சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“வேதா இல்லத்தை வைத்து வேண்டாம் அரசியல்!”

ஜெ.தீபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ.தீபா

சிறைக்குள் இருந்த அத்தை, வெளியில் உள்ளவர்கள் யாரையும் சந்திக்க விருப்பப்படவில்லை. இந்தச் சூழலில், என்னைச் சந்திக்க அவரே ஆர்வம் காட்டினார்

அ.தி.மு.க-வின் அரசியலுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ‘வேதா இல்லம்’ வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு மறுபடியும் மீடியா வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பு தந்திருக்கும் உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார் ஜெ.தீபா.

‘`இப்படியொரு தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தீர்களா.?’’

‘`வழக்கின் ஆரம்பக்கட்டத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஏனெனில், கடந்தகால ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு. இந்த நிலையில், நீண்டகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு இப்படியொரு தீர்ப்பு-வெற்றி கிடைத்திருக்கிறது. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

2017-ல்தான் முதன் முதலாக, ‘வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும்’ என்ற பேச்சு எழுந்தது. அப்போதே இந்த முடிவுக்கு எதிராக நான் வழக்கு தொடர்ந்துவிட்டேன். அதாவது, ‘ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகள் நாங்கள் மட்டும்தான்’ என்ற தீர்ப்பெல்லாம் கிடைக்கும் முன்னரே இந்த வழக்கைத் தொடுத்துவிட்டேன். அத்தோடு ஆட்சியர், அரசு செயலர் என அதிகார மட்டங்களிலும் என் எதிர்ப்பை மனுவாகக் கொடுத்துவிட்டேன்.

நிராயுதபாணியாக நிற்கும் நாங்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்துப் போரிட்டு, நீதியைப் பெற்றுவிட முடியுமா என்ற மலைப்பே ஆரம்பத்தில் எங்களுக்குப் பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும்கூட நீதித்துறையின் மீது வைத்திருந்த நம்பிக்கை, வீண்போகவில்லை.’’

“வேதா இல்லத்தை வைத்து வேண்டாம் அரசியல்!”

‘`அரசியலைப் பின்னணியாகக் கொண்ட இந்த வழக்கினை எதிர்கொள்ள என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?’’

‘`இது ஒரு புதிய வழக்கு. இந்தியாவில், இதற்கு முன்பாக இதுபோன்ற வழக்குகள் ஏதேனும் நடைபெற்றிருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காகவே நாங்கள் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. அரசுத் திட்டங்களுக்காகத்தான் தனிப்பட்ட நபர்களின் சொத்துகளை அரசாங்கம் கையகப்படுத்தி யிருக்கிறதே தவிர, இதுபோன்று காரணமே இல்லாமல், ஒரு குடும்பச் சொத்தை அரசு கையகப்படுத்தியதாக எந்த முன்மாதிரி வழக்கும் இல்லை. சிலருடைய சுயநல அரசியல் அடையாளத்துக்காகவே வேதா இல்லத்தை ‘நினைவில்லமாக்க’ முயற்சி செய்தனர். வழக்கு விசாரணையின்போது, எங்கள் தரப்பிலிருந்து இதை அழுத்தமாகவே எடுத்துவைத்தோம்.’’

‘`ஆனால், ஜெ-வைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்களுக்கு இந்தத் தீர்ப்பு வருத்தத்தைத்தானே ஏற்படுத்தியிருக்கும்?’’

‘`எனக்குத் தெரிந்து எந்தவொரு அ.தி.மு.க தொண்டரும் அப்படி நினைக்கவில்லை. மாறாக, தீர்ப்பு கிடைத்த பிறகு என்னிடம் பேசுகிற தொண்டர்கள் அனைவரும், ‘நீங்கள்தான் உண்மையான வாரிசு. அம்மாவுக்குப் பிறகு நீங்கள்தான் வேதா இல்லத்தில் இருக்கவேண்டும்’ என்றெல்லாம் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அரசியலில் அவர் மிகப்பெரிய தலைவராக இருந்து வந்திருந்தாலும்கூட எங்களுக்கு அவர் எப்போதும் அத்தைதான்.

