Published:Updated:

`அது ரொமாண்டிக் கத்தி; இது அப்படியல்ல’- `பிகில்'-ஐ சாடும் ஜெயக்குமார்!

வெகுஜன ஊடகம் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியும். ஆகவே, எம்.ஜி.ஆரைப்போல நடித்தால் மக்கள் மாலை போடத் தயாராக இருப்பார்கள்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், `தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும். இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில் ஒரு தாமதமும் இல்லை. ஆட்சி மன்றக்குழு கூடி ஜனநாயக முறைப்படி வேட்பாளர் அறிவிக்கப்படும் என்ற அவர், அ.தி.மு.க வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை இந்த இடைத்தேர்தலில் பெறுவார்கள். தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் போலியான வெற்றியைப் பெற்றுள்ளது என்ற அவர், வேலூரில் தி.மு.க வெற்றி பெற்றது செல்லாத வெற்றி (just miss). ஆனால், இரண்டு இடைத்தேர்தலில் அ.தி.மு.க கண்டிப்பாக வெற்றி பெறும்" எனக் கூறினார்.

விஜய்
விஜய்

மேலும் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் இயற்கையாகவே அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க ஆதரவு அளிக்கும். எல்லோரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவாகிட முடியாது. கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்துக்குள், 1972-ல் தொடங்கி, சோதனைகளைத் தாண்டி, சாதனை படைத்துள்ளோம். ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்டதுதான் அ.தி.மு.க. மக்களுக்காகத்தான் இந்த அரசு. நல்ல கருத்துகளை திரைப்படத்தில் எப்படி கொண்டுவந்தாரோ, அப்படித்தான் ஆட்சியையும் வழிநடத்தினார் எம்.ஜி.ஆர். எந்தப் படத்திலாவது, சிகரெட் புகைப்பதுபோல, மது அருந்துவதுபோல, கத்தி வைத்திருப்பதுபோல நடித்திருக்கிறாரா?

பிகில் போஸ்டர் பார்த்தேன். கத்தியை வைத்துக் கொண்டிருந்தார்” என்றார். அப்போது செய்தியாளர்கள், `குடியிருந்த கோயில் படத்தில் எம்.ஜி.ஆர் கத்தி வைத்திருப்பாரே’ என்று கேட்டதற்கு, ``அந்தக் கத்தியை நீங்கள் பார்க்க வேண்டும். அது ரொமான்ஸுக்காகப் பிடித்த கத்தி. துள்ளுவதோ இளமை என்ற ரொமாண்டிக் பாட்டு அது. வெகுஜன ஊடகம் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியும்.

ஆகவே, எம்.ஜி.ஆரைப்போல நடித்தால் மக்கள் மாலை போட தயாராக இருப்பார்கள். ஆனால், பிகில் படத்தில் விஜய் கத்தியை கையில் வைத்திருக்கிறார். அதைப்பார்க்கும் இளைஞர்கள், `என் தலையே கத்தி வைச்சிருக்காரு நான் வைச்சிருக்கக் கூடாதா?’ என்று கத்தியை எடுப்பார்கள். `தல எப்படியிருக்கோ அப்டிதான் வால் இருக்கும்’. நல்ல கருத்துகளை மீடியா மூலம் சொல்ல வேண்டும். அதனால்தான், எம்.ஜி.ஆர் காலத்தால் அழிக்கமுடியாத தலைவராக இருக்கிறார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

நேற்றும் இருந்தார், இன்றும் இருக்கிறார். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளைத் திணித்தால், அதைவிட மோசமான செயல் இருக்காது. வரலாறு மன்னிக்காது” என்றார். தொடர்ந்து, ``அ.தி.மு.கவை தொட்டவர்கள் கெட்டார்கள்’ என்று நேற்று நீங்கள் கூறினீர்கள். இன்று பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது’ என்று கேட்டனர். `அதற்கும் இதற்கும் சம்பந்தப்படுத்தவேண்டாம்.

கல்லூரி என்பது படிப்பதற்கு. படப்பிடிப்பு நடத்துவதற்கு அல்ல. சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் உயர்கல்வித்துறை செய்துள்ளது. அதற்கு அவர்கள் பதிலளிக்கட்டும். இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தமுள்ளது. சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். படம் ஓட வேண்டும். பிரபலமாக வேண்டும் என்பதால், அ.தி.மு.க மீது வேண்டாத குற்றச்சாட்டுகள் வைக்கவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.