Published:Updated:

பொதுக்குழுவில் மட்டும் ஓ.பி.எஸ்-ஸைப் பேச அனுமதித்திருந்தால்... ஜே.சி.டி.பிரபாகர் பொளேர்!

ஜே.சி.டி.பிரபாகர்
பிரீமியம் ஸ்டோரி
ஜே.சி.டி.பிரபாகர்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் படத்திறப்புவிழாவில், அவரை வாழ்த்தி ஓ.பி.எஸ் பேசியதைத்தான் ‘துரோகம்’ என அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொதுக்குழுவில் மட்டும் ஓ.பி.எஸ்-ஸைப் பேச அனுமதித்திருந்தால்... ஜே.சி.டி.பிரபாகர் பொளேர்!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் படத்திறப்புவிழாவில், அவரை வாழ்த்தி ஓ.பி.எஸ் பேசியதைத்தான் ‘துரோகம்’ என அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Published:Updated:
ஜே.சி.டி.பிரபாகர்
பிரீமியம் ஸ்டோரி
ஜே.சி.டி.பிரபாகர்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை என்ற லட்சியத்தோடு, அடுத்த பொதுக்குழுவுக்கு நாள் குறித்து தீயாக வேலைசெய்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதேவேளையில், ‘சில சுயநலவாதிகள் ஒற்றைத் தலைமைப் பிரச்னையை எழுப்புகிறார்கள்’ என இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இரு தரப்புமே தங்கள் நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவராமல் மோதிக்கொள்வதால், அ.தி.மு.க-வில் அனல் பறக்கிறது. இந்தச் சூழலில், பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஜே.சி.டி.பிரபாகரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``ஜூன் 14-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான், ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. இதை முன்கூட்டியே அறிந்திருந்தீர்களா?’’

``அந்தக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமைப் பிரச்னை வருவது எங்கள் யாருக்குமே தெரியாது. ஓ.பி.எஸ் அதிர்ச்சியடைந்துவிட்டார். கூட்டத்தில் நான் பேசுகிறபோது, ‘ஒற்றைத் தலைமை விவகாரம் அஜண்டாவிலேயே கிடையாது. புதிது புதிதாகப் பிரச்னைகளை உருவாக்காதீர்கள். இது கட்சியை பேராபத்துக்குக் கொண்டுபோய்விடும்’ என எச்சரித்தேன். ஜூன் 8-ம் தேதிதான், ‘அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை இல்லை’ என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் சொன்னார். ஆனால் ஒரு வாரத்துக்குள்ளேயே, அதாவது ஜூன் 14-ம் தேதி ஒற்றைத் தலைமை விவகாரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுப்பப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. கூட்டம் முடிந்து நாங்கள் காரில் ஏறியவுடன், ‘என்ன இப்படிப் பண்றாங்க?’ என்று ஓ.பி.எஸ் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏற்கெனவே முடிவு செய்துவிட்டுத்தான், ஒற்றைத் தலைமை விவகாரத்தை அந்தக் கூட்டத்தில் எழுப்பியிருக்கிறார்கள்.’’

