Published:Updated:

ஜெயலலிதாவை இழந்த தமிழகத்தின் இன்றைய சூழல்... இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இல்லாத தமிழக அரசியல் சூழல் பற்றி விமர்சித்த அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல், "இன்றைய அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கு மோடிதான், அம்மா, மாமியார் எல்லாம்'' என்று போட்டுத் தாக்கினார்.

இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள். அவர் மறைந்து முழுதாக 3 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அவருக்குப் பின் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி அதிகாரமும் முழுதாக 3 ஆண்டுகளைக் கடந்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது!

இந்நிலையில், ஜெயலலிதாவை இழந்த தமிழகத்தின் இன்றைய சூழல் எப்படியிருக்கிறது? அவர் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்நாட்டின் நிலை என்னவாக இருந்திருக்கும்... என்ற கேள்விகளுக்கு விடைகேட்டு அ.தி.மு.க மற்றும் அக்கட்சியின் கூட்டணி தலைவர்களிடம் பேசினோம்....

`நகைச்சுவை என்றால் உங்களுக்கு வேப்பங்காயா?'- மக்களின் கேள்விகளுக்கு ஜெ. பதில்கள் #VikatanOriginals

தனியரசு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் 

தனியரசு
தனியரசு

"தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் நலன்களுக்கும் மாறான எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதித்திருக்க மாட்டார். மக்கள் போராடித்தான் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்ற நிலையே ஏற்பட்டிருக்காது. ஏனெனில், மத்திய அழுத்தம், தேசிய அழுத்தம் என எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியாத, இரும்புப் பெண்மணியாக, தமிழக மக்கள் முன்னேற்றத்தை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்படுவார்.

சாதி, மதம் கடந்து தாய்த் தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த நலன்களையும் ஒரு தாய்க்கோழி, தன் குஞ்சுகளை எப்படிப் பாதுகாக்குமோ அதைப் போன்று பாதுகாத்திருப்பார். அப்படிப்பட்ட அந்தத் தாய், இப்போது இல்லையே என்ற வருத்தம்தான் ரொம்பவே வலிக்கிறது. அவரளவுக்குத் தமிழ்நாட்டை வலிமையாகவும் பொலிவாகவும் வழிநடத்தவில்லை என்றாலும்கூட, தங்களால் இயன்றளவு எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தட்டுத் தடுமாறியாவது ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றப் போராடிவருகிறார்கள்... அவ்வளவுதான்!''

யோகி ஆதித்யநாத் உற்று கவனிக்கும் தமிழக ஐ.பி.எஸ்  முனிராஜ்... பதற்றமான இடத்தில் முக்கிய அசைன்மென்ட்!

சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மூத்த தலைவர்

''எல்லா விதத்திலும் ஜெயலலிதா ஆட்சிதான் தமிழகத்தில் தற்போதும் நடைபெற்று வருகிறது. சக்திவாய்ந்த மக்கள் தலைவராக அவர் இருந்தார். அதனால், அவரது குறை நிறைகள் ஜனநாயக ரீதியாக முழுமையாக விமர்சிக்கப்படவில்லை. இன்றைக்குத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஆட்சி என்பது சாமான்யர்களின் ஆட்சியாக இருக்கிறது. ஆனாலும் இவர்களது நிறைகளைக் காட்டிலும் குறைகளை விமர்சிக்கிற பராக்கிரமசாலிகள் அதிகரித்திருக்கிறார்கள்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

