Published:Updated:

“சசிகலா நடத்துவது நாடகம்!” - பொளேர் ஜெ.தீபா

ஜெ.தீபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ.தீபா

எங்கள் பாட்டி-அத்தையின் சொத்துகள், வாரிசுகள் என்கிற அடிப்படையில் எங்களுக்கு வர வேண்டும். அதைத்தான் கேட்கிறோம்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் குழப்பமான சூழலைச் சந்தித்தபோது, ‘குபீர்’ அரசியலில் குதித்து கலகலப்பூட்டியவர் ஜெ.வின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ‘தீவிர’ அரசியல் களத்திலிருந்து ‘திடீரென’ விலகியவர், இப்போது களத்துக்கு வெளியே அமைதியாக இருக்கிறார். ஜெயலலிதாவின் நினைவில்லம் தொடர்பான வழக்கு, சசிகலாவின் அரசியல் மௌனம், தமிழகத் தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம்...

“ஜெயலலிதா நினைவில்லத்தை நிர்வகிப்பது தொடர்பான அறக்கட்டளைச் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறீர்களே?”

“நீதிமன்ற வழிகாட்டுதலின்படிதான் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறேன். எங்கள் பாட்டி-அத்தையின் சொத்துகள், வாரிசுகள் என்கிற அடிப்படையில் எங்களுக்கு வர வேண்டும். அதைத்தான் கேட்கிறோம். நீதிமன்றம் உத்தரவளித்து அறக்கட்டளைச் சட்டம் நீக்கப்பட்டால், வேதா இல்லம் எங்கள் கைக்கு வரும் என்று நம்புகிறேன்.”

“சசிகலா நடத்துவது நாடகம்!” - பொளேர் ஜெ.தீபா

“அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா கூறியிருக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அவர் ஒதுங்கிவிட்டதாக நான் நம்பவில்லை. அவர் குடும்பத்துக்கே அரசியல் ஆசை அதிகம். இப்போதுகூட பாருங்கள், தினகரன் ஒரு கட்சி, திவாகரன் ஒரு கட்சி என்று அரசியலில் பயணிக்கிறார்கள். சசிகலாவும் அப்படித்தான். அத்தையின் மறைவுக்கு முன்னால் வரையில், சசிகலா அரசியலிலேயே இல்லை. பின்புலத்தில் இருந்துதான் சசிகலா செயல்பட்டார். அத்தை யின் துன்பங்களுக்கெல்லாம் சசிகலாதான் காரணம். அத்தையின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வை அபகரிக்க முயன்றார். இப்படிப்பட்டவர், ‘நான் ஒதுங்கிவிடுகிறேன்’ என்று சொல்வதை ஏற்க முடியவில்லை. இதெல்லாம் ஒரு நாடகம்தான். அரசியலில் ஈடுபடுவதைத்தான் அவர் விரும்புகிறார் என்றே தோன்றுகிறது.”

“அ.தி.மு.க-வுக்கு சசிகலா உரிமை கொண்டாடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சசிகலாவைப் பொதுச்செயலாளராக முன்னி றுத்திய தலைவர்கள், அவரைக் கழற்றிவிட்டு விட்டார்கள். அதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆனால், அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அ.தி.மு.க தலைவர்களிடமிருந்து க்ளியர் மெசேஜாக வந்துவிட்டது. இதற்கு மேல் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம்தான்!”

“அ.தி.மு.க-வின் எதிர்காலம் என்னவாகும்?”

“அவர்களுக்குக் கிடைக்கும் வாக்குகளை வைத்துத்தான் அதை முடிவுசெய்ய முடியும். பழைய வாக்கு சதவிகிதத்தை அவர்கள் எட்டிவிட்டால் பாராட்டலாம்.”

“மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா?”

“அப்படி எந்த எண்ணமும் இல்லை. தீவிர அரசியல் என்றில்லாமல், ஓர் அரசியல் பார்வையாளராக மட்டும் இருக்கவே விரும்புகிறேன். மீண்டும் கட்சி, பிரசாரம், களப்பணி என்று செல்லும் எண்ணம் இல்லை.”