Published:Updated:

சிசிடிவி அகற்றம்: ``அப்போலோ கருத்தால் சசிகலாவுக்குத்தான் அரசியல் லாபம்!” - சிக்கல் யாருக்கு?

`அப்போதைய அதிமுக அரசு சொல்லித்தான் சிசிடிவி கேமராக்களை அகற்றினோம்’ எனும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் பதில் அதிமுக-வினர் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. வேண்டுமென்றே தவறான தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் பரப்பிவருவதாகவும் அதிமுக நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.

`முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அப்போதைய அதிமுக அரசு சொன்னதாலேயே சிசிடிவி-க்கள் அகற்றம் செய்யப்பட்டன. ஜெயலலிதாவுக்கு பிரைவசி தேவைப்படும் எனக் கூறியதால் சிசிடிவி-க்கள் அகற்றப்பட்டன’

என உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மனுத்தாக்கல் செய்திருப்பது, ஜெயலலிதா மரணம் தொடர்பான விவாதங்களை மீண்டும் அரசியல் களத்தில் உண்டாக்கியிருக்கிறது.

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை

அதிமுக-வின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய காலத்தில், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். தொடர்ந்து, அதிமுக-வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தபோது, அதை நிபந்தனையாகவும் முன்வைத்தார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை 25.09.2017 அன்று அப்போதைய அ.தி.மு.க அரசு அமைத்தது. ‘அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருந்த காலகட்டத்தில் என்ன நடந்தது?’ என்பதை அறிவதுதான் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அடிப்படை. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டது.

இந்தநிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சாா்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. தொடா்ந்து, அப்போலோ மருத்துவமனை நிா்வாகம் உச்ச நீதிமன்றத்தில் 2019-ல் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசின் தரப்பில், ‘ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. இந்த ஆணையச் செயல்பாடுகளுக்காக தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவிட்டுவருகிறது. ஆணையம் செயல்படும் வகையில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்

இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வில், கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போலோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ.சுந்தரம், வழக்குரைஞா் ரோஹிணி மூஸா ஆகியோா் ஆஜராகினா்.

விசாரணையின்போது, ‘இந்த ஆணையத்தின் செயல்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதன் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. மேலும், ஆணையத்தில் மருத்துவ வல்லுநா்கள் இடம்பெறவில்லை. மருத்துவா்கள் தெரிவிக்கும் சில விவரங்களை ஆணையத்தால் புரிந்துகொள்ள முடியாத நிலை இருக்கிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் தங்கியிருந்த தளத்தில் பொருத்தப்பட்ட கேமராக்கள் அப்போதைய அரசின் அறிவுறுத்தலின்பேரிலேயே அகற்றப்பட்டன. மேலும், அவரின் மரணத்துக்குப் பிறகு இந்த ஆணையம் தாமதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்தச் சிகிச்சையின் தரம் குறித்து கேள்வி எழுப்பும் தேவை எழவில்லை. இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில் எந்த நீதிமன்றத்திடமும் ஒத்துழைப்பு அளிக்க மருத்துவமனை நிா்வாகம் தயாராக உள்ளது’ என மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், `அப்போதைய அரசு சொல்லித்தான் சிசிடிவி கேமராக்களை அகற்றினோம்’ எனும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் பதில், அதிமுக-வினர் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. வேண்டுமென்றே தவறான தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் பரப்பிவருவதாகவும் அதிமுக நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர். இது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் பேசும்போது,

``அப்போலோ மருத்துவமனையின் இந்தக் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவமனையில் உள்ள எந்தவொரு பொருளையும் யாராலும் அகற்ற முடியாது. அகற்றச் சொல்லவும் மாட்டார்கள். மருத்துவமனை நிர்வாகமே இட்டுக்கட்டி இது போன்ற கருத்துகளைத் தெரிவித்துவருகிறது. உதாரணமாக, மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ள நோயாளி ஒருவருக்கு இந்த மருந்தைக் கொடுங்கள், அந்த மாத்திரையைக் கொடுங்கள் என அவர்களின் உறவினர்கள் பரிந்துரைத்தால், மருத்துவமனை நிர்வாகம் கேட்குமா?

