Published:Updated:

`எந்த மாநில முதல்வரும் இப்படிச் செய்யவில்லை!' -ஜெகன் மோகன் ரெட்டியைப் பாராட்டிய நெட்டிசன்கள்

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிதியுதவி அறிவித்துள்ளார். சலவைத் தொழிலாளர்கள் மற்றும் சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என 2.47 லட்சம் பேருக்கு ரூபாய் 10,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஒரே நாளில் 10,000-க்கும் அதிகமான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு இந்தியாவில் மூன்று லட்சத்தை நெருங்கி இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரே நாளில் 10,965 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

இதனால் மொத்த பாதிப்பு 2.96 லட்சமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பலியான 394 பேர் உட்பட இதுவரை நாடு முழுவதும் 8,498 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதுவரை 49 சதவிகிதம், அதாவது 1,41,842 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முடி திருத்தும் தொழிலாளர்
முடி திருத்தும் தொழிலாளர்

இதைப் போக்குவதற்காக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார். சலவைத் தொழிலாளர்கள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்கள் என 2.47 லட்சம் பேருக்கு ரூபாய் 10,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக 247 கோடி ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் 82,347 சலவைத் தொழிலாளர்கள், 82,767 முடிதிருத்தகம் கடைக்காரர்கள், 1,25,926 தையல்காரர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் இந்தத் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லையென்றும் ஆந்திரமாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மோசமான நிலையிலிருந்த இந்த தொழிலாளர்களின் குடும்பத்தைக் காப்பாற்றியிருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

இந்த நிலையில், ஆந்திராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், அறிகுறிகள் இருக்கும் மக்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 85% பேர் சாதாரண சிகிச்சை முறைகளிலேயே குணமடைந்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இதுவரை 5,269 பேர் கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு