Published:Updated:

கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களாவை அரசுடைமை ஆக்க முடியுமா? - கிடுக்கிப்பிடி போடும் ஜெ.தீபா...

ஜெ.தீபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ.தீபா

தீபக் அவர்களுடன் நெருக்கமாக இருக்கலாம். அதற்காக என்னை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

‘அ.இ.அ.தி.மு.க ஜெ.தீபா அணி, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ என்றெல்லாம் ‘பால்கனி’ அரசியல் செய்துவந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, திடீரென அந்த அரசியல் வாழ்க்கைக்கும் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு, ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான், ‘வேதா இல்லம் யாருக்குச் சொந்தம்?’ என்ற வழக்கில், ‘ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கே சொந்தம்’ என்று தீர்ப்பு வந்திருப்பதை அடுத்து மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார். தீர்ப்பு காரணமாக உற்சாகமாக இருந்த ஜெ.தீபாவிடம் பேசினோம்...

“வழக்கு விசாரணையின்போது ‘கடும் எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்தது’ என்று சொல்லியிருந்தீர்களே... அ.தி.மு.க தரப்பிலிருந்து யாரேனும் உங்களை மிரட்டினார்களா?’’

“யாரும் எங்களை மிரட்டவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு என்பதால், சட்டரீதியாக நாங்கள் கடுமையாகப் போராடவேண்டியிருந்தது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன். உண்மையில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும்கூட அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் சிலரோடு நாங்கள் நல்ல பேச்சுவார்த்தையில்தான் இருந்துவந்தோம். ஆனால், அவர்களிடமும்கூட வழக்கு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டதில்லை.’’

“அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அமைப்பதை எதிர்ப்பது ஏன்?”

“இன்றைக்கு நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன... அந்தந்தக் கட்சியின் தலைவர்கள் வாழ்ந்து மறைந்த வீடுகளையெல்லாம் நினைவு இல்லம் ஆக்குகிறோம் என்று சம்பந்தப்பட்ட கட்சியோ அல்லது அரசோ உரிமை கோர முடியுமா... இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?’’

“அ.தி.மு.க-வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த இல்லமே, ‘எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்’ ஆக்கப்பட்டிருக்கிறதுதானே?’’

“இந்த வழக்குக்காக எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் பற்றிய தகவல்களையும் நான் ஆய்வு செய்திருக்கிறேன். அந்தவகையில், தன்னுடைய சொத்துகளை ஜானகி அம்மா பெயரில் எழுதி வைத்திருப்பதோடு, அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி அதன் நிர்வாகத்தையும்கூட அவரின் குடும்ப உறுப்பினர்களே நிர்வகிப்பதுபோலத்தான் எம்.ஜி.ஆர் உயில் எழுதிவைத்திருக்கிறார். மேலும், சத்யா ஸ்டூடியோவின் வருமானத்தை அ.தி.மு.க-வுக்குக் கொடுத்துவிடும்படியும் உயிலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா விஷயத்தில் அவரது மரணம் எதிர்பாராத நிகழ்வு என்பதால், அப்படியான உயில் எதுவும் எழுதப்படவில்லை; அதனால்தான் இத்தனை பிரச்னைகளும் ஏற்பட்டன.’’

“ஆனால், ‘ஒவ்வொரு தொண்டரின் உள்ளத்திலும் வேதா இல்லம் கோயிலாக இருக்கிறது’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறாரே?’’

“இருக்கலாம்... அதை நான் மறுக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவை இந்த அளவுக்குக் கொண்டாடுகிற தலைவர்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு... 2014-ம் ஆண்டு ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, கட்சிரீதியாக இங்கே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும்கூட ஜெயலலிதாவை நேரில் போய்ப் பார்த்தவர் யார்? சட்டப்படி யாருமே அவரைச் சந்திக்க முடியாது என்றிருந்த நிலையில் ரத்த உறவு என்பதால்தானே நான் சிறைக்குள் சென்று ஜெயலலிதாவைப் பார்க்க முடிந்தது. அந்த உரிமைக்குரியதை எப்படிப் பறிக்க முடியும்?’’

“சட்டரீதியான நடவடிக்கைகளுக்குப் பிறகு வேதா இல்லத்தில் குடியேறப்போகிறீர்களா?”

“அப்படியொரு யோசனையே இதுவரை இல்லை. இப்போதுதான் வீடு எங்களுக்குச் சொந்தம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இனிமேல்தான் அது பற்றியெல்லாம் பேசி முடிவெடுக்க வேண்டும். அதற்கு முன்பாக, வேதா இல்லத்தின் தற்போதைய நிலை என்னவென்பதைக் கண்டறிய வேண்டும். ஐந்தாறு வருடங்களாகப் பராமரிப்பு இல்லாமல் பூட்டியே கிடக்கும் வீடு பாழடைந்துபோயிருக்கும். அதையெல்லாம் சரிசெய்ய வேண்டும். அடுத்து, இந்த விஷயத்தில் நான் மட்டுமே முடிவெடுக்க முடியாது. என் தம்பி தீபக்கிடமும் பேச வேண்டும்.’’

கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களாவை அரசுடைமை ஆக்க முடியுமா? - கிடுக்கிப்பிடி போடும் ஜெ.தீபா...

“வேதா இல்லத்தை சசிகலாவிடம் விற்கப்போவதாக தகவல்கள் கசிகின்றனவே... உண்மையா?”

“ஒரு துளியும் உண்மை கிடையாது!’’

“ஆனால், அப்படிச் சொல்பவர்கள் அதற்கு ஆதாரமாக உங்கள் சகோதரர் தீபக், சசிகலா குடும்பத்தினரோடு நெருக்கமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்களே?’’

“தீபக் அவர்களுடன் நெருக்கமாக இருக்கலாம். அதற்காக என்னை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது. எனவே, இது முழுக்க முழுக்க வதந்திதான்.’’

“வேதா நினைவு இல்லம் வழக்கில் தமிழக அரசோ அல்லது அ.தி.மு.க-வோ மேல்முறையீடு செய்தால், உங்கள் நிலைப்பாடு என்ன?’’

“தமிழக அரசு மேல்முறையீடு செய்வதாக எனக்குத் தெரியவில்லை. அ.தி.மு.க-வும் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. வேதா இல்லம் ஜெயலலிதா வாழ்ந்த இடம் என்றால் கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, திராட்சைத் தோட்டம் என்று எல்லா இடங்களிலுமே ஜெயலலிதா வாழ்ந்திருக்கிறாரே... அதையெல்லாம் என்ன செய்யப்போகிறார்கள்? ஒரு தனிநபருடைய சொத்தை ‘அ.தி.மு.க என்ற கட்சி எடுத்துக்கொள்ளும்’ என்று எதன் அடிப்படையில் அவர்களால் வழக்கு தொடர முடியும்? அதற்கான முகாந்திரமே இல்லையே!’’

“அரசியலிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்திருந்த ஜெ.தீபாவின் முடிவு இப்போதும் அப்படியே தொடர்கிறதா?’’

(சிரிக்கிறார்). “அரசியலிலிருந்து விலகிவிட்டதாக நான் எப்போதோ அறிவித்துவிட்டேன். என் வாழ்க்கையில் ஏன்தான் இதைச் செய்தோமோ... என்று நான் வருந்துகிற விஷயம் அரசியலில் நான் நுழைந்ததுதான். எனவே, இப்போதும் எப்போதும் நான் தமிழ்நாட்டின் சாதாரணக் குடிமகள் மட்டுமே!’’