பரம் சரண் ஆகியிருக்கவேண்டியதுதானே என்று கேள்வி எழுப்புகிறார்கள். தீர்ப்பில் அப்படி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? முன் ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் நேரில் போய் ஆஜராகிவிடு, சரண்டராகிவிடு என்று எதுவும் சொல்லியிருக்கிறார்களா என்ன? 2018-ல் போடப்பட்ட முன் ஜாமீன் 2019-ல் மறுக்கப்பட்டுள்ளது அவ்வளவுதானே.

ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்
ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்

காஷ்மீர் விவகாரம் பற்றி யாரும் பேசக்கூடாது என்பதற்காகவே தொலைக்காட்சி வழியே பரபரப்பைக் கிளப்ப இந்த 2 நாள்களாக இந்தச் செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். 4000 பேரை காஷ்மீரில் கைது செய்திருக்கிறார்கள். இப்போதும் தொலைபேசி சேவை நடைமுறைக்கு வரவில்லை, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது... ஆக, இத்தனையையும் பொதுவெளிக்கு வரவிடாமல் இந்தக் கைது சம்பவத்தைச் சொல்லியே திசை திருப்பிவிட்டார்கள்.

கார் விற்பனை 30 விழுக்காடு குறைந்துவிட்டது, உள்ளாடை விற்பனையும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது, டாலர் மதிப்பு 72 ரூபாயாக உயர்ந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக இந்தியப் பொருளாதாரமே சரிந்துவிட்டது. மையப் பிரச்னையான இதுபற்றி இங்கே யாரும் பேசவில்லையே.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியில் ஆரம்பித்து தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் வரை அத்தனை தலைவர்களும் இந்தப் பிரச்னையில் எங்களுக்கு முழு ஆதரவாக இருக்கின்றனர். நேற்றுகூட சோனியாகாந்தியின் உத்தரவுப்படி முகுல் வாஷ்னிக், சஞ்சய் தத் எனக் கட்சியின் முன்னோடி தலைவர்கள் அனைவரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர்கள் என அனைவரும் என்னோடு தொடர்பில் இருந்துவருகிறார்கள். இப்படி காங்கிரஸ் கட்சி முழுமையான ஆதரவு கொடுத்துவரும் சூழலில், ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியோடு, கே.ஆர்.ராமசாமி மற்றும் காங்கிரஸ் எம்.பி-க்கள் அனைவரும் நேற்று மதியம் 2 மணியிலிருந்து சாயங்காலம் 6.30 மணி வரையிலும் என்னோடுதான் நீதிமன்றத்தில் இருந்தனர்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க தன் எதிர்ப்பை சரிவர பதிவு செய்யவில்லை என்று சிலர் பொய்யைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்களும் இவ்விஷயத்தில், மத்திய பி.ஜே.பி அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கனிமொழி என்னிடம் நேரிலேயே இதுகுறித்துப் பேசியிருக்கிறார். இன்னொரு கட்சியின் தலைவராக இருக்கக்கூடியவர் இந்தளவுதானே செயல்படமுடியும். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள், திருமாவளவன் அறிக்கை கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன ஆதரவு கொடுக்கமுடியும்?

Thirumavalavan
Thirumavalavan

கடந்த வருடம் ஜாமீன், கைது என்று எனக்குத் தொல்லை கொடுத்தார்கள். ஆனால், அதையெல்லாம் முறியடித்து தேர்தலில் நின்று ஜெயித்து இன்றைக்கு எம்.பி-யாகவும் ஆகிவிட்டேன். அதேபோல், என் தந்தை மீது இப்போது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாங்கள் முறியடித்து வெற்றிபெறுவோம்! இதெல்லாம் அரசியலில் சகஜம்!'' என்றார் முத்தாய்ப்பாக!