Published:Updated:

ஜர்பல் ராணி... பாகிஸ்தான் ராணுவ ஜீப் இந்தியாவின் நினைவுச்சின்னமாக மாறிய கதை!

பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான வில்லீஸ் ரக ஜீப் ஒன்றும் இந்தியாவின் வெற்றி அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த ஜீப் இப்போதும் சூப்பராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சிறப்பம்சம்.

Jarpal Queen
Jarpal Queen ( Photo: PTI )

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்து கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் முடிந்துவிட்டன. வங்கதேசத்தில் வாழ்ந்த பெங்காலி இன மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கிழக்குப் பாகிஸ்தானில், பாகிஸ்தான் ராணுவம் பெரும் இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருந்தது. தொடர்ந்து, இந்தியா மீது வான்வழித் தாக்குதலைத் தொடுத்தது. விளைவாக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் முப்படைகளையும் நகர்த்த உத்தரவிட்டார். 1971-ம் ஆண்டு டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் இந்தியக் கடற்படை, கராச்சி துறைமுகத்தைத் துவம்சம் செய்தது.

Pakistan Surrenders
Pakistan Surrenders

பாகிஸ்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது. இந்தியா முழு பலத்துடன் போரில் குதித்தது. முப்படைகளையும் இந்தியா பயன்படுத்தியதால், அரண்டுபோன பாகிஸ்தான் 13 நாள்கள் மட்டுமே போரில் ஈடுபட்டது. டிசம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் கிழக்குப் பிரிவு ராணுவத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஏ.ஏ.கே.நியாஸி, 93,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்தியாவிடம் சரணடைந்தார். போர் முடிவுக்கு வந்தது.

விளைவாக... பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் என்ற புதிய நாடு உதயமானது. இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக கண்ட பெரும் போர், இது. அதன் வெற்றிச் சின்னமாகப் பல வரலாற்றுச் சுவடுகள் நம்மிடையே உள்ளன. இந்தியாவின் கிழக்குப் பிரிவு படைத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் சிங் அரோரா முன்னிலையில், பாகிஸ்தான் லெப்டினென்ட் ஜெனரல் ஏ.ஏ.கே.நியாஸி, சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் புகைப்படம் அதில் முக்கியமானது. இந்தப் புகைப்படம்போல, பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான வில்லீஸ் ரக ஜீப் ஒன்றும் இந்தியாவின் வெற்றி அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த ஜீப் இப்போதும் சூப்பராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சிறப்பம்சம்.

Jarpal Queen
Jarpal Queen
Photo: PTI

இந்த ஜீப்பின் பெயர், 'ஜர்பல் ராணி'. பஞ்சாப் மாநிலம் சியால்கோட் அருகே இந்தியாவின் 3 கிரனேடியர் ரெஜிமென்ட் வீரர்கள் பாகிஸ்தான் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் டேங்குகளைக் கொண்டு, இந்தியப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் வீரர்களைச் சுமந்துவந்த ஜீப்தான் ஜர்பல் ராணி. இந்தியப் படையினரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், தாங்கள் வந்த வில்லீஸ் ஜீப்பை அம்போவென விட்டுவிட்டு பாகிஸ்தான் வீரர்கள் ஓடிவிட்டனர். பின்னர், 3 கிரனேடியர் ரெஜிமென்ட் வீரர்கள், இந்த வில்லீஸ் ஜீப்பை கைப்பற்றி இந்தியா கொண்டுவந்து, வெற்றி நினைவுச் சின்னமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜர்பல் என்ற இடத்தில் கைப்பற்றப்பட்டதால், இதற்கு 'ஜர்பல் ராணி' என்று செல்லப்பெயர் சூட்டினர். 3 கிரனேடியர் ரெஜிமென்ட் எங்கெல்லாம் முகாமிடுகிறதோ, அங்கெல்லாம் ஜர்பல் ராணியும் கொண்டுசெல்லப்படும். குப்வாரா, ஜெய்ப்பூர், சிம்லா, பூஞ்ச், மீரட், ஃபெரோஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஜர்பல் ராணி கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஒருமுறை எத்தியோப்பியாவில் ஐ.நா அமைதிப் பணியில் 3 கிரனேடியர் ரெஜிமென்ட் ஈடுபட்டது. இந்தச் சமயத்தில் மட்டுமே ஜர்பல் ராணி 3 கிரனேடியர் ரெஜிமென்ட்டை விட்டுப் பிரிந்திருந்தது. தற்போது, காஷ்மீரின் லே பகுதியிலிருந்து 40 கிலோ மீட்டர் இடத்தில் ஜர்பல் ராணி முகாமிட்டுள்ளது.

Regiment forces
Regiment forces

அமெரிக்கத் தயாரிப்பான இந்த வில்லீஸ் ஜீப் தயாரிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. பஞ்சாப் மாநிலத்தில், இந்த ஜீப் பதியப்பட்டுள்ளது. ஜீப்பின் மீது 'வார் டிராபி' என்று உருது மொழியில் எழுதப்பட்டுள்ளது. இப்போதும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஜர்பல் ராணி 3 கிரனேடியர் ரெஜிமென்டின் செல்லப்பிள்ளைபோலப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ரெஜிமென்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரிகள் முகாமுக்கு வந்தால், ஜர்பல் ராணியில் அமரவைத்து மரியாதை அளிப்பதும் வழக்கம்.