Published:Updated:

`இது கொரோனா இல்லை, கர்மா..!' - மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கிய கிரண் பேடி

 கிரண் பேடி
கிரண் பேடி

கொரோனா வைரஸ் குறித்து கிரண் பேடி சமூக வலைதளத்தில் போட்ட பதிவு ஒன்றுக்காக நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

புதுச்சேரியின் கவர்னர் கிரண் பேடி ஆக்கபூர்வமாக பல பணிகளை மேற்கொண்டாலும், அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு நெட்டிசன்களிடம் சிக்கிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.”சூரியன் ஓம் என்று ஒலி எழுப்புகிறது”, “பழங்குடியின மக்கள் குற்றம் செய்பவர்கள்” போன்றவற்றை அதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்த வரிசையில் தற்போது கொரோனா வைரஸையும் பஞ்சாயத்தில் இழுத்திருக்கிறார் கிரண் பேடி.

corona
corona

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 160 நாடுகளில் பரவியிருக்கிறது. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதனால் அனைத்து நாடுகளும் பொதுமக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டிருப்பதுடன், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்குத் தடை விதித்திருக்கின்றன. இந்தியாவில் 176 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படும் நிலையில், தற்போது 4-வது உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் முன்னேற்பாடு நடவடிக்கைகளயும் மேற்கொண்டு வருகிறது.

Coronavirus
Coronavirus

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி, திரையரங்கு, மால், சண்டே மார்க்கெட், மதுபானக் கடைகளை வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டிருக்கும் முதல்வர் நாராயணசாமி, கொரோனா விழிப்புணர்வு குறித்த அதிகாரிகளின் பணியை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொரோனா குறித்த கார்ட்டூன் பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கியிருக்கிறார். அந்த கார்ட்டூனில் முகக்கவசம் அணிந்தபடி மனிதர்கள் ஒரு கூண்டுக்குள் அடைப்பட்டு இருக்க, வெளியில் முதலை, ஆந்தை, பாம்பு, வௌவால், குரங்கு, பூனை உள்ளிட்டவை அமர்ந்திருப்பது போன்று வரையப்பட்டிருக்கிறது. அதன் கீழே இது கொரோனா இல்லை, கர்மா (Its Not Corona, its Karma) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

Kiran bedi
Kiran bedi

அந்த கார்ட்டூனுடன், “நாம் உண்ணும் உணவிற்கான பொறுப்பை நாமே ஏற்க வேண்டும். உணவிலும் வன்முறை இருக்கக்கூடாது” என்றும் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவிற்காக நெட்டிசன்கள் கிரண் பேடியைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். அந்தப் பதிவை அப்படியே முதல்வர் நாராயணசாமியை டேக் செய்து, உடனே கைது செய்யுங்கள் என்று கமென்ட் போட்டு வருகிறார்கள். மேலும், ’இந்தப் படத்தில் மாடும், மாட்டுக் கோமியமும் இல்லையே’ ‘இந்துக்களுக்கு கொரோனா வராதா’ ‘நாட்டில் லஞ்சமும் ஊழலும் மலிந்து கிடக்கும்போது, அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்று கூறுவது தேவையற்றது’ போன்ற கமென்டுகளால் கிரண் பேடியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு