Published:Updated:

``சசிதரூர், ஜெய்ராம் ரமேஷ் ஒப்பாரி வைக்கவேண்டாம்!'' - கடுகடுக்கும் கோபண்ணா

த.கதிரவன்

''370-வது சட்டத்தை ரத்து செய்தது தவறு. பி.ஜே.பி ஏதேனும் நல்லது செய்தால்கூட, போராட்டக் களத்தில் எதிரில் நிற்கும் அவர்களைப் பாராட்டமாட்டோம்''

கோபண்ணா
கோபண்ணா

'காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்குப் பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்' என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, யு டர்ன் அடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சசிதரூர்
சசிதரூர்

ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துசெய்த மத்திய பி.ஜே.பி அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பை இதுநாள்வரையில் பதிவு செய்துவருகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலரே பி.ஜே.பி-யின் நடவடிக்கைக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துவந்தனர். இது கட்சித் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியே, 'காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்குப் பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்' என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.

"இவ்விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுதான் என்ன..." என்ற சந்தேகத்துக்கு விளக்கம் கேட்டு தமிழகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோபண்ணாவிடம் பேசினோம்...

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

''காஷ்மீர் விவகாரத்தில், மத்திய பி.ஜே.பி எடுத்த நடவடிக்கையை இப்போதும் காங்கிரஸ் கட்சி எதிர்த்துதான் வருகிறது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யக்கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் ஜீவாதாரக் கொள்கை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

'காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை. இதில், பாகிஸ்தான் தலையிடுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. பாகிஸ்தான்தான் காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகிறது' என்று மிகத் தெளிவாக ராகுல் காந்தி தன் கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். இதில் என்ன குழப்பம் இருக்கிறது?

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன் திரிவேதி உள்ளிட்ட சில தலைவர்கள் பி.ஜே.பி-யின் நடவடிக்கையைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். சமீபத்தில் இதுகுறித்துப் பேசிய சசிதரூர், 'பி.ஜே.பி நல்லது செய்தால், வரவேற்கவேண்டும்' என்றுதான் பேசியிருக்கிறாரே தவிர, 370 சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்டதை ஆதரிக்கவில்லை.

கொள்கை அடிப்படையில், பி.ஜே.பி-யும் காங்கிரஸும் எதிரெதிர் துருவங்களைக் கொண்ட கட்சிகள். கடுமையாக எதிர் விமர்சனங்கள் வைத்துப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், ஓரிரு வார்த்தைகள் பாராட்டிப் பேசினாலும்கூடப் போராட்டத்தின் கூர்மை முனை மழுங்கிவிடும். எனவே, பி.ஜே.பி நல்லதே செய்தாலும்கூட அதைப் பாராட்டிப் பேசும் வேலையெல்லாம் எங்களுக்குக் கிடையாது.

கோபண்ணா
கோபண்ணா

1984-ல் காங்கிரஸ் கட்சி 54 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஆட்சி செய்தது. அப்போது எங்களை பி.ஜே.பி கட்சி ஆதரித்துப் பேசியதா? நாங்கள் கொண்டுவந்த நல்ல திட்டங்களைப் பாராட்டினார்களா? ஆதாரமே இல்லாமல், போபர்ஸ் ஊழல் என்றொரு பொய்யைச் சொல்லி காங்கிரஸ்மீது சேற்றைத்தானே வாரியிறைத்தது.

காங்கிரஸும் பி.ஜே.பி-யும் போர்க்களத்தில் எதிரெதிர் நின்று போராடிக் கொண்டிருக்கிற கட்சிகள். இப்படியொரு சூழ்நிலையில், ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர் போன்றவர்கள் ஒப்பாரி வைக்கவேண்டிய அவசியம் கிடையாது. அறிவுலகில் இருக்கக்கூடிய மேல்தட்டுக்காரர்களான இவர்கள் இருவருமே அதீதமாகச் சிந்திப்பவர்கள். காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், அவர்களோடு தொடர்பும் இல்லாமல், தங்களது ஆங்கிலமொழித் திறத்தைவைத்து மட்டுமே காங்கிரஸ் கட்சியை ஆக்கிரமித்தவர்கள்.

அமித் ஷா - மோடி
அமித் ஷா - மோடி

உங்களுக்கென்று தனிக் கருத்தொன்று இருந்திருந்தால், அதுபற்றிக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அல்லவா கொடுத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, போர்க்களத்துக்கு வந்து ஒரு பக்கம் எதிரிமீது அம்பை எய்துகொண்டே, மற்றொரு பக்கத்தில் எதிரியைக் கட்டித் தழுவிக்கொண்டிருந்தால் எதிர்ப்பு என்பது முனை மழுங்கிப்போய்விடும்.

நாடு சுதந்திரம்பெற்ற வேளையில், பிரதம மந்திரியாக நேரு இருந்த காலகட்டம் என்பது வேறு. அப்போதும்கூட நேரு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியை விட்டுவெளியேறாத நிலையில், அந்நாடு குறித்து மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். எனவே, நேரு என்றைக்குமே பாகிஸ்தான் ஆதரவாளராக இருந்தது கிடையாது. அதேநேரம், 'அண்டை நாடுடன் தொடர்ச்சியாக நாம் விரோதத்தை வளர்த்துக் கொண்டே இருக்க முடியாது. நட்பு பாலத்தையும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் போரை நாம் தவிர்க்க முடியும்' என்ற கொள்கையோடு செயல்பட்டார் நேரு.

சோனியா காந்தி
சோனியா காந்தி

ஆனால், இன்றைய நிலையில், தீவிரவாதிகளுக்கான பயிற்சி, ஆயுதக் கொள்முதல் என காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகிறது பாகிஸ்தான். எனவே, அந்த உண்மை நிலையை எடுத்துச்சொல்லியிருக்கிறார், ராகுல் காந்தி. அவ்வளவுதான்!' என்றார் விளக்கமாக.