Published:Updated:

`அப்போது ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுத்தார்களா?’ - சட்டசபைக் காட்சிகளால் கொதித்த ஜெ. அன்பழகன்

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

அ.தி.மு.க-வில் உள்ள 11 எம்.பி-க்களும், அதன் கூட்டணியில் உள்ள பா.ம.க எம்.பி-யும் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்தச் சட்டம் தோல்வியைத் தழுவியிருக்கும்.

``ஒரு அதிகாரியைத் தரக்குறைவாக ஒருமையில் திட்டுகிறார்கள். அந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் கேள்வி கேட்டால் அ.தி.மு.க-வில் உள்ள மொத்த பேரும் என்மீது பாய்கிறார்கள். அவர்கள், என்மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் பயப்படப் போவதில்லை" என்று காட்டமாகப் பேசுகிறார் ஜெ.அன்பழகன்.

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பேரவையின் மாண்புக்குக் குந்தகம் விளைக்கும் வகையில் செயல்பட்டதாக அன்பழகனைப் பேரவை விதிகளுக்கு உட்பட்டு சஸ்பெண்டு செய்யுமாறு அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அவையில் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டு, அன்பழகன் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்வதாகச் சபாநாயகர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஜெ.அன்பழகன் மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை வரும் 9ம் தேதி வரை 3 நாளாகக் குறைத்து சபாநாயகர் அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ``இந்த அவையில் எத்தனையோ உறுப்பினர்கள் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். ஆனால் ஜெ. அன்பழகன் பேசும்போதுதான் பிரச்னை ஆகிறது” என்று வேதனை தெரிவித்தார்.

சட்டசபையிலிருந்து தி.மு.க இன்றும் வெளிநடப்பு
சட்டசபையிலிருந்து தி.மு.க இன்றும் வெளிநடப்பு

சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்று எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனிடம் பேசினோம். ``சட்டமன்றத்தில் எதிர் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அ.தி.மு.க-வினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்" என்று ஆவேசத்தோடு பேசத்தொடங்கினார். ``புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியை அமைச்சர் தரக்குறைவாகப் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வந்துகொண்டிருக்கிறது. இதுதான் அதிகாரிகளை நடத்தும் முறையா என்று கேள்விகளைக் கேட்டேன். அதற்கு அவையில் உள்ள மொத்த பேரும் என்னைப் பேசவிடாமல் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது அமைச்சர் வேலுமணி என்னை எதிர்த்து ஆக்ரோஷமாகப் பேசினார்.

அப்போது `நீங்க உட்காருங்கனு சொன்னேன். யாருமே கேட்கவில்லை. சென்னை ஸ்டைலில் நீ உக்காரு என்றேன். இது தவறா. ஆனால் அ.தி.மு.க அமைச்சர் என்னை, நேரில் வா, பாத்துக்கிறேன் என்றெல்லாம் ஏக வசனத்தில் கீழ்த்தரமாகப் பேசினார். அதையெல்லாம் விட்டுவிட்டு நீ உட்காருனு சொன்னதில் மட்டும் நான் அவையின் மாண்பை மீறிவிட்டேனாம். இங்க என்ன சார் நடக்கிறது. அதிகாரம் அவர்களிடம் இருந்தால் எதுவேண்டுமானாலும் செய்வார்களா?

1989-ல் இதே சட்டமன்றத்தில் கலைஞர் கையில் வைத்திருந்த பட்ஜெட்டை பிடுங்கிக் கிழித்தார் ஜெயலலிதா. ஆனால், அவர் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜெ.அன்பழகன்
தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்

அதேபோல மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்தால் நாடே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதற்கு அ.தி.மு.க-வில் உள்ள 11 எம்.பி-க்களும், அதன் கூட்டணியில் உள்ள பா.ம.க எம்.பி-யும் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்தச் சட்டம் தோல்வியைத் தழுவியிருக்கும். உங்களால்தான் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அ.தி.மு.க-வினர், நீங்கள்தானே இந்தச் சட்டத்துக்கு அனுமதி கொடுத்தீர்கள் என்று பேசினர். அப்போது மு.க.ஸ்டாலின் எழுந்து, `அப்போதிருந்த சட்ட அறிக்கையை எடுத்து வாசியுங்கள். இப்போது எப்படி இருக்கிறது?’ என்று பேசினார். ஆனால், அ.தி.மு.க-வினர் இதை எதையுமே காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

என்னைப் பேசவிடாமல் தடுப்பதிலேயே குறியாக இருந்ததோடு தொடர்ந்து இடையூறு செய்துகொண்டே இருந்தார்கள். நான் சபாநாயகரிடம் என்னைப் பேச அனுமதிக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் `உங்களுக்கு டைம் ஆகிவிட்டது’ என்றார். `எனக்கு 10 நிமிடங்கள் இருக்கிறது. நான் 10 கேள்விகளைத் தயார் செய்து எடுத்து வந்துள்ளேன். அதைப் பேசவிடுங்கள்’ என்றேன். அதற்கு அவர் முடியாது என்றார். அந்த அறிக்கையை சபாநாயகர் முன்பு எடுத்துக்காட்டினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

பேரவையில் ஆளுநர் உரை
பேரவையில் ஆளுநர் உரை

அந்த ஆத்திரத்தில்தான் நான் தயார் செய்து எடுத்துச்சென்ற பேப்பரை கிழித்து, இது ஆளுநர் உரை அல்ல, கிழிக்கும் உரை என்று கிழித்து அவரது மேஜையில் வைத்துவிட்டு வந்தேன். இதற்கு என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். 1989-ல் இதே சட்டமன்றத்தில் கலைஞர் கையில் வைத்திருந்த பட்ஜெட்டை பிடுங்கிக் கிழித்தார் ஜெயலலிதா. ஆனால், அவர் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், என் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்" என்று ஆவேசமாக முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு