Published:Updated:

`கலாம் விருதை தந்தை பெயரில் மாற்றினார்!' -ஜெகனைச் சுற்றும் புதிய சர்ச்சை

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, அப்துல் கலாம் பெயரில் விருதை வழங்கத் தொடங்கினார்.

கலாம் விருது பெயர் மாற்றம் குறித்த அரசாணை
கலாம் விருது பெயர் மாற்றம் குறித்த அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஆந்திர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விருதை ஒய்.எஸ்.ஆர் பெயரில் வழங்குவதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டியின் மகன்தான் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திர முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பெரும்பாலான அரசு திட்டங்களுக்குத் தன் தந்தை ஒய்.எஸ்.ஆரின் பெயரைச் சூட்டி வருகிறார். ஆந்திராவில் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

தேசியக் கல்வி நாளான நவம்பர் 11- ந் தேதி இந்த விருது வழங்கப்படும். சான்றிதழ், ரொக்கப்பணம் மற்றும் மேற்படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப் போன்றவற்றை உள்ளடக்கியது கலாம் விருது. இனிமேல் இந்த விருது `ஒய்.எஸ்.ஆர் வித்யா புராஷ்கர்' என்ற பெயரில் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, அப்துல் கலாம் விருதை வழங்கத் தொடங்கினார். இந்த விருது பெயர் மாற்றத்துக்குச் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ``அப்துல்கலாம் தன்னையே இந்த நாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

தன் வாழ்க்கை மூலம் நாட்டு மக்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர். போற்றுதலுக்குரிய அந்த மனிதரின் பெயரில் வழங்கப்பட்ட விருதை தன் சுய விருப்பத்துக்காக ஜெகன் மாற்றியுள்ளார்'' என்று சந்திபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளதார். ``ஜெகன்மோகன் ரெட்டி, இப்படிச் செயல்படுவது ஆச்சர்யமான விஷயமில்லை. சாலை, மைதானம், மருத்துவமனை எல்லாவற்றுக்கும் நேரு, காந்தி பெயரைச் சூட்டிய கட்சியின் பின்னணியிலிருந்து வந்தவர்தானே'' என்று பாரதிய ஜனதா கட்சியும் விமர்சனம் செய்துள்ளது.