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

அது மாதிரிதான் இதுவும். மருத்துவமனைக்கு என்று சில கொள்கை, கோட்பாடுகள் இருக்கும். அதில் யாரும் தலையிட முடியாது. உண்மை இப்படியிருக்க எதற்காகத் தவறான கருத்தை அவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல, ஆணையத்தில் நாங்கள் அளிக்கும் தகவல்களையெல்லாம் ஆணையம் வேண்டுமென்றே கசியவிடுகிறது என்று தவறான கருத்துகளைச் சொல்கிறார்கள். விசாரணை முடிந்து தீர்ப்பே இன்னும் சொல்லப்படாதபோது எப்படி ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது எனக் கருத்து சொல்ல முடியும்... இந்தக் கேள்வியை உச்ச நீதிமன்றமும் எழுப்பியிருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஆணையம் செயல்படுவதில் மருத்துவமனை நிர்வாகத்துக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எங்கே உண்மை வெளியாகிவிடுமோ என பயந்தே உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறது. மருத்துவமனையின் செயல்பாடுகளில் அவர்களுக்கே ஓர் அச்சம் இருக்கிறது. ஆனால், ஆணையம் எந்தவித தயவு தாட்சண்யமும் இல்லாமல் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்'' என்கிறார் அவர்.

ஆறுமுகசாமி ஆணையம்: அரசின் சம்பிரதாய காலநீட்டிப்பா... உண்மையான அக்கறையா?

அதிமுக தரப்பு விளக்கம் குறித்து, மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.

``அதிமுக-வின் உட்கட்சிப் பிரச்னையால் அரசாங்கத்தின் பணம் மூன்றரைக் கோடி ரூபாய் வீணாகச் செலவாகியிருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என்று சொன்ன ஓ.பன்னீர்செல்வமே ஆணையத்தில் ஆஜராகவில்லை. அதேபோல, சசிகலாவின்மீது அப்போது முன்வைத்த குற்றச்சாட்டுகளில் இன்றளவிலும் உறுதியாக இருக்கிறாரா என்று தெரியவில்லை. இவர்களின் அரசியல் லாபத்துக்காக மக்களின் வரிப்பணம் வீணாகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவரீதியான விஷயங்களைப் புரிந்துகொள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவர் ஒருவர் ஆணையத்தில் இருக்க வேண்டும் என்கிற அப்போலோ மருத்துவமனையின் கோரிக்கையிலும் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், 90 சதவிகித விசாரணை முடிந்துவிட்டது. அதனால், முழுமையான ரிப்போர்ட் வந்த பிறகு அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் மேல்முறையீடு செய்துகொள்ளுங்கள் எனும் நீதிமன்ற அறிவுரை ஏற்கத்தக்கதுதான். காரணம், இந்த ஆணையம் விசாரணை ஆணைய சட்டம் 1952-ன் கீழ்தான் செயல்படுகிறது. அதனால் இந்த விசாரணைகளை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும்.

ப்ரியன்
ப்ரியன்

`அரசாங்கம் சொல்லித்தான் சிசிடிவி-க்களை அகற்றினோம்’ என அப்போலோ நிர்வாகம் சொல்வது உண்மையாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கறிஞர் பொய் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் பிரைவசிக்காகக்கூட அப்போதைய அரசாங்கம் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், ஜெயலலிதா இருந்த அறை மட்டுமல்லாமல் அந்தத் தளம் முழுவதும் ஆஃப் செய்யவேண்டிய தேவை எங்கே வந்தது?

அப்போதைய அரசாங்கம் என்பது தற்காலிக முதல்வர் ஓ.பி.எஸ்., சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக-வைச் சேர்ந்த மற்ற அமைச்சர்கள் ஆகியோர்தான். சசிகலா அதைச் சொல்லியிருந்தால் அவரின் பெயரை மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் தைரியமாகச் சொல்லியிருப்பார்கள். தற்போது சசிகலாவுக்கு பயப்படுவதற்கான தேவையும் இல்லை. ஒருவேளை அவரே இதைச் சொல்லியிருந்தாலும் வெளியில் அரசாங்கம் என்பது அப்போது முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள்தாம். அதனால், அப்போலோவின் இந்தக் கருத்தால் அரசியல்ரீதியாக சசிகலாவுக்கு நன்மைதான்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு