Published:Updated:

விஐபி தொகுதி: ராயபுரம் ஜெயக்குமாருக்கு ஜெயம்!

ஜெயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயகுமார்

ஆரம்பத்தில் ராயபுரம் தொகுதிவாசியாக இருந்த ஜெயக்குமார், அமைச்சரான பிறகு பட்டினம்பாக்கவாசியாக மாறிவிட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் அத்தனை விவகாரங்களுக்கும் பதில் சொல்லும் நபராக இருந்தவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். பாட்டுப் பாடுவது, பாக்ஸிங், கிரிக்கெட் என உற்சாகத்துக்குச் சற்றும் குறைவில்லாத அரசியல்வாதி! முதன்முறையாக 1991-ம் ஆண்டு ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கி வெற்றிபெற்ற ஜெயக்குமார், அதன் பின்னர் 2001, 2006, 2011, 2016 ஆகிய நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று ராயபுரத்தைத் தனது கோட்டையாக மாற்றிவைத்திருக்கிறார். மீண்டும் அங்கு போட்டியிடுபவர், கோட்டையைத் தக்கவைப்பாரா?

மூர்த்தி
மூர்த்தி

ஆரம்பத்தில் ராயபுரம் தொகுதிவாசியாக இருந்த ஜெயக்குமார், அமைச்சரான பிறகு பட்டினம்பாக்கவாசியாக மாறிவிட்டார். ஆனாலும், ராயபுரம் தொகுதி மக்களுடன் அவருக்கு இருந்த நெருக்கம் மாறவே இல்லை. மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவரான ஜெயக்குமார், அந்தச் சமூகத்தின் முக்கியமான கோரிக்கைகள் பலவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் மீனவர்கள் மத்தியில் இருக்கிறது. சீன இன்ஜின் படகுகளால் ஏற்படும் மோதல், காசிமேடு மீன்பிடி துறைமுக இடமாற்ற விவகாரம் உள்ளிட்டவை ஜெயக்குமார் மீது தொகுதிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.

தேர்தல் நெருங்குவதால், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியிருக்கிறார் ஜெயக்குமார். ‘‘நம்ம சமுதாயப் பிரதிநிதியான என்னை காலிசெய்துவிட்டு என்ன செய்யப்போறீங்க? வேறு யார் வந்து உங்களுக்கு என்ன செய்யப்போறாங்க?’’ என்று அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார். அதனால், மீனவர்களின் ஒரு பிரிவினர் ஜெயக்குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் மனநிலைக்கு மாற ஆரம்பித்திருக்கிறார்கள். வியாபாரிகளின் ஆதரவும் ஜெயக்குமாருக்கு கணிசமாக இருக்கிறது. ‘‘ராயபுரம் பகுதியில் ரெளடியிசத்துக்கு முடிவுகட்டியது ஜெயக்குமார்தான்’’ என்கிறார்கள் வியாபாரிகள். மீனவர் அல்லாத சமூகங்களிடமும் ஆதரவைப் பெற்றிருப்பது ஜெயக்குமாருக்கு ப்ளஸ்.

விஐபி தொகுதி: ராயபுரம் ஜெயக்குமாருக்கு ஜெயம்!

ஜெயக்குமாருக்கு எதிராக ‘ஐ ட்ரீம்’ மூர்த்தியைக் களமிறக்கியிருக்கிறது தி.மு.க. நீண்டகாலமாக தி.மு.க-விலிருக்கும் மூர்த்தி, ராயபுரத்திலுள்ள ‘ஐ ட்ரீம்’ திரையரங்கத்தின் உரிமையாளர். மக்களுடன் அவருக்குப் பெரிய நெருக்கம் இல்லை என்பது மைனஸ். அதிகமாகச் செலவுசெய்யக்கூடியவர் என்பதும், தி.மு.க-வின் வாக்குவங்கியும் அவருக்கு ப்ளஸ். ‘‘உங்கள் வீட்டுப் பிள்ளை என கூறிக்கொண்டுவரும் ஜெயக்குமார், ஒரு மீனவருக்குக்கூட வேலை வாங்கித் தரவில்லை’’ என்று மூர்த்தி செய்யும் பிரசாரம் ஓரளவுக்கு எடுபடுகிறது.

ம.நீ.ம., நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும், ஜெயக்குமாருக்கும் ‘ஐ ட்ரீம்’ மூர்த்திக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. சமீபநாள்களாகப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கும் ஜெயக்குமாரின் கை ராயபுரத்தில் ஓங்கியிருக்கிறது. இதனால், பிரசாரத்துக்குப் போகும் இடங்களில் வழக்கம்போல கபடி விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, பாட்டுப் பாடுவது என செம கூலாக இருக்கிறார் ஜெயக்குமார். இன்றைய சூழலில், தொகுதியை அவர் தக்கவைப்பார் என்பதுதான் கள நிலவரம்.