Published:Updated:

`வினாத்தாள் விவகாரத்தில் சிக்கியவர், கல்வி பற்றிப் பேசலாமா?' -ஜெகனை விளாசிய சந்திரபாபு நாயுடு மகன்

`நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை போதிக்க முயற்சி செய்கிறேன்' என்கிறார் ஜெகன்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்று ஐந்து மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்தக் காலகட்டத்துக்குள் தன் மாநிலத்துக்குத் தேவையான பல்வேறு புதிய திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திவருகிறார். இவரின் செயலுக்கு பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

சமீபத்தில் கல்வி தொடர்பாக ஆந்திர முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அம்மாநில அரசியலில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ` 2020-21-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படும்’ என்பதே ஆந்திர அரசின் புதிய அறிவிப்பு. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வெற்றிச்செல்வி என்ற ஆட்சியர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் இந்தப் புதிய திட்டத்துக்குத் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

`ஆந்திராவில் உள்ள மாணவர்கள் தாய்மொழியான தெலுங்கைப் படித்தால்போதும். ஏன் ஆங்கிலம் திணிக்க வேண்டும்?’ என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இதற்குப் பதில் அளித்த ஜெகன்மோகன் ரெட்டி, `இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது. எனவே, ஆங்கிலம் இல்லாமல் ஒருவர் உலகத்துடன் போட்டிபோட முடியாது. அதனால் நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை போதிக்க முயற்சி செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

`நேர்காணல் இல்லை; மதிப்பெண் அடிப்படையிலேயே வேலை'- அரசுப்பணியில் சீர்திருத்தம் செய்யும் ஜெகன்!

இதுதொடர்பாக, தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நர லோகேஷ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். ``ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஒரு பிரிவினைவாதி. அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ. ஜெகனின் இந்த ஐந்து மாதகால ஆட்சியில் ஆந்திராவில் குற்றச் சம்பவங்கள் உச்சத்தைத் தொட்டுள்ளன. ஆந்திராவே தற்கொலை நகரமாக மாறி வருகிறது. ஜெகன் பதவியேற்ற பிறகு 241 விவசாயிகள், 43 கட்டட தொழிலாளர்கள், 3 தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நர லோகேஷ்
நர லோகேஷ்

ஜெகன்மோகன் ரெட்டி படித்தது பற்றி யாருக்காவது தெரியுமா.. அவர் ஏதோ பி.ஏ, பி.காம் படித்ததாகக் கூறுகிறார்கள். அதில் அவர் தேர்ச்சி பெற்றாரா என்பது யாருக்குத் தெரியும். ஜெகன் ரெட்டி பத்தாம் வகுப்பு படிக்கும்போது கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் சிக்கினார். அப்படிப்பட்டவர் தற்போது கல்வி பற்றிப் பேசி புதிய நடவடிக்கைகளை எடுக்கிறார்” என சரமாரியாக விமர்சித்துள்ளார்.