நல்லது நடந்தால் பாராட்டுவதும் தவறுகள் நடைபெற்றால் சுட்டிக்காட்டுவதுமாக பா.ஜ.க என்பது எப்போதுமே ஆக்கபூர்வமான பணிகளுக்கு உறுதுணையாக இருந்துவருகிறது. மத்திய அரசின் திட்டங்களோடு அவர் முரண்பட்டார்... உண்மைதான். அதாவது மத்திய அரசு, உதய் மின் திட்டத்தைக் கொண்டுவந்தபோது, அதில் சில காரணங்களை முன்வைத்து 'தமிழ்நாடு இத்திட்டத்தில் சேராது' என்று அறிவித்தார். ஆனால், மத்திய பா.ஜ.க அரசு, பரிவோடு அந்தக் காரணங்களை பரிசீலித்துப் பார்த்து, தமிழகத்தையும் இந்த மின் திட்டத்தில் சேர்த்தது. அதனுடைய விளைவாக, இன்றைக்கு மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இப்படி மின்வெட்டே இல்லாத மாநிலமாக வளர்ச்சியை நோக்கிச் செல்வது முக்கியமா அல்லது இருண்ட மாநிலமாகப் பின்னோக்கிப் பயணிப்பது முக்கியமா என்பதுதான் நம்முன் இப்போது இருக்கின்ற கேள்வி. மத்திய - மாநில அரசுகள் ஒத்துழைப்பதும் மாநில அரசின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், மத்திய அரசினுடைய கடமைகளில், மாநில அரசு குறுக்கிடாமல் இருப்பதும்தான் இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கு உதவும். இதுதான் நம்முடைய அரசியல் சாசன அடிப்படை கோட்பாடுகளுக்குத் தலைவணங்குவதாக அமையும். இந்த வகையில்தான் நம்முடைய மத்திய - மாநில அரசுகளும் செயல்பட்டு வருகின்றன.''

தமீமுன் அன்சாரி, மனித நேய ஜனநாயகக் கட்சி

"ஜெயலலிதா, உயிரோடு இருந்திருந்தால் நீட் தேர்வில் ஆரம்பித்து உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி போன்ற பிரச்னைகளில் தமிழ்நாட்டின் குரலை மிக வலிமையாக ஒலித்திருப்பார். இதேபோல், அவர் மிகக் கடுமையாக எதிர்த்துவந்த 'குடியுரிமை கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக வலிமையான முன்னெடுப்புகளையும் செய்திருப்பார். இன்றைக்கு நம்மிடையே அவர் இல்லாதது, மிகப்பெரிய இழப்பு. ஏனெனில், மாநில உரிமைகளை ஒருநாளும் அவர் விட்டுக்கொடுத்திருக்கவே மாட்டார்.

தமீமுன் அன்சாரி
தமீமுன் அன்சாரி

சமரசமற்ற ஓர் அரசியல் போராளியாகத் திகழ்ந்திருப்பார். 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்துக்கு மிகப் பொருத்தமாகவே அவரது செயல்பாடுகள் இருந்திருக்கின்றன என்பதை நான் நன்கறிவேன். ஆனால், இன்றைக்குத் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, இந்த மாநில உரிமைகள் பற்றிய கவலையோ அக்கறையோ துளிகூட இல்லை. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவர்களது ஒரே சிந்தனையாக இருக்கிறது!''

`அது யாரும் போட்ட பிச்சை அல்ல; சட்டம் தந்த உரிமை!'- `தேசம் காப்போம்' பேரணியில் திருமாவளவன்

வெற்றிவேல், அ.ம.மு.க பொருளாளர்

"ஜெயலலிதா, இன்றைக்கு உயிரோடிருந்தால் `நீட், ஹைட்ரோ கார்பன், உணவுப் பாதுகாப்பு, முத்தலாக், சி.ஏ.ஏ என மக்கள் நலனுக்கு எதிரான எந்தத் திட்டமும் தமிழகத்துக்குள் எட்டிக்கூடப் பார்க்க முடிந்திருக்காது. அதேபோல், கடந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றியும் பெற்றிருக்காது.

'அம்மா வழியில் ஆட்சி செய்கிறோம்' என்று வெளியே சொல்லிவிட்டு, 'மோடி வழியில்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்' இன்றைய தமிழக ஆட்சியாளர்கள். அம்மா உணவகத்தையே பல இடங்களிலும் இழுத்து மூடிவிட்டார்கள். கேட்டால், நிதி இல்லை என்கிறார்கள். ஒரு ரூபாய் விலையில் இட்லி விக்கிற இடத்தில், ஆட்சியாளர்களுக்கு எப்படி கமிஷன் கொடுக்க முடியும்? ஆக கமிஷன் கிடைக்கவில்லை என்றதும் 'நிதி இல்லை' என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி கடையை இழுத்து மூடிவிடுகிறார்கள்.

வெற்றிவேல்
வெற்றிவேல்

மத்திய அரசின் உத்தரவுக்குக் கட்டுப்படுவதும் பணம் பார்ப்பதும் மட்டுமே தமிழக ஆட்சியாளர்களின் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டது. அம்மா மட்டுமல்ல, மாமியார், நாத்தனார் என அனைத்து உறவும் இவர்களுக்கு மோடி மட்டுமே! மத்தியில் இருப்பவர்களுக்கும் இங்கே தங்களது ஆன்மிக அரசியலை நடத்துவதற்கு இதுபோன்ற ஆள்கள் தேவைப்படுகிறார்கள். நிரந்தரமாக, தமிழகத்தில் இப்படியோர் ஆட்சியைத் தக்கவைக்க அவர்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், இது பெரியார் மண்; சுய மரியாதை நிரம்பியவர்கள்தான் இங்கே அதிகம். எனவே, மத்தியிலுள்ளவர்கள் நினைப்பதுபோல் இங்கே மக்கள் யாரும் மண்டியிட மாட்டார்கள்!''

கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை தலைவர்

''ஜெயலலிதா, உயிரோடிருந்தால் தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தீர்மானம் போட்டிருப்பார்கள். 7 பேர் விடுதலை சாத்தியப்பட்டிருக்கும். அனிதா, இறந்திருக்கவே மாட்டாள். தமிழக உரிமைகள் 200 சதவிகிதம் பாதுகாக்கப்பட்டிருக்கும்; ஏனெனில், ஆரம்பத்திலிருந்தே அவர் இந்த விஷயத்தில் மிக உறுதியாக இருந்தார். ஆக, அன்றைக்கு அவர் எதிர்த்த விஷயங்களையெல்லாம் இன்றைக்குக் குறுக்குவழியில் கொண்டுவருகிறது மத்திய அரசு.

கருணாஸ்
கருணாஸ்

எனவே, தாயை இழந்து தவிக்கும் குழந்தையைப் போலத்தான் இருக்கிறது தமிழகம்! இவ்வளவு பிரச்னைகளுக்கிடையேயும் ஒரேயொரு சின்ன ஆறுதல், 'டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது' மட்டுமே!''

ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை அமைச்சர்

''ஜெயலலிதா, இன்றைக்கு இல்லாத குறையே தெரியாத அளவுக்கு அன்னை தமிழகத்தை வழி நடத்திவருகிறார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும். அம்மா முதல்வராகப் பொறுப்பேற்ற 2011 காலகட்டத்தில், திருச்சியில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு மின் வெளிச்சத்தோடு வழிநெடுக மக்கள் வரவேற்பைக் கொடுத்தேன். இதைப் பார்த்துவிட்டு, 'மின்சாரமின்றி மக்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இப்படி ஆடம்பரமாக வரவேற்பு கொடுத்தால், மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்... நம்மை அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பதே, அவர்களுக்குப் பணி செய்யத்தான்' என்று சொல்லிக் கோபப்பட்டார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

என் தவற்றை நான் உணர்ந்துகொள்ளும் வகையில், என் பதவிகளையும் பறித்துக்கொண்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவரே என்ன அழைத்து, 'உன் அன்பு எனக்குப் புரிகிறது. ஆனால், பதவியில் இல்லாத இந்தக் காலகட்டத்தில், நீ ஏற்கெனவே செய்திருந்த தவறை உணர்ந்திருப்பாய்' என்று சொல்லி, மறுபடியும் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்.

தாயின் கனிவோடு, கண்டிப்பும் மிக்க அந்தக் காவல் தெய்வத்தின் நினைவாகத்தான் இன்றைக்கு 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்' குறித்த அறிவிப்பை வெளியிட்டு, உடனடியாக அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது!''

அடுத்த கட்டுரைக்கு