Published:Updated:

ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு..! என்னதான் நடக்கிறது ஆந்திராவில்?!

Chandrababu Naidu in House Arrest
Chandrababu Naidu in House Arrest

ஜெகன்மோகன் ரெட்டி, அரியணை ஏறினார். பதவியில் அமர்ந்தவுடன், சந்திரபாபு நாயுடு கொண்டுவந்த பல திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்தார் அல்லது பெயர் மாற்றம் செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமராவதி உண்டவல்லி பகுதியில் உள்ள தன் வீட்டிலிருந்து, இன்று காலை குண்டூர் அருகேயுள்ள அட்மகூர் என்ற ஊருக்குப் புறப்பட, சந்திரபாபு நாயுடு தயாராகிக் கொண்டிருந்தார்.. `சலோ அட்மகூர்' என்றவாறே காரில் ஏறினார். திடீரென்று, சந்திரபாபு நாயுடு பங்களாவின் மெயின்கேட் போலீஸாரால் மூடப்பட்டது. பெரிய கயிறு கொண்டு இரண்டு கேட்டுகளும் கட்டப்பட்டன. `சார்... நீங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளீர்கள்...!' என்று போலீஸார் அவரிடத்தில் சொன்னபோது, அதிர்ந்து போனார் சந்திரபாபு நாயுடு. மற்றொரு பாதை வழியாக வீட்டை விட்டு வெளியே வந்த, சந்திரபாபுவின் மகன் நரா லோகேஷ் மடக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார். சமீப காலமாக சந்திரபாபு, ஜெகன்மோகன் மோதல் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த நடவடிக்கை மோதலின் உச்சத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது.

Jagan Mohan Reddy
Jagan Mohan Reddy

மோதலுக்கான பின்னணி என்ன?

பல காரணங்கள் இருக்கின்றன. அதிலொன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென்று, அவரின் பேச்சில் ஒருவித ஆக்ரோஷம் தெறிக்கிறது. `சந்திரபாபு நாயுடு போன்ற ஆள்களையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டும்' என வெடிக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மேடையிலேயே ஜெகன் ஆவேசமானார். அப்போது, முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, ஜெகனின் பேச்சுக்குக் கொடுத்த பதிலடி வேறுவிதமாக இருந்தது. ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அன்னமயா, வீர பிரமேந்திர ஸ்வாமி, யோகி வெமன்னா போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் பிறந்த மண் கடப்பா. ஜெகனுக்குப் பதிலடி கொடுத்த சந்திரபாபு, `கடப்பா மாவட்டத்தில் துளசிச்செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடி ஒன்றும் விளைந்துள்ளது. அந்த கஞ்சா செடிதான் ஜெகன்மோகன் ரெட்டி' என்று மட்டம்தட்டினார்.

நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி, அரியணை ஏறினார். பதவியில் அமர்ந்தவுடன், சந்திரபாபு நாயுடு கொண்டுவந்த பல திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்தார் அல்லது பெயர் மாற்றம் செய்தார். அமராவதியில் சந்திரபாபு கட்டிய அரசுக் கட்டடமான பிரஜா வேதிகா இடித்துத் தள்ளப்பட்டது. அமராவதி நகரை கட்டமைப்பதில் குழப்பம் நீடித்தது. சோலாவரம் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. என்.டி.ஆர் வைத்யசேவா என்ற 108 ஆம்புலன்ஸ் திட்டம் ஒய்.எஸ்.ஆர் ஆரோக்யஸ்ரீ என்ற பெயருக்கு மாற்றப்பட்டது. இதனால், சந்திரபாபு உள்ளுக்குள் குமைந்தார். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற சில நாள்களில் ஆந்திர சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்குவது குறித்த விவாதம் நடந்தது. விவாதம் முற்றி சந்தைக் கடைகள்போல அந்த இடம் மாறியது.

Chandrababu Naidu
Chandrababu Naidu

ஒரு கட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, உக்கிரமாகி உஷ்ணத்தைக் கக்கினார். 'உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா', 'எங்களிடம் 150 பேர் இருக்கிறார்கள்', 'வெகுண்டெழுந்தால் தாங்கமாட்டீர்கள்', 'கண்ணை உருட்டி பெரிதாகப்பார்த்தால் நாங்கள் பயந்துவிடுவோமா' என்கிற வார்த்தைகள் எல்லாம் ஜெகன்மோகன் ரெட்டி அப்போது சட்டமன்றத்தில் பேசியவை. முன்னாள், இந்நாள் முதல்வர்கள் சண்டையால் அக்கட தேசம் தலையைப் பிய்த்துக்கொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதோடு, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பிறகு தெலுங்கு தேசக்கட்சி தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குண்டூர் அருகேயுள்ள அட்மாகுர் என்ற இடத்தில் வசித்த 125-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களையும் ஒய்.எஸ்.ஆர் கட்சித்தொண்டர்கள் தாக்கி விரட்டியதாக ஜெகன் கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக தெலுங்குதேச கட்சி, குண்டூரில் நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டியின் ஆசியுடனே, வன்முறை நடத்தப்படுவதாக சந்திரபாபு நாயுடு சொல்கிறார். இதனால், `சலோ அட்மகூர்' என்ற பெயரில் அங்கே சந்திரபாபு நாயுடு பேரணி நடத்த முயன்றார். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி வேறு விதமாக கணக்குப் போட்டு, நாயுடுவை வீட்டுக்குள் முடக்கி வைத்துவிட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டி... தடம் மாறும் தவப்புதல்வன்!
ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ளார். ஆனால், யாரும் எங்களை கட்டுப்படுத்த முடியாது.
சந்திரபாபு நாயுடு

"கடந்த 100 நாள்களில் 500 முறை எங்கள் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெகன் அரசு, மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுவதோடு, மக்களின் அடிப்படை உரிமைகளையும் பறிக்கிறது. ஏராளமான பெண்கள், குழந்தைகள்கூட ஒய். எஸ்.ஆர் கட்சியினரால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுக்காவலோ...போலீஸ் காவலோ... நான் அட்மகூர் செல்வதை யாரும் தடுக்க முடியாது. விரைவில், சலோ அட்மகூர் நடந்தே தீரும்'' எனச் செய்தியாளர்களிடத்தில் சந்திரபாபு நாயுடு வெடித்தார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதால், குண்டூரில் பதற்றம் நிலவுகிறது. கலவரம் வெடித்துவிடக் கூடாது என்பதற்காக உள்ளுர் தெலுங்கு தேசக்கட்சித்தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்

"மாநிலத்தின் அமைதியை கெடுக்க நினைக்கும் எந்த சம்பவத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தெலுங்கு தேச கட்சி ஆந்திராவின் அமைதியைக் கெடுக்க நினைக்கிறது'' என்று ஜெகன்மோகன் ரெட்டி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அமைதியான அரசியல் ஆந்திராவுக்கு மீண்டும் வாய்க்குமோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு