தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, `இந்த நாடும், காஷ்மீர் மக்களும் பிரதமர் மோடிக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்’ என்று கூறியிருக்கிறார்.

விடுதலையின் அமுத மகோத்சவத்தின் ஒரு பகுதியாக மத்திய கலாசார அமைச்சகத்தின்கீழ் உள்ள சென்னை கலாக்ஷேத்ராவில் நடந்த ‘விடாஸ்டா 2023’ திருவிழாவில் பங்கேற்ற ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள், கைவினைஞர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அழைத்துப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ``தேசமும், ஜம்மு - காஷ்மீர் மக்களும் பிரதமர் மோடியின் துணிச்சலான மற்றும் தொலைநோக்குப் பார்வைமிக்க தலைமைக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். அங்கு பிரச்னைக்கு மூலகாரணமான 370-ஐ நீக்கி, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மீண்டும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அவர் உதவினார்.

ஜம்மு - காஷ்மீர் இப்போது வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது. அதோடு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஆர்வத்துடன் இருக்கிறது. உற்சாகமான மக்கள் ஆதரவுடன், பஞ்சாயத்துகளின் அடிமட்ட ஜனநாயக அமைப்புகள் மற்றும் மாவட்ட அளவில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இதனால் ஜம்மு - காஷ்மீர் மக்கள் உண்மையான ஜனநாயகத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல், புதிய இளம் தலைமைத்துவம் ஏராளமாக உருவாகிவருகிறது" என்று கூறினார்.