Published:Updated:

காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எழுபது ஆண்டுக்கால வரலாறு இருக்கிறது.

காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எழுபது ஆண்டுக்கால வரலாறு இருக்கிறது.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

26, அக், 1947 மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு, எனது மாநிலத்தில் தற்போது நிலவும் சூழலையும் அவசர நிலையையும் கருத்தில் கொண்டு இந்திய அரசாட்சியிடம் உதவி கோருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது இந்த முடிவின்படி இந்திய அரசால் அதன் பகுதியாக அங்கீகரிக்கப்படுவதற்கான ஆவணங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

- ஹரிசிங்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

ஜம்மு காஷ்மீர் சுதேசி அரசின் கடைசி மன்னரான மகாராஜா ஹரிசிங், இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மவுண்ட்பேட்டனுக்கு எழுதிய இந்தக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வரையறுத்து அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் ஒப்புதலுடன் 1949-ல் நிறைவேற்றியது.

காஷ்மீரின் தன்னாட்சி சுதந்திரத்தை நிலைநிறுத்தும் விதமாக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் காஷ்மீர் பிராந்திய பிரதமர் ஷேக் அப்துல்லா இருவரும் 1954-ம் ஆண்டு பேச்சுவார்த்தை மேற்கொண்டு, 370 மற்றும் 35-ஏ சட்டப்பிரிவு ஆகியன இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அப்போது நேரு மக்களவையில் பேசியது...

‘‘காஷ்மீரில் மகாராஜாக்கள் காலம் தொடங்கியே வெளிநபர்கள் ஊடுருவ முடியாத வகையிலான சில சட்டதிட்டங்கள் அமலில் இருக்கின்றன. அதன்படி வெளிநபர்கள் யாரும் காஷ்மீரில் நிலம் வாங்கவோ அல்லது அதன்மீது உரிமை கொள்ளவோ முடியாது. அரசரின் இந்தச் சட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள தற்போதைய ஜம்மு அரசு தீவிரமாக முனைகிறது. தங்களிடம் பணம் இருக்கிறது / பணம் மட்டுமே இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக காஷ்மீரி நிலங்களைக் கையகப்படுத்த முனையும் நபர்களைக் கண்டு அவர்கள் அஞ்சு கிறார்கள். அவர்களது அச்சமும் சரியானதே. ஜம்மு காஷ்மீர் சுதேசி மாகாணத்தின் சட்டங்களைத் தளர்த்த அவர்கள் ஒப்பு

கொண்டாலும் வெளி நபர்கள் நிலங்களைக் கையகப்படுத்துவது குறித்த முன்னெச்சரிக்கை யுடன் இருக்கிறார்கள். அதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். அதன்படி அங்கிருக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் யார், அவர்களுக்கான நிலம், சேவை மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் அவர்களுக்கு என்ன உரிமை வழங்கப்படும் என்பதை ஜம்மு காஷ்மீர் சட்டமன்றமே முடிவு செய்யும்.”

இப்படிக் கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ இரண்டும் இப்போதைய பா.ஜ.க அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அறிவிப்பு வெளியான இரு நாள்களுக்கு முன்பே காஷ்மீரில் அதற்கான அறிகுறிகள் தெரிந்துவிட்டன.

காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

காஷ்மீரின் இரு முக்கியத் தலைவர்களான உமர் அப்துல்லாவும், மெஹபூபா முப்தியும் தாங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தனர். “அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்த காஷ்மீர் மக்களுக்கு இதுதான் கதியா? விழித்தெழு இந்தியமே” என்று மெஹபூபா ஆக்ரோஷமாகத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அவர்களிடமிருந்து வந்த கடைசித் தொடர்பும் அந்த ட்விட்டர் பதிவு மட்டும்தான். காஷ்மீரில் 144 தடைச்சட்டமும் அதற்கடுத்து அமல்படுத்தப்பட்டது.

அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் உடனடியாக காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இப்படியான பரபரப்பு களுக்கிடையேதான் அமித் ஷா தலைமையிலான கேபினெட் அமைச்சரவை கூடி எடுத்த முடிவு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டது.

காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கும், அங்குள்ள சட்டப்பேரவைக்கும், குடியுரிமை பெற்ற மக்களுக்கும் தனித்துவமான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் 35 ஏ இரண்டும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் இனிமேல் அங்கு அசையாச்சொத்துகளைக் காஷ்மீரிகள் அல்லாதவர்களும் வாங்கலாம்; தொழில் தொடங்கலாம். ஆறு ஆண்டுகளாக இருந்த சட்டப்பேரவையின் பதவிக்காலமும் இனி ஐந்தாண்டாகக் குறைக்கப்படுகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் இரு பிரிவுகளையும் அகற்ற வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நெடுநாள் கனவு. இப்போது அசுர பலத்துடன் பெரும்பான்மை கிடைத்துள்ளதால் அதை நிறைவேற்றியுள்ளது பா.ஜ.க. மேலும், ஒருங்கிணைந்த காஷ்மீரை ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது மத்திய அரசு. இதில் ஜம்மு - காஷ்மீர் மட்டும்தான், புதுச்சேரியைப்போல் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் யூனியன் பிரதேசம். லடாக் ‘சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசம்’ என்று அறிவித்துள்ளது. ‘இயல்பு நிலைக்குத் திரும்பும்போது ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கையை அ.தி.மு.க, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதரித்துள்ளன. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோ, தி.மு.க-வின் திருச்சி சிவா ஆகியோர் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

‘`அஹிம்சையை வலியுறுத்தும் தேசம் தேர்ந்தெடுக்கும் வழி இது இல்லை” என்கிறார் ‘பாகிஸ்தான் - இந்தியாவுக்கான அமைதி மற்றும் ஜனநாயகக் கூட்டமைப்பி’ன் இந்தியப் பிரிவுப் பொதுச் செயலாளர் விஜயன். “பிரிவு 370 காஷ்மீர் மக்களின் உணர்வோடு இணைந்த ஒன்று. காஷ்மீர் சட்டப்பேரவையில் இதுகுறித்துக் கலந்தாலோசனையோ விவாதமோ நடைபெறாமல் சிறப்பு அந்தஸ்து குறித்தான மசோதாவை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது. ஏற்கெனவே பெல்லட் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் காஷ்மீரில் இந்த முடிவு மேலும் வன்முறையைத் தூண்டும். இதில் இவ்வளவு அவசரகதியில் நடவடிக்கை எடுப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?” என்கிறார்.

‘காஷ்மீர் டைம்ஸ்’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியரும் எழுத்தாளருமான அனுராதா பஹ்சின் ‘‘நான் தற்போது ஜம்மு பகுதியில் இருக்கிறேன். இது இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இயல்பாகவே இங்கே இருக்கும் மக்கள், குறிப்பாக பா.ஜ.க-வினர் இந்தச் சிறப்பு அந்தஸ்து ரத்து முடிவை வரவேற்கிறார்கள். டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொழில்முனைவோர் காஷ்மீரில் தொழில் தொடங்க ஏற்கெனவே ஆர்வம் காட்டிவருகிறார்கள். இந்தச் சூழலில் அவர்கள் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கைவிட ஜம்மு பகுதியைத் தங்களுக்கான வர்த்தக மையமாகத் தேர்ந்தெடுக்கவே வாய்ப்புகள் அதிகம். உள்ளூர் மக்கள் ஒருசிலர் அதுகுறித்து மகிழ்ச்சி கொள்கிறார்கள். இங்கு விவசாயம் மற்றும் சுற்றுலாவைத் தவிர வேறு பெரிய வர்த்தகங்கள் கிடையாது. அதிலிருந்து ஈட்டப்படும் பொருளாதாரம் இனி வெளிமாநிலத்தவருடன் பிரித்துக்கொள்ளப்படும் எனும் நிலையில் ஏற்கெனவே துப்பாக்கி முனையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு இது பெரும் நெருக்கடியாகலாம்’’ என்கிறார்.

காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

இப்படியாக இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் கருத்துகள் பரிமாறப்படுகின்றன. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு ஹைதராபாத், திருவிதாங்கூர் சமஸ்தானங்களை அதிரடியாக இந்தியாவுடன் இணைத்த வல்லபபாய் பட்டேலின் நடவடிக்கைக்கு இணையாக இதைக் கொண்டாடுகிறார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள். ஏற்கெனவே பல அதிரடிகளுக்குப் பேர்போன அமித்ஷாவால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

காஷ்மீர்ப் பிரச்னை என்பது இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே தொடரும் பிரச்னை என்றாலும் 80களுக்குப் பிறகுதான் அது தீவிரமானது. ஆயுதம் ஏந்திய குழுக்களின் வன்முறை, காஷ்மீரின் முக்கியத் தொழிலான சுற்றுலாவைக் கடுமையாக பாதித்தது. இங்கிருக்கும் ஆயுதக்குழுக்களில் கணிசமானவர்கள் பாகிஸ்தானால் ஆயுதமும் நிதியுதவியும் அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவலும் நிகழ்ந்தது.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவத் துருப்புகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. ஆனால், இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களிடம் அத்துமீறியதாகத் தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சாதாரண மக்களில் சிலர் ராணுவ வண்டிகளை நோக்கியும் ராணுவத்தினரை நோக்கியும் கற்களை வீசுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிப்போனது. ஒருபுறம் ஆயுதக்குழுக்களின் வன்முறை, இன்னொருபுறம் ராணுவத்தின் வன்முறையால் பலியானவர்களின் குடும்பத்திலிருந்து ஆயுதக்குழுக்களுக்குச் செல்வது என்பது சங்கிலித்தொடர் நிகழ்வானது.

காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

காஷ்மீர் மக்களின் தேசிய இனப்பிரச்னைகளுக்கு அப்பால் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டமும் ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக, சுற்றுலா வணிகம் சிதைவடைந்தது, காஷ்மீர் மக்களின் வாழ்க்கையைக் கடுமையாக பாதித்தது. இப்போது சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் பிரிவுகள் நீக்கப்படுவதன் மூலம் காஷ்மீரில் வெளிமாநில வர்த்தக முதலீடுகள் பெருகும் வாய்ப்புகள் அதிகம். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து பொதுமக்களின் கவனம் போராட்டங்களிலிருந்து திரும்ப வாய்ப்புண்டு என்கிறார்கள். 80களின் மத்தியில் காஷ்மீர்ப் பிரச்னையோடு பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்னையும் இருந்தது. ஆனால், தொடர்ச்சியான தொழில் வளர்ச்சியும் தேர்தல் ஜனநாயக அரசியலும் அங்கு அமைதியைக் கொண்டுவந்ததைச் சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள், காஷ்மீரிலும் இப்படியான அமைதி வரும் வாய்ப்பு உண்டு என்கின்றனர்.

இன்னொருபுறம் ‘காஷ்மீர் பெரு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவிடும். தொழில் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையைச் சீர்குலைத்து ரிசார்ட்டுகள் அமைப்பது போன்றவை நடைபெறும் அபாயமும் உண்டு’ என்று சொல்பவர்களும் உண்டு.

காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

‘மத்திய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றிவிட முடியும் என்றால், இனி அந்த நிலை எந்த மாநிலத்துக்கும் ஏற்படும்தானே? இது ஜனநாயகத்துக்கும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் ஆபத்து’ என்கிற குரல்கள் புறக்கணிக்கத் தக்கவையல்ல.

இதுவரை வன்முறையையும் போராட்டங்களையும் மட்டுமே சந்தித்துக்கொண்டிருந்த காஷ்மீர், இந்த மாற்றங்களுக்குப் பிறகு வளர்ச்சியையும் அமைதியையும் நோக்கி நகருமா அல்லது மத்திய அரசின் இந்த நடவடிக்கையே காஷ்மீரின் அமைதியை மேலும் குலைக்குமா?

காத்திருப்போம்... கவனிப்போம் காஷ்மீரை!

சட்டப்பிரிவு 370 சொல்வது என்ன ?

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு

370-ன் படி, ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்புத் துறைகள் தவிர, பிற துறை சார்ந்த சட்டங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும்பொழுது, அந்தச் சட்டங்கள் ஜம்மு - காஷ்மீரில் உடனடி செயல்பாட்டுக்கு வராது. மாநில அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே அங்கே அமலுக்கு வரும். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளைப் பிற மாநிலத்தவர் வாங்க முடியாது. ஆனால், இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துகள் வாங்கலாம். இதன்படி, அம்மாநிலப் பெண்கள் அந்நிய மாநிலத்தவரைத் திருமணம் செய்துகொண்டால் அங்கு நிலம் வாங்க முடியாது. அதே சமயம் அம்மாநில ஆண்களுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே தனிக்கொடி வைத்துக்கொள்ளும் உரிமையுண்டு. தனி அரசியல் சாசனமும் இருக்கிறது. ஜம்மு -காஷ்மீர் மாநில முதல்வரைக் கலந்தாலோசிக்காமல் அங்கே ஆளுநரை நியமனம் செய்ய முடியாது. இந்தியாவிலேயே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு மட்டுமே பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லைகளைக் கூட்டவும் குறைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகளைக் குறைக்கவோ கூட்டவோ மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது.

சட்டப்பிரிவு 35 A சொல்வது என்ன ?

இது, ஜம்மு- காஷ்மீர் மக்களின் குடியுரிமையை நிர்ணயிக்கும் சட்டப்பிரிவு ஆகும். 1954ஆம் ஆண்டில் 35 A சட்டப்பிரிவு 370 உடன் இணைக்கப்பட்டது. இந்தச் சட்டம் மாநிலத்தின் நிரந்தரக் குடிமக்கள் யார், அவர்களுக்கு என்ன உரிமை என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும், சம உரிமை, சமத்துவம் ஆகியவை பாதிக்காதவாறு, எந்தவொரு சட்டத்தையும் அம்மாநில சட்டப்பேரவை இயற்றிக்கொள்ளலாம் என்ற உரிமையையும் மாநில அரசுக்கு வழங்குகிறது.