Published:Updated:

'25 ஆண்டுக்கால எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் வெற்றியைப் பறித்த ஐட்ரீம் மூர்த்தி!': #TNelections2021

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

தி.மு.க தரப்பில் களமிறங்கிய ஐட்ரீம் திரையரங்க உரிமையாளரான ஐட்ரீம் மூர்த்தி, தேர்தலின்போது ஜெயக்குமாருக்கு ரொம்பவே டஃப் கொடுத்தார்.

மீனவ மக்கள் நிறைந்த சென்னை, ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து 25 ஆண்டுக்காலம் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு, இந்தத் தேர்தல் அத்தனை சுலபமாக அமையவில்லை.

இந்தத் தொகுதியில் 1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மாயாண்டி வெற்றிபெற்றார். 1967 மற்றும் 71-ல் திமுக வேட்பாளர் வேதாச்சலம் வெற்றிபெற்றார். 1977, 1980 மற்றும் 1984 -ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் பி.பொன்னுரங்கம் தொடர் வெற்றிபெற்றார். 1989-ல் திமுக வேட்பாளர் ஆர்.மதிவாணனும், 1991-ல் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட டி.ஜெயக்குமாரும் வெற்றிபெற்றனர். அதன் பின்னர் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது அ.தி.மு.க-வுக்கு எதிர்ப்பு அலை வீசியபோது நடந்த தேர்தலில் மீண்டும் திமுக வெற்றிபெற்ற நிலையில், 2001, 2006, 2011-ம் ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற ஜெயக்குமார், நான்காவது முறையாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக  கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான ஆர்.மனோகரை 8,031 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜக, பாமக, தமாகா கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட 15 பேர் டெபாசிட் இழந்தனர்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

ஆனால் இத்தனை முறை வெற்றிபெற்றும், ராயபுரம் தொகுதி மக்களுக்குப் பெரிதாக எந்த நன்மையையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும், தொகுதியின் முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்ற புகாரும் இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக எதிரொலித்தது. கூடவே, தி.மு.க தரப்பில் களமிறங்கிய திரையரங்க உரிமையாளரான ஐட்ரீம் மூர்த்தி, தேர்தலின்போது ஜெயக்குமாருக்கு ரொம்பவே டஃப் கொடுத்தார்.தொகுதியில் குடியிருக்காமல், மயிலாப்பூரில் குடியிருப்பதாக ஜெயக்குமாருக்கு எதிராக அவர் வைத்த குற்றச்சாட்டுகள் அதிமுக-வினரை கலங்கடித்தன என்றே சொல்லலாம்.

25 ஆண்டுகளாகத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பதால் தொகுதியின் சந்து, பொந்துகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. ஆனாலும், தொகுதிக்குள் வலம்வரும்போது, காரிலிருந்து இறங்காமல், கண்ணாடியை மட்டும் இறக்கிவிட்டுக்கொண்டு, கட்சிக்காரர்களிடம் பேசிவிட்டு, வணக்கம் வைத்துவிட்டுக் கிளம்பிவிடுவார் என்ற புகார்களும் கிளம்பின. ஆனாலும் தொகுதிக்குள் நடக்கும் கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமணங்கள், முக்கியப் பிரமுகர்களின் குடும்ப விழாக்களில் தவறாமல் ஆஜராவது, தொகுதி இளைஞர்களுக்கு அவ்வப்போது கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுத்து அசத்தியது போன்றவையெல்லாம் தனக்கான வாக்குகளாக மாறும் என மிகுந்த நம்பிக்கைகொண்டிருந்தார் ஜெயக்குமார்.

அவரது நம்பிக்கை இப்படி இருந்த சூழலில் நேற்று காலை தொடங்கி நடைபெற்றுவந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்துவந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐட்ரீம் இரா.மூர்த்தி முன்னிலை வகித்துவந்தார். பலரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாகவே இந்த முன்னிலை இருந்தது. பிற்பகலுக்குப் பிறகு நிலைமை மாறும், போட்டி நிலவும் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில் எண்ணிக்கை முழுக்க மூர்த்தியே முன்னிலை வகித்தார். ஒட்டுமொத்தமாக சென்னை முழுக்க அதிமுக-வுக்கு தோல்வி முகமாக, ஜெயக்குமார் மட்டும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பல சுற்று வாக்குகள் தொடர்ச்சியாக எண்ணப்பட்ட நிலையில் தனது வெற்றித் தொகுதியான ராயபுரத்தில் 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார் ஜெயக்குமார்.

அடுத்த கட்டுரைக்கு