Published:Updated:

ஜெயலலிதாவின் வேதா நிலையம்: `உண்மையிலே நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ -தீபா, தீபக்கின் ரியாக்‌ஷன் என்ன?

‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை அவரின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து இருவரும் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய அவர்களிடம் பேசினோம்.

சென்னை போயஸ் கார்டனில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வேதா நிலையம் இல்லத்தையும் அங்குள்ள அசையும் சொத்துகளையும் அரசுடைமையாக்கியது முந்தைய அ.தி.மு.க அரசு. இதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கு இழப்பீட்டுத் தொகையாக 67.9 கோடி ரூபாய் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இவற்றை எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் `ஜெயலலிதா-வின் வேதா இல்லம் தனிநபர் சொத்து என்பதால் அதைக் கையகப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை. வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட எங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி இழப்பீட்டுத் தொகையை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்தியது தவறு. எனவே, வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தைச் செல்லாததாக அறிவிக்க வேண்டும்’ என அந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. `மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்னதாக அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டதாகவும், அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்ட காலங்களில் மனுதாரர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்ததில்லை எனவும் அரசுத் தரப்பில் எதிர்வாதமாக வைக்கப்பட்டது.

ஜெயலலிதா இல்லம்
ஜெயலலிதா இல்லம்

அரசு, மனுதாரர் தரப்பு வாதங்களைப் பதிவுசெய்த சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (24.11.2021) அன்று `வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கிய அரசின் உத்தரவு செல்லாது. ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களுக்குள் வேதா இல்லத்தை ஒப்படைக்க வேண்டும்' எனச் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

வேதா இல்லம்: `நீதிமன்றத்தில் ரூ.68 கோடி டெபாசிட்!’ - அரசுடமையானது ஜெ. வாழ்ந்த வீடு

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெ.தீபாவிடம் கேட்டோம். ``நியாயமான, நேர்மையான இந்தத் தீர்ப்பை மகிழ்வுடன் வரவேற்கிறேன். இவ்வளவு விரைவாக இப்படித் தீர்ப்பு கிடைக்குமென உண்மையிலேயே நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த வழக்கு முறைப்படிதான் நடந்தது. அதில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. அ.தி.மு.க தரப்பிலிருந்து இனி இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டுக்குச் செல்ல முடியாது. அரசுதான் மேல்முறையீடு செய்ய முடியும். தி.மு.க அரசு மேல்முறையீட்டுக்குச் செல்லாது என எதிர்பார்க்கிறோம். அதற்கான காலம் எடுக்கும். தீபக்கிடம் தீர்ப்பு குறித்துப் பேசினேன். அவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார். வேதா இல்லத்தின் சாவியைப் பெறுவதோடு எங்கள் கடமை முடிந்துவிடாது. அதற்கு இன்னும் நிறைய சம்பிரதாயங்கள் உள்ளன. அ.தி.மு.க கட்சி சார்பில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. வேதா நிலையம் இல்லத்தை அ.தி.மு.க-வின் கோயில் எனச் சில அமைச்சர்கள் கூறியுள்ளனர். அவர்களின் உணர்வைப் புண்படுத்த விரும்பவில்லை. மூன்று வாரங்களுக்குள் சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இன்னும் மூன்று வாரங்களுக்குள் கண்டிப்பாக வேதா நிலையம் இல்லத்துக்குள் செல்ல முடியும் என நாங்கள் நினைக்கவில்லை. வருமான வரி உள்ளிட்ட சில வரிகள் செலுத்த வேண்டும்.

வேதா இல்லம் - ஜெ.தீபா
வேதா இல்லம் - ஜெ.தீபா

சட்டரீதியில் இன்னும் சில விஷயங்களைச் செய்த பின்னரே வீட்டுக்குச் செல்ல முடியும். அனைத்து சட்டரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் சில சடங்குகளைச் செய்துவிட்டு தை மாதம் வீட்டுக்குச் செல்ல முயற்சிகள் எடுப்போம்” என்றார். தீபக்கைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரின் எண் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. குறுந்தகவல் அனுப்பியிருக்கிறோம். பதிலளிக்கும்பட்சத்தில் அவரின் உணர்வுகளையும் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு