Election bannerElection banner
Published:Updated:

தேசிய கீதம், தேநீர் இரவு, பிரியாணி...! - புத்தாண்டை வரவேற்ற போராட்டக்காரர்கள் #CAA

ஜாமியா
ஜாமியா ( twitter )

புத்தாண்டினை முன்னிட்டு நேற்றிரவு ஜாமியாவுக்கு வெளியே பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாமியாவுக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் தேசிய கீதத்தோடும் முழக்கங்களோடும் புத்தாண்டினை போராட்டக்காரர்கள் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

போராட்டக்காரர்கள்
போராட்டக்காரர்கள்
twitter

புத்தாண்டை முன்னிட்டு நேற்றிரவு ஜாமியாவுக்கு வெளியே பல்கலைக்கழக மாணவர்கள், நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 12 மணிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மேடையில் அரசியல் தொடர்பான நையாண்டி பாடல்களைப் பாடிக்கொண்டும் முழக்கமிட்டுக்கொண்டும் இருந்தனர். சரியாக 12 மணிக்கு, நடக்கப்போகும் அந்தத் தருணத்தை படம்பிடிக்க செல்போன்கள் மேலே உயர்ந்தன. ஜாமியா வாயிலில் மூவர்ணக்கொடியைக் கட்டிக் கொண்டிருந்தவர் உறைந்து நின்றார்; அங்கே அமர்ந்திருந்த பார்வையாளர்கள் கைக்குழந்தைகளுடன் எழுந்து நின்றனர்; திடீரென, ஒருமித்த குரலில் தேசிய கீதத்தைப் பாடினர். பாடி முடித்ததும், `பாரத் மாதா கி ஜே... இன்குலாப் சிந்தாபாத்' போன்ற முழக்கங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களுக்கு இப்படியாக புத்தாண்டு தொடங்கியது.

`இணைந்து போராட வேண்டிய நேரம்!’- `டார்க் நைட்' குழுவால் ஹேக் செய்யப்பட்ட ஜாமியா பல்கலைக்கழக இணையதளம்

ஒரு கையில் மெழுகுவத்தியும் மற்றொரு கையில் பதாகையும் ஏந்திக்கொண்டு போராட்டக்களத்திலிருந்த எட்டாம் வகுப்பு மாணவி அலிசா ஹைதர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில்,``ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும்போது நாங்கள் புதிய நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுவோம். ஆனால், இந்த ஆண்டு இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளோம். ஏனெனில், இது மிகவும் முக்கியமானது. அரசியலமைப்பை உருவாக்க அதிகமாக உழைப்பை கொடுத்துள்ளனர். அதனை வீணாக்கவோ அல்லது மாற்றவோ யாரையும் அனுமதிக்கக்கூடாது" என்றார்.

டெல்லியில், ஜாமியாவைப் போலவே ஷாஹீன் பாக்கில் நடந்த போராட்டத்திலும் தேசிய கீதத்தைப் பாடி புத்தாண்டினை வரவேற்றுள்ளனர். புரட்சியான பாடல்கள், தேநீர், பிரியாணி, ஐஸ்கிரீம் என புத்தாண்டினை போராட்டக்களத்தில் கொண்டாடியுள்ளனர். தங்களின் ஒற்றுமையைக் வெளிப்படுத்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போராட்டக்காரர்கள் ஷாஹீன் பாக்கை வந்தடைந்தனர். அங்குள்ளவர்களின் செய்திகளை அட்டைப்பெட்டியில் சேகரித்து பிரதமருக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.

`மன்னிப்பு கேட்க முடியாது!’ - பினராயி விஜயனுக்கு எதிராகக் கொதித்த ஜாமியா மாணவி ஆயிஷா

போராட்டத்தில் கலந்துகொண்ட ஷபா நாஸ்,``புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நண்பர்களுடன் வெளியே செல்வதும் நடனமாடுவதும் மட்டும் அல்ல. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு அரசியலமைப்பைக் காப்பாற்றுவது அதைவிட முக்கியமானது. நாங்கள் மருத்துவத் துறையில் சாதிக்க விரும்புபவர்கள். மே மாதம் நடைபெறப் போகும் என்னுடைய தேர்வுக்கு முன்னால் என்.ஆர்.சியைக் கொண்டுவந்தால் என்ன நடக்கும் என எங்கள் வீடுகளில் விவாதங்கள் நடைபெறுகிறது. அதனால்தான் நாங்கள் தீவிரமாகப் போராடுகிறோம்" என்று பேசினார்.

போராட்டக்காரர்கள்
போராட்டக்காரர்கள்
twitter

ஷபா நாஸின் உறக்கார பெண் பேசும்போது, ``இன்று மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, போராட்டக்களத்தில் பெண்கள் அதிகமாக கலந்துகொண்டுள்ளனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற என்னுடைய பெற்றோர்கள் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், இன்று அவர்களின் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு எங்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்" என்று கூறினார். போராட்டக்காரர்கள் தேசிய கீதம் பாடும் வீடியோக்களும் புகைப்படங்களும் நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு