Published:Updated:

தலைநகரம்... தலைவலி

ஜெகன் மோகன் ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஜெகன் மோகன் ரெட்டி

அதிரடியாகப் பெற்ற வெற்றியோடு நில்லாமல் பல அதிரடியான அறிவிப்புகளையும் அடுத்தடுத்து மேற்கொண்டு வந்தார்.

தலைநகரம்... தலைவலி

அதிரடியாகப் பெற்ற வெற்றியோடு நில்லாமல் பல அதிரடியான அறிவிப்புகளையும் அடுத்தடுத்து மேற்கொண்டு வந்தார்.

Published:Updated:
ஜெகன் மோகன் ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஜெகன் மோகன் ரெட்டி

திரடிகளுக்குப் பஞ்சமில்லாத டோலிவுட் படத்தின் ஹீரோவைப்போல ஆந்திர அரசியலில் என்ட்ரி கொடுத்தவர் ஜெகன்மோகன் ரெட்டி. முதல்வராக இருந்த தந்தை ராஜசேகர் ரெட்டி விபத்தில் உயிரிழக்க, மகன் ஜெகன், அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். ஆனால் அப்பாவை அங்கீகரித்த காங்கிரஸ் கட்சியாலேயே மகன் அவமதிக்கப்பட்டார்.

சி.பி.ஐ ஆயுதத்தைக் கையிலெடுத்த காங்கிரஸ் கட்சி, அவரைக் கைது செய்து சிறையிலும் தள்ளியது. பதினாறு மாதங்கள் சிறையிலிருந்த ஜெகன், விடுதலையானபிறகு காங்கிரஸ் கட்சியைப் பழிவாங்க வேண்டுமென்ற ஒற்றை அஜெண்டாவுடன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். பாதயாத்திரை சென்றார். பயணங்கள் மேற்கொண்டார். பாட்டாளி மக்களோடு படங்கள் எடுத்துக் கொண்டார். குடும்பத்தோடு சென்று ஆந்திர மக்களிடம் அந்நியோன்யமானார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விளைவு, அரசியலில் அமோக விளைச்சலை அறுவடை செய்தார். 2019 தேர்தலில் 175 இடங்கள் கொண்ட ஆந்திர சட்டப்பேரவையில் 151 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

அதிரடியாகப் பெற்ற வெற்றியோடு நில்லாமல் பல அதிரடியான அறிவிப்புகளையும் அடுத்தடுத்து மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த அதிரடிகள் எல்லாம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இப்போது தலைநகரப் பிரச்னை தலைவலியாக உருவெடுத்திருக்கிறது ஜெகனுக்கு.

கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது ஹைதராபாத் தெலங்கானா மாநிலத்துக்குச் சென்றது. இதனால் ஆந்திர மாநிலத்துக்குப் புதிய தலைநகரம் உருவாக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் சந்திரபாபு நாயுடு வசம் வந்தது.

ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதி உருவாக்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெகன் அமராவதித் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அமராவதி தலைநகருக்கான திட்டத்தைப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தார். ஆனால் போதிய நிதி ஆதாரங்கள் இல்லை, கடன் அதிகரிப்பு, மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை போன்ற காரணங்களால் அமராவதித் திட்டம் தாமதமானது.

அமராவதியில் தலைநகரை உருவாக்குவதற்காக 33,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற ஜெகன் மோகன் அரசு ஆந்திராவுக்கு அமராவதி உட்பட மூன்று தலைநகரங்களை உருவாக்கும் முடிவை அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தலைநகர் தொடர்பான திட்டத்தை ஆராய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜி.என்.ராவ் மற்றும் பாஸ்டன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது ஆந்திர அரசு. ஜி.என்.ராவ் தலைமையிலான குழு இந்த முடிவுகளால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அரசின் முடிவுக்கு ஆதரவாகவே இந்த அறிக்கை அமைந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 20-ம் தேதி பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று தலைநகரங்கள் உருவாக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் ஆந்திர அரசு நிறைவேற்றியது. அன்றைய தினம் ஆந்திரா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அமராவதி முழுவதும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 800க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அமராவதியில் நிலமளித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் வழங்கப்படும் என ஜெகன் உத்தரவாதமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தனக்குள்ள பெரும்பான்மையை வைத்து எளிதாக இந்த மசோதாவை ஜெகன் அரசு நிறைவேற்றி விட்டாலும், சட்டமேலவையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. ஒருவேளை சட்டமேலவையில் நிராகரித்து, சட்டப்பேரவை மீண்டும் இதை நிறைவேற்றினால் மசோதா சட்டமாகிவிடும்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

புதிய திட்டத்தின்படி அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் விளங்கும்.

அதிகாரத்தை மையப்படுத்தாமல் பரவலாக்கி அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவே மூன்று தலைநகர் திட்டத்தை முன்மொழிந்ததாக ஜெகன் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் என்பது நிதிச்சுமையை அதிகரிப்பதோடு, நிர்வாகச் சிக்கல்களையும் உருவாக்கும் என எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஆந்திரா ஒன்றுபட்டு இருந்தபோது வளர்ச்சி முழுவதும் ஹைதராபாத்தை மையப்படுத்தியே இருந்தது. இதன்மூலம் தெற்கு ஆந்திரா வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்தது. ஹைதராபாத், தெலங்கானாவுக்குச் சென்ற பிறகு ஆந்திராவின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. அதனால் தற்போதும் அமராவதியை மையப்படுத்தியே வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது சமமற்ற வளர்ச்சியையே தரும் என்று சொல்லப்படுகிறது. அதனால் மூன்று இடங்களில் தலைநகரங்கள் இருந்தால் வளர்ச்சி சீராக இருக்கும் என ஜெகன் அரசு வாதிடுகிறது. ஆனால் நிர்வாகம், நீதித்துறை, சட்டமன்றம் என அரசின் இந்த மூன்று பிரிவுகளும் பல்வேறு சமயங்களில் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது. இவை மூன்றும் தொலைவான இடங்களில் அமைவது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என்கின்றனர்.

மூன்று தலைநகர் திட்டத்தை எதிர்ப்பதில் சந்திரபாபு நாயுடு முன்னணியில் இருக்கிறார். முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் ஜெகன் ரத்து செய்துவருகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது தலைநகர் திட்டத்திலும் கைவைத்துள்ளார் என்கிறது தெலுங்கு தேசம்.

ஆனால், ஜெகன் அரசு முடிவில் பின்வாங்கப்போவதாகத் தெரியவில்லை. ஜெகனின் பிடிவாதத்தால் ஆந்திராவின் வளர்ச்சிக்கு ஏறுமுகமா, இறங்குமுகமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.