Published:Updated:

புதுச்சேரி: கூட்டணி விவகாரம்; கடுகடுத்த ஸ்டாலின்! - ஜெகத்ரட்சகன் `ஜகா’ வாங்கிய பின்னணி

ஸ்டாலினுடன் ஜெகத்ரட்சகன்
ஸ்டாலினுடன் ஜெகத்ரட்சகன்

`புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க-வை வெற்றிபெறச் செய்யவில்லையென்றால், தற்கொலை செய்துகொள்வேன்’ என்று நிர்வாகிகள் கூட்டத்தில் காலையில் முழங்கிய ஜெகத்ரட்சகன் எம்.பி., அன்று மாலையே அந்தர் பல்டியடித்திருக்கிறார்.

புதுச்சேரியில் கூட்டணியில் இருந்துகொண்டே ஆளும் காங்கிரஸ் அரசையும், அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர் அம்மாநில தி.மு.க நிர்வாகிகள். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளாத தி.மு.க-வினர், திருக்கனூரில் தனியாகப் போராட்டத்தை நடத்தினார்கள். அதேபோல, மாநில வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், கூட்டணிக் கட்சிகள் நடத்திய மூன்று நாள் போராட்டத்திலும் தி.மு.க கலந்துகொள்ளவில்லை.

புதுச்சேரி நிர்வாகிகள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன்
புதுச்சேரி நிர்வாகிகள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன்

ஜனவரி 18-ம் தேதி மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தியும் சிறப்பு சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்களைக் கொண்டுவந்தார் முதல்வர் நாராயணசாமி. அதை முழுமையாகப் புறக்கணித்த தி.மு.க., புதுச்சேரி தி.மு.க பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியது. சமீபகாலமாக, `புதுச்சேரியில் தனித்து ஆட்சி’, `தி.மு.க தலைமையில் ஆட்சி’ என்று முழக்கமிட்டுவரும் மாநில தி.மு.க நிர்வாகிகள், தமிழகத்தைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் எம்.பி-யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திவருகிறார்கள். ஜனவரி 18-ம் தேதி நடைபெற்ற தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய புதுச்சேரி வடக்கு மாநில தி.மு.க அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், ``2021-ம் ஆண்டு, மே மாதம் தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது ஜெகத்ரட்சகன் முதல்வராக இருப்பார். நான், எம்.எல்.ஏ சிவா, நாஜிம் மூவரும் ஒன்றாக வந்ததே சந்தோஷம் என்று தலைவர் ஸ்டாலின் கூறினார் (அந்த அளவுக்கு மூவருக்கும் ஏழாம் பொருத்தம்). வரும் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும்.

புதுச்சேரி: `அடம்பிடிக்கும் கிரண் பேடி; அசராத அமைச்சர்!’ - போராட்டக்களமான கவர்னர் மாளிகை

இப்போதிருக்கும் சூழலில் புதுச்சேரியில் புதுச்சேரி அமைப்பாளர்களான எங்கள் மூன்று பேரில் யார் முதல்வராக விரும்பினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், ஜெகத்ரட்சகனை முதல்வராக ஏற்றுக்கொள்வார்கள். தி.மு.க ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும். உங்களைவிடச் சிறந்த முதல்வர் எங்களுக்கு வேறு யாரும் கிடையாது” என்று கூறியவர், ஒருபடி மேலே சென்று, ``ஜெகத்ரட்சகன் முதல்வாகியிருக்கும்போது நான் சுகாதாரத்துறை அமைச்சராகியிருப்பேன். சிவா எம்.எல்.ஏ-வுக்கு கலால்துறை அமைச்சர் பதவி” என்று வாசித்தார். தொடர்ந்து பேசிய தெற்கு மாநில அமைப்பாளரும், எம்.எல்.ஏ-வுமான சிவா, ``நம்மால் ஆட்சிக்கு வந்தவர்களால் நமக்கு நன்மை ஏதும் இல்லை. துணை சபாநாயகரே அமைச்சரையும், அமைச்சர்களையும் திட்டுகிறார். பெருமான்மையே இல்லாத நிலையில் சட்டப்பேரவையை கூட்டியிருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்குகுப் பிறகு தி.மு.க தயவில்தான் ஆட்சி அமையும்” என்று காங்கிரஸ் கட்சியை விளாசித் தள்ளினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

ஆளாளுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியைக் குதறியெடுத்ததுடன், முதல்வர் வேட்பாளர் என்றும் அனைவரும் பேசியதால், அகமகிழ்ந்துபோன ஜெகத்ரட்சகன், ``இந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்தவன் நான். இந்த மண்ணை நேசிப்பவன் நான். பாவிகள் புதுச்சேரியைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள். தாங்கலையே… புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்ன செய்ய முடியாது... ஏன் செய்ய முடியாது? இத்தனை தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன... புதுச்சேரிக்கு வருவாய் வருவதற்கு என்ன திட்டம் தீட்டியுள்ளீர்கள்? நானே பல திட்டங்களை வைத்திருக்கிறேன்” என்று கொந்தளித்தவர், ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு, ``இந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தந்தால்தான் இங்கு வருவேன். இல்லையென்றால், இதே மேடையில் தற்கொலை செய்துகொள்வேன்” என்று அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதைக் கேட்டு அதிர்ச்சியான தொண்டர்கள் சிலர், ``தலைவா... நம்ம கலைஞர் உயிரோட இருக்கும்போதுகூட பாண்டிச்சேரியில ரெண்டு, மூணு இடங்களைத் தாண்டியதில்லை. தவிர மாஹே, ஏனாம்லாம் கேரளா, ஆந்திரா பக்கத்துல இருக்குது தலைவா” என்று கமென்ட் அடித்தனர். ஜெகத்ரட்சகனின் பேச்சையடுத்து `உடைகிறதா தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி?’ என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகின. புதுச்சேரிக் கூட்டத்தை முடித்துக்கொண்டு காரைக்கால் சஃபீரா மஹாலில் நடைபெறும் கூட்டத்துக்குப் புறப்பட்டார் ஜெகத்ரட்சகன், அப்போது காரில் செல்லும்போதே அவரைத் தொடர்புகொண்ட ஸ்டாலின்,``பாண்டிச்சேரிக்கு போனாலே இப்படித்தானா? அடக்கி வாசிங்க…” என்றரீதியில் கடுகடுத்ததாகக் கூறுகிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

புதுச்சேரி: `தி.மு.கவை வெற்றிபெற வைக்காவிட்டால்.. இதே மேடையில் தற்கொலை!’ ஜெகத்ரட்சகன் எம்.பி ஆவேசம்

காரைக்காலில் நடந்த கூட்டத்தில் மீண்டும் பேசிய புதுச்சேரி தி.மு.க மேற்கு மாநில அமைப்பாளர், ``கடந்த தேர்தலில் காங்கிரஸ் நமக்கு துரோகம் செய்துவிட்டது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம்” என்றார். (இவருக்கும் மேலிடத்திலிருந்து டோஸ் விழுந்ததாகக் கூறுகிறார்கள்). இறுதியாகப் பேசிய ஜெகத்ரட்சகன், ``பத்திரிகையாளர்கள் எல்லாம் தவறாகவே போட்டுவிடுகிறார்கள். 30 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று சொன்னால், நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து 30 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றுதான் சொன்னேன். இந்தியாவில் கூட்டணி தர்மத்தில் சிறிதளவுகூட மாறாமலிருக்கும் ஒரே ஓர் இயக்கம் தி.மு.க மட்டுமே” என்று ஒரே போடு போட்டார்.

`பாவிகள் புதுச்சேரியைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள். மாநிலத்தை வீணாக்கிவிட்டார்கள், பாழாக்கிவிட்டார்கள்’ என்று கூட்டணிக் கட்சியையும், அதன் ஆட்சியையும் மேடையில் கிழி கிழியென்று கிழித்துவிட்டு, கூட்டணி தர்மத்தை நாம் பேசலாமா?’ என்று தங்களுக்குள் கமென்ட் அடித்துக்கொண்டனர் உடன்பிறப்புகள். அதேபோல, ``புதுச்சேரியில் தி.மு.க-வை வலுப்படுத்தும் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது அங்கு நடைபெறுவது கழகப் பணிகள்தானே தவிர, தேர்தல் பணிகள் அல்ல. கூட்டணியுடன் அதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். புதுச்சேரியில் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை” என்று முடித்து வைத்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

அடுத்த கட்டுரைக்கு