Published:Updated:

போராட்டத்துக்குத் தயாராகும் ஜாக்டோ ஜியோ... இரட்டைத்தன்மையுடன் செயல்படுகிறதா திமுக அரசு?!

ஜாக்டோ ஜியோ போராட்டம்

அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியதற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முதல்வரைச் சந்தித்து கடந்த வாரம் நன்றி தெரிவித்தனர். ஆனாலும், தற்போது மூன்று கட்டப் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அறிவித்திருக்கிறது.

போராட்டத்துக்குத் தயாராகும் ஜாக்டோ ஜியோ... இரட்டைத்தன்மையுடன் செயல்படுகிறதா திமுக அரசு?!

அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியதற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முதல்வரைச் சந்தித்து கடந்த வாரம் நன்றி தெரிவித்தனர். ஆனாலும், தற்போது மூன்று கட்டப் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அறிவித்திருக்கிறது.

Published:Updated:
ஜாக்டோ ஜியோ போராட்டம்

தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘ஜாக்டோ ஜியோ’ தமிழ்நாடு அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனால், அவர்களின் முக்கியக் கோரிக்கைகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் செப்டம்பர் மாதம் ‘வாழ்வாதார நம்பிக்கை மாநாடு’ சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் உரையாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்திருந்தனர்.

அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ‘கடந்த ஓராண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், சலுகைகள், உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியிலிருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும் பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது’ என்று பேசினார். 

மேலும், ‘ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக மறுசீரமைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அரசாணைகள் 101, 108 ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தொடக்கக் கல்விக்கு என்று அலுவலர் பணியிடம் புதிதாக கிடைக்கும். அத்துடன், தனியார் பள்ளிகளை நிர்வகிக்க மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் புதிதாக உருவாக்கப்படவிருக்கிறது.

உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் துறை அமைச்சரிடம் முறையிடலாம். அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும். உங்கள் நம்பிக்கைக்கு என்றைக்கும் பாத்திரமாக இருப்பேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது’ என்று ஸ்டாலின் பேசினார்.

 ஸ்டாலின்
ஸ்டாலின்
ம.அரவிந்த்

அந்த மாநாட்டில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘அரசு ஊழியர்கள் ஆட்சியின் ஓர் அங்கம் என்று தெரிவித்ததுடன், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை மறைந்த முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினார். அதேபோல, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்’ என்று பொத்தாம் பொதுவாகவே பேசினார். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் பேச்சுகளும் பொத்தாம் பொதுவாகவே இருந்தன.

‘உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது’, ‘ உங்கள் நம்பிக்கைக்கு என்றைக்கும் பாத்திரமாக இருப்பேன்’ போன்ற நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை முதல்வரும் அமைச்சர்களும் தந்தனர் என்றாலும், அவர்களின் பேச்சுகள் அரசு ஊழியர்களிடமும் ஆசிரியர்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டுவருவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த உத்தரவாதம் எதையும் அவர்கள் அளிக்கவில்லை. அதனால், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தி.மு.க அரசு மீது அதிருப்தியிலேயே இருக்கிறார்கள்.

ஜாக்டோ ஜியோ மாநாடு
ஜாக்டோ ஜியோ மாநாடு

தமிழ்நாடு அரசும் அதை உணர்ந்தே இருக்கிறது. ஆகையால்தான், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை சமீபத்தில் தமிழ்நாடு அரசு உயர்த்தியது. அதன்படி, 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்ந்திருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘சமவேலை, சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்திப் போராடவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வுசெய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அவை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பை ஏற்று, 2023-ம் ஆண்டின் தொடக்கத்தை உவகையுடன் கொண்டாடி, மக்கள் வாழ்வை வளம்பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு

அகவிலைப்படியை உயர்த்தியதற்காக, அரசு ஊழியர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அந்தச் சந்திப்பு நிகழ்ந்த சில நாள்களிலேயே தங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது ஜாக்டோ ஜியோ.

மதுரையில் ஜாக்டோ ஜியோவின் உயர் மட்டக்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, பொன்.செல்வராஜ், மயில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், ‘ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 12-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடுகள் நடத்துவது, வரும் மார்ச் 5-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, வரும் மார்ச் 24-ம் தேதி, வட்டார, மாவட்டத் தலைநகரங்களில் 20,000 கிமீ தொலைவுக்கு மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று கட்டப் போராட்டங்களுக்குப் பிறகும் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் ஜாக்டோ ஜியோ முடிவுசெய்திருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய உரிமைகளைப் பறித்துவருவதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருக்கும் ஜாக்டோ ஜியோ, ‘தற்போதையை தி.மு.க ஆட்சி, இரட்டைத்தன்மைகொண்ட ஆட்சியாக இருக்கிறது’ என்று விமர்சித்திருக்கிறது.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

மேலும், ‘தமிழ்நாடு நிதித்துறை, கார்ப்பரேட் சிந்தனையுடன் செயல்படுகிறது’ என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை ஜாக்டோ ஜியோ மறைமுகமாக விமர்சித்திருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்தும், ‘பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வாய்ப்பே இல்லை’ என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதியாகத் தெரிவித்ததுடன், அந்தக் கருத்தை அவ்வப்போது அவர் வெளிப்படுத்திவருகிறார்.

அதனால், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அவர் மீது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள். தீவிரமான போராட்டங்களில் இறங்குவதற்கு ஜாக்டோ ஜியோ தயாராகிவிட்ட நிலையில், ‘தற்போதையை தி.மு.க ஆட்சி, இரட்டைத்தன்மைகொண்ட ஆட்சியாக இருக்கிறது’ என்ற விமர்சனத்துக்கு திமுக என்ன பதில் சொல்லப்போகிறது என்பதும், இந்தப் பிரச்னையை தி.மு.க அரசு எப்படி அணுகப்போகிறது என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.