Published:Updated:

`காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததற்கு நேருதான் காரணம்!’ - அமித்ஷா

மத்திய அமைச்சர் அமித்ஷா, `காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தற்கு நேரு தான் காரணம்’ என குற்றம்சாட்டியுள்ளார்.

amit shah
amit shah

மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கபட்டுள்ளது. அடுத்தமாதம் நடைபெற உள்ள இந்ததேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர், இருமாநிலங்களிலும் முகாமிட்டுள்ளனர். அந்தவகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்ட்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

amit shah
amit shah

அப்போது பேசிய அவர், ``காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததற்கு நேருதான் காரணம். போர் நிறுத்தத்தை நேரு அறிவிக்காமல் இருந்திருந்தால், காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்க முடியாது. இந்த விவகாரத்தை, நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கையாண்டிருக்கவேண்டும்.

நேருக்கு பதிலாக அவர் கையாண்டிருந்தால் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டதில் அரசியலாக காங்கிரஸ் பார்க்கிறது. எங்களைப்பொறுத்தவரையில் இது தேசியவாதத்திற்கான விஷயம். நாங்கள் எப்போதும், `ஒரே நாடு, ஒரே பிரதமர், ஒரே அரசியலமைப்பு’ என்பதை ஆதரிப்போம்” என்றார்.

amit shah
amit shah

தொடர்ந்து நேருவை சாடிய அவர், ``நேரு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினார். அது இறுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பயங்கரவாதம் வளர, வழிவகுத்தது. 1990-லிருந்து 2000-ம் ஆண்டுவரை, 10 வருடங்களில் நாற்பதாயிரம் பேர் கொல்லபட்டுள்ளனர். `ஆர்டிக்கிள் 370-வது என்பது அரசியல் பிரச்னை’ என்கிறார் ராகுல்காந்தி. ராகுல் பாபா, நீங்கள் இப்போது அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். இதில் எங்களுக்கு எந்த அரசியலும் இல்லை. பாரத மாதாவை யாரும் பிரிக்க கூடாது என்பதற்கான எங்கள் இலக்கின் ஒருபகுதிதான் இது” என்று தெரிவித்துள்ளார்.