Published:Updated:

`சும்மா பேசக்கூடாது; விமானம் அனுப்புறேன், வந்து பாருங்க!’ - ராகுலைச் சாடிய காஷ்மீர் கவர்னர்

ஆர்ட்டிகிள் 370 மற்றும் ஆர்ட்டிகிள் 35 -ஏ ஆகியவற்றை நீக்கியது, இங்கு இருக்கும் அனைவருக்குமானதுதான். இதில், வகுப்புவாத மோதல்கள் எப்படி இருக்க முடியும்? லே, கார்கில், ஜம்மு, பூஞ்ச், காஷ்மீர் என எங்கும் வகுப்புவாத மோதல்கள் நடைபெறவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில், மத்திய அரசு காஷ்மீர் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யும்போது தொடங்கிய விவாதம் இன்னும் முடியவில்லை. நாடு முழுவதும் இன்னமும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேச்சுகளே நடந்துவருகின்றன. எதிர்க்கட்சிகள், மத்திய அரசை தொடர்ந்து குறை கூறி வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த ஆர்ட்டிகிள் 370 ரத்து செய்யப்பட்டது முதல் அம்மாநிலத்தில் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

அமித் ஷா
அமித் ஷா

மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்களால் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் தங்களது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும், காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370 ரத்து செய்யப்பட்டது தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெறுவதாகவும் அவர்களைக் கட்டுப்படுத்த, துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகளும் வெளியானது. ஆனால், மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் தொடர்ந்து காஷ்மீரில் அமைதி நிலவுவதாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீரில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது. பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்ய பால்
ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்ய பால்
ANI

இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் பதிலடி கொடுத்துள்ளார். அவர், ``நான் ராகுல் காந்தியை இங்கு வரவேற்கிறேன். உங்களுக்கு தனியாக விமானம்கூட அனுப்புகிறேன். இங்கு வாருங்கள்... இங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்து, அதன் பின்னர் பேசுங்கள். நீங்கள் பொறுப்புள்ள மனிதராக நடந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து சும்மா குற்றம் சாட்டக்கூடாது” என்றார்.

தொடர்ந்து அவர், ``காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த ஆர்ட்டிகிள் 370 மற்றும் ஆர்ட்டிகிள் 35 -ஏ ஆகியவற்றை நீக்கியது, இங்கு இருக்கும் அனைவருக்குமானதுதான். இதில் வகுப்புவாத மோதல்கள் எப்படி இருக்க முடியும்? லே, கார்கில், ஜம்மு, பூஞ்ச், காஷ்மீர் என எங்கும் வகுப்புவாத மோதல்கள் நடைபெறவில்லை.

பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற பக்ரீத் தொழுகை
பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற பக்ரீத் தொழுகை

சில வெளி ஊடகங்கள் தவறான ரிப்போர்ட்டுகளை வெளியிடுகிறார்கள். அவர்களை எச்சரித்துள்ளோம். அனைத்து மருத்துவமனைகளும் திறந்தேதான் உள்ளன. ஒரு நபராவது துப்பாகி குண்டு துளைத்து சிகிச்சைபெறுவதாக நீங்கள் நிரூபித்துக்காட்டுங்கள். நான்கு நபர்களுக்கு மட்டும் பெல்லட் குண்டுகளால் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

பக்ரீத் கொண்டாடினரா, காஷ்மீர் மக்கள்?

பலரை வீட்டிலேயே சிறை வைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சிதான் எமர்ஜென்சி மூலம் ஒன்றரை ஆண்டு காலம் மக்களை சிறைவைத்தது. ஆனால், காஷ்மீரில் இப்போது நடப்பது, பாதுகாப்புக்கான கைது நடவடிக்கைதான். இவை இரண்டும் ஒன்றாகிவிட முடியது” என்றார்.