நான் அரசியல் கட்சி நடத்திவந்தபோது, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஒரு சர்வே நடத்தினோம். அதில், ‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்’, ‘வேதா இல்லம் யாருக்குப் போய்ச்சேர வேண்டும்’ என்ற கேள்விகளும் இருந்தன. இதில், ‘ஜெ ரத்த வாரிசுகளுக்குத்தான் வீடு போய்ச் சேரவேண்டும்’ என்று அப்போதே 70% பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.’’

“வேதா இல்லத்தை வைத்து வேண்டாம் அரசியல்!”

‘`சிறையில் இருந்த ஜெயலலிதா, உங்களிடம் என்ன சொன்னார்?’’

‘`சிறைக்குள் இருந்த அத்தை, வெளியில் உள்ளவர்கள் யாரையும் சந்திக்க விருப்பப்படவில்லை. இந்தச் சூழலில், என்னைச் சந்திக்க அவரே ஆர்வம் காட்டினார். ரத்த உறவு என்ற வகையில் நான்தான் சிறை ஆவணங்களில் கையெழுத்திட்டு, ஜெயலலிதாவை நேரில் சந்தித்தேன்.

ஆனால், சிறை விதிகளின்படி, சம்பந்தப்பட்ட நபரை நேரில் பார்க்க முடியுமே தவிர பேச முடியாது. எனவே, நாள் முழுக்கக் காத்திருந்து அத்தையை நேரில் பார்த்துவிட்டுத் திரும்பினேன்.’’

‘`அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்ட காலங்களில், நீங்கள் அவருக்கு உறுதுணையாக இருந்ததில்லை என்றெல்லாம் எதிர்த்தரப்பில் சொல்கிறார்களே?’’

‘`போயஸ்கார்டனில் இருந்த அத்தையோடு நாங்கள் நெருங்கிவிடக்கூடாது என்று அத்தையைச் சுற்றியிருந்த ஒரு குழு 200 சதவிகிதம் தடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், பரப்பன அக்ரஹாரா சிறையில் நான் அத்தையை சந்தித்ததை அந்தக் குழுவால் தடுக்கமுடியவில்லை. காரணம், நான் சந்திக்க வந்திருக்கும் விஷயத்தை நேரடியாக வார்டனே ஜெயலலிதாவிடம் தெரிவித்துவிட்டார். அவரும் என்னை வரவழைத்துப் பார்த்துவிட்டார். ஆனால், போயஸ்கார்டன் வீட்டிற்கு நான் அத்தையைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில் எல்லாம், நான் வந்திருக்கும் விஷயத்தையே அவரிடம் தகவல் தெரிவிக்காமல் சிலர் மறைத்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், என்னைப் பற்றித் தவறான தகவல்களையும் அவரிடம் தெரிவித்துவந்தனர்.’’

‘`ஜெயலலிதாவை நேரில் சந்திக்கும்போது இந்த விஷயங்களையெல்லாம் நீங்களே அவரிடம் தெரிவித்திருக்கலாம்தானே?’’

‘`நான் ரொம்பவும் சுதந்திரமான பெண். அத்தையைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே ஒரு பொக்கே வாங்கிக்கொண்டு தனியாளாக அத்தையைச் சந்திக்கக் கிளம்பிவிடுவேன். அப்போதெல்லாம் என் அம்மாகூட, ‘போய் திட்டுதான் வாங்கப்போறே...’ என்றெல்லாம் என்னைக் கடிந்திருக்கிறார்கள். அத்தைக்கு புத்தங்கள் வாசிப்பது ரொம்பவும் பிடிக்கும். அதனால், ஏதாவது நல்ல புத்தகங்கள் கண்ணில் பட்டால், அதை வாங்கிக்கொண்டு அத்தையிடம் கொடுப்பதற்காக போயஸ்கார்டன் சென்றிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற சமயங்களில்கூட ‘நான் அங்கு சென்று சண்டை போட்டதாகவும் கலாட்டா செய்ததாகவும்’ என்னைப்பற்றி அத்தையிடம் தப்புத்தப்பாகத் தகவல் சொல்லியிருக்கின்றனர் சிலர்.

ஒருமுறை அத்தையை நான் நேரடியாகச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தபோது, இந்தப் பிரச்னைகள் குறித்து அவரே என்னிடம் நேரிலும் கேட்டுவிட்டார். உடனே, ‘நான் கலாட்டா செய்ததாகக் கூறியவரிடமே இப்போது அழைத்துக் கேட்டுப் பாருங்கள்’ எனக் கூறிவிட்டேன். உடனே அவரும் சம்பந்தப்பட்டவரைக் கூப்பிட்டுக் கேட்க, அவர் உண்மையை மறைக்கமுடியாமல் திக்கித்திணற, என் முன்னிலையிலேயே அத்தை அந்த நபரைக் கடுமையாகத் திட்டிவிட்டார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, நான் போயஸ்கார்டன் சென்றால், உடனடியாக அத்தைக்குத் தகவல் தெரிவித்துவிட வேண்டும் என வீட்டிலுள்ள அனைவருக்கும் உத்தரவு போட்டுவிட்டார். ஆனால், அதன்பிறகும்கூட நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தராத வண்ணம், ‘மேடம் பிஸியாக இருக்கிறார்’ என்பதுபோன்ற தகவல்களைச் சொல்லியே என்னைத் தட்டிக்கழித்தனர்.’’

“வேதா இல்லத்தை வைத்து வேண்டாம் அரசியல்!”

‘`ஜெயலலிதாவைச் சந்திக்கவிடாமல் உங்களைத் தடுத்தவர் என்று சசிகலாவைக் குறிப்பிடுகிறீர்களா?’’

“இதுவிஷயமாக நான் யாரையும் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால், நான் போயஸ்கார்டன் வரும் விஷயத்தை மறைத்ததற்காக வீட்டிலிருந்தவர்களை அத்தை திட்டித் தீர்த்த சம்பவத்துக்குப் பிறகு, சசி அத்தையே என்னிடம் அதிக நெருக்கம் காட்டத் தொடங்கினார். அதனால், சசி அத்தையைச் சந்திப்பதற்காகவேகூட நான் பலமுறை போயஸ்கார்டன் வீட்டுக்குப் போயிருக்கிறேன்.

ஆனாலும்கூட தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாள்களில் நான் அத்தையைப் பார்க்கச் சென்றால், நான் வாங்கிச்சென்ற பரிசுப் பொருளை சசி அத்தையே என்னிடமிருந்து வாங்கிக்கொண்டுபோய் அத்தையிடம் கொடுத்துவிடுவார். பின்னர் என்னிடம் வந்து ‘அத்தை இப்போது பிஸியாக இருக்கிறார். இன்னொரு நாள் சந்திக்கலாம் என்று சொல்லச் சொன்னார்’ என்று கூறிவிடுவார். உண்மையில் ஜெயலலிதாவும்கூட அந்தக் காலகட்டத்தில் பிஸியாகத்தான் இருந்தார். எனவே, நானும் நிலைமையைப் புரிந்துகொண்டு வந்துவிடுவேன்.’’

‘`வேதா இல்லத்தைத் தங்கள் அரசியல் அடையாளமாகப் பயன்படுத்திக்கொள்ளும் தேவை இன்றைய அ.தி.மு.க தலைவர்களுக்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?’’

“வேதா இல்லம் என்பது ஜெயலலிதா என்ற தனி மனுஷியின் சாதனை, திறமை, உழைப்பின் அடையாளம்தானே தவிர... கட்சியினுடைய அடையாளம் அல்ல. அவர் திரைத்துறையில் நடிகையாக இருந்தபோதே வேதா இல்லம் பிரபலமானதுதான். மற்றபடி ஜெயலலிதாவின் அரசியல் அடையாளம் என்பது அ.தி.மு.க என்ற கட்சிதான். அவருடைய சொந்த உழைப்பு-திறமையினால்தான் அரசியலில் தன்னை வளர்த்துக்கொண்டார். மாறாக, ‘இங்கேதான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். எனவே, ராமாவரம் வீட்டைக் கொடுத்துவிடுங்கள்’ என என்றைக்காவது அவர் சொல்லியிருக்கிறாரா?

எனவே, வேதா இல்லத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்காதீர்கள். அது எடுபடாது.’’