- கு.அக்ஷரா சினேகா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து, ஆறாவது நினைவுதினம் இன்று சென்னையில் அவருடைய நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க அரசியல் தலைவர்களான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், சசிகலா, தினகரன் என ஒவ்வொருவரும் தொண்டர்களுடன் தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர்.
ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் ஏராளமாகக் கூடியிருந்த தொண்டர்களில் ஒரு சிலரிடம் நாம் பேசினோம்...
நம்மிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி அணியினர், “கனிந்த இதயம்கொண்ட இரும்புப் பெண்மணி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ஜெயலலிதா. 34 ஆண்டுகள் உலகமே வியக்கும் வகையில் ஓய்வில்லாமல் உழைத்து, கழகத்தை வெற்றியில் அமர்த்தியவர். இப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய ஜெயலலிதா நம் அனைவரையும் கண்ணீர்க் கடலலையில் ஆழ்த்திவிட்டு நம்மை விட்டும், இந்த மண்ணை விட்டும் மறைந்துவிட்டார். ஜெயலலிதா இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் கம்பீரமாக நிலைத்த புகழோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்’’ என்றனர்.
பிறகு ஜெயலலிதா நினைவிடத்தில், ``அவரின் அன்பு உடன்பிறப்புகளாகிய நாம், அவரது நினைவுகளைப் போற்றி, நினைத்து நெஞ்சம் உருகும் இந்த வேளையில் அவருக்கு நாம் ஆற்றவேண்டிய நன்றிக் கடன்களை நிறைவேற்ற வேண்டும். அதிமுக-வைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று சபதமேற்று நாம் களப்பணியில் ஈடுபட வேண்டும்'' என உறுதிமொழி ஏற்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியப் பிரமுகர்கள் நிகழ்ச்சி மேடையில் ஒன்றுகூடிக் குழுமியிருக்க, தொண்டர்களும் மேடைக்குக் கீழே கூடி நின்றனர். அப்போது பன்னீர்செல்வம் சார்பாக ஒருவர் முன்மொழிய, அவர் தரப்பினரும் அவருடன் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலம், கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்ததோடு, தற்போது அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.

மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் வகையில், `பட்டிதொட்டி எங்கும் கட்சியைக் கொண்டு செல்வோம்’ என்றனர். அந்த உறுதிமொழியின் இறுதிப் பகுதியில், "புரட்சித்தலைவி அம்மா அவர்களை மீண்டும் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக ஆக்கிடுவோம், அமர்த்திடுவோம்!" என முழக்கமிட்டனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த தொண்டர் ஒருவர் நம்மிடம் பேசினார். "நானும் அ.தி.மு.க-காரன்தான். ஆனாலும் ஒரு நியாயம் வேண்டாமா... புரட்சித்தலைவி அம்மா அவர்களை மீண்டும் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக ஆக்கிடுவோம் என்று சொல்றாங்க. எப்படி, சமாதிலருந்து எடுத்துட்டு வருவீங்களா... கட்சியே உடஞ்சிருக்கு. இவங்க வேற..." என்று சலிப்புத்தட்ட பேசினார்.
அதன் பிறகு, ஜெயலலிதா நினைவிடம் அருகே குழுமியிருந்த தொண்டர்கள் பலர் கண்ணீர் வடித்தபடி நின்றிருந்தனர். காவலர்கள் உள்ளே அனுமதிக்காததால், வெளியே நின்றபடி நினைவிடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு சில பெண்கள் நம்மிடம் பேசினர். ``அம்மா இல்லாதது பெரிய இழப்புதான். இப்போ மட்டும் அம்மா இருந்திருந்தா அவங்க ஆட்சிதான் இருந்திருக்கும். அவங்க இருந்திருந்தா இன்னும் மக்களுக்கு நிறைய செஞ்சிருப்பாங்க. எங்க அம்மா இல்லாத மாதிரி இருக்கு. என் மகனுக்கு இலவச மடிக்கணினி, புத்தகப்பை, மிதிவண்டி எல்லாமே அவங்க தந்தாங்க. அம்மா இருந்தப்போ வீடெல்லாம் கட்டித் தந்தாங்க. கொரோனா காலகட்டத்தில மட்டும் அவங்க இருந்திருந்தா, இன்னும் அதிகமா உதவி செஞ்சிருப்பாங்க. இப்போ அவங்க இல்லாதது தமிழாநாட்டுக்கே இழப்புதான்" என்றனர்.

இப்படிப் பல பெண்கள் நம்மிடம் ஜெயலலிதா பற்றிய அவர்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது நம்மிடம் பேசிய இளைஞர் ஒருவர், ``நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். அம்மாவை நேருக்கு நேர் பார்த்திருக்கேன். எங்க குடும்பத்துல எல்லாருமே அ.தி.மு.க-தான். எம்.எல்.ஏ-வாவும் இருக்கிறாங்க.1996-ல என் அண்ணா எம்.எல்.ஏ தேர்தல்ல போட்டி போட்டப்போ அம்மா எங்க வீட்டுக்கெல்லாம் வந்தாங்க. அவங்க ரொம்ப தைரியமான, புத்திசாலியான பெண்மணி. `மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்று சொன்னதுபோல அவங்க இருக்கிறப்போ நிறைய செஞ்சாங்க. இப்போ ஸ்டாலின் ஆட்சியில இலவசம்கிற பேர்ல மகளிர் பேருந்து விடறாங்க. ஆனா அதைப் பெண்களே விரும்பலை. ஏன்னா மரியாதை இல்லாம நடத்திடுறதா சொல்றாங்க. ஸ்டாலின் முதலமைச்சர்தான். ஆனா முடிவு எடுக்கிறதெல்லாம் அவரோட மகன்தான். ஆனா, அம்மா ஆட்சியைப் பார்த்தால் அம்மா எல்லாருடைய கருத்துகளைக் கேட்டாலும், இறுதி முடிவு எடுக்கிறது அவங்கதான். இப்போ கட்சியும் உடைஞ்சுடுச்சு" என்றார்.
ஜெயலலிதா நினைவிடத்துக்கு வெளியே வயதான பெண்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் பேசினோம். ``நாங்கல்லாம் 50 வருஷமா அ.தி.மு.க-வுல இருக்கோம். அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்களை முதன்முதலா திரைப்படத்துலத்தான் பார்த்தோம்.

அம்மாவும் அய்யாவும் (எம்.ஜி.ஆர்) ரொம்பப் பிடிக்கும். அம்மாவோட எல்லா படங்களையும் பார்த்திருக்கோம்" என்றனர்.
அப்போது ஒருவர், ``எம்.ஜி.ஆர் காலத்திலயே நான் அ.தி.மு.க-தான். அவர் நடிச்ச படங்களோட லிஸ்ட்டே வச்சிருக்கேன். `மன்னாதி மன்னன்’ படத்திலருந்து எல்லாமே பாத்திருக்கேன். அம்மா இல்லாததுதான் குறையே" என்றார். மற்றொருவர், "நான் அம்மாவைப் பார்த்திருக்கேன். அவங்க கையைத் தொட்டிருக்கேன். எங்களுக்கு இப்போ இருக்க அ.தி.மு.க தலைவர்லாம் தெரியாது. ஆனா எங்க வாக்கு எப்பவும் இரட்டை இலைக்குத்தான்" என்று தன் நினைவுகளைப் பகிர்ந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள், அவரின் பல திட்டங்களை நினைவுகூர்ந்தனர். இருப்பினும் பலருக்குக் கட்சியின் தற்போதைய நிலைமை தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அந்த `இரட்டை இலை'ச் சின்னம்தான்.