``நிறைவேற்றப்படுவதாக இருந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்திருக்கிறதே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``பொதுக்குழு யார் வீட்டுச் சொத்து... என்ன தீர்மானங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன என்பது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தீர்மானக்குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்குமே தெரியாது. இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் வைத்துப் பேசும்போது, முதல் தீர்மானத்தை முன்மொழிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஸை அழைக்க வைகைச்செல்வன் முனைந்தார். அதற்குள்ளாக சி.வி.சண்முகம் முந்திக்கொண்டு, ‘அனைத்துத் தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்... நிராகரிக்கிறோம்...’ என மைக்கில் கத்தினார். கழகப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஓ.பி.எஸ் பேசியிருந்தால், ‘நான் என்ன தீங்கு செய்தேன்... கட்சிக்காக விட்டுக்கொடுத்தது தவறா?’ எனக் கேள்வி எழுப்பியிருப்பார். இது தொண்டர்கள், நிர்வாகிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அது நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், 23 தீர்மானங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னதாகவே அவற்றை நிராகரித்ததாகக் கூறிவிட்டனர். அ.தி.மு.க வரலாற்றில் இதுபோல, எந்தப் பொதுக்குழுவிலும் அநாகரிகங்கள் அரங்கேறியதில்லை. ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டிலை வீசியெறிந்து தாக்கியிருக்கிறார்கள். பொதுக்குழுவுக்கே சம்பந்தமில்லாதவர்களையெல்லாம் அழைத்து வந்து கூச்சல் போடவைத்திருக்கிறார்கள். பொருளாளரான ஓ.பி.எஸ் கட்சியின் வரவு - செலவுக் கணக்கைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் ஒரே நோக்கம், ஒற்றைத் தலைமைத் தீர்மானத்தைக் கொண்டுவந்து விவாதிப்பதில்தான் இருந்தது. ஆனால், இவை அத்தனையையும் புன்முறுவலோடு அமைதியாகக் கடந்துசென்றுவிட்டார் ஓ.பி.எஸ்.’’

``` ‘ஓ.பி.எஸ் துரோகம் செய்துவிட்டார்’ என்றொரு கருத்து எடப்பாடி தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறதே?’’

``மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் படத்திறப்புவிழாவில், அவரை வாழ்த்தி ஓ.பி.எஸ் பேசியதைத்தான் ‘துரோகம்’ என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சட்டமன்றத்தில், தி.மு.க அரசை வாழ்த்தி செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்கூடத்தான் பேசியிருக்கிறார்கள். நாடாளுமன்றக்குழு தமிழ்நாடு வந்திருந்தபோது, அவர்களுடன் சென்ற ஓ.பி.ரவீந்திரநாத், மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினைப் பார்த்தார். அதற்காகவெல்லாம், துரோகி பட்டம் சுமத்துவது அபத்தமான குற்றச்சாட்டு. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை, துரோகமும் செய்யவில்லை. தி.மு.க-வுடன் உறவாடவும் இல்லை. ஓ.பி.எஸ்-ஸை அரசியல்ரீதியாக வீழ்த்த முடியாதவர்கள் தூக்கும் மழுங்கிப்போன ஆயுதம்தான் இந்த ‘துரோகி’ குற்றச்சாட்டு.’’

பொதுக்குழுவில் மட்டும் ஓ.பி.எஸ்-ஸைப் பேச அனுமதித்திருந்தால்... ஜே.சி.டி.பிரபாகர் பொளேர்!

``கட்சிக்குள் சாதிரீதியாக பிளவு ஏற்பட்டிருக்கிறதே... பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தீர்களா?’’

``நானும் பார்த்தேன். இது எனக்குக் கவலை அளிக்கிறது. சாதி அரசியல் ஒருபோதும் அ.தி.மு.க-வில் வென்றது கிடையாது. மாநிலங்களவைக்கான இரண்டு இடங்களுக்கு ஆலோசனை நடந்தபோது, ‘தென் மாவட்டத்திலிருந்து தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்யுங்கள். வட மாவட்டத்திலிருந்து ஒருவரை நான் தேர்வு செய்கிறேன்’ என ஓ.பி.எஸ்-ஸிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அப்போதுகூட, ‘ஏன், ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து தேர்வு செய்ய வேண்டும்... இதில் நாம் சாதி பார்க்கக் கூடாது’ என மறுத்தார் ஓ.பி.எஸ். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒத்துக்கொள்ளவி ல்லை. இதனால்தான், ஒன்றியச் செயலாளரான தர்மருக்கு வாய்ப்பளித்தார் ஓ.பி.எஸ். கீழ்மட்ட நிர்வாகி ஒருவருக்கு ஓ.பி.எஸ் வாய்ப்பளித்ததை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை. இன்று தனக்கு எம்.பி பதவி கிடைக்கவில்லை என்கிற வருத்தத்தில் வரைமுறை இல்லாமல் பேசும் ஜெயக்குமார், தனக்கு ஏன் பதவி தரவில்லை என எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும்.’’

`` ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே காலாவதியாகிவிட்டன’ என சி.வி.சண்முகம் கூறியிருக்கிறாரே?’’

``கட்சியில், புதிது புதிதாகச் சட்டங்களை உருவாக்குகிறார் சி.வி.சண்முகம். இந்தச் சட்ட விவாதங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்திருக்கிறோம். இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். சண்முகம் சொல்வதுபோல, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிடவில்லை. அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர்கள் சொல்லிக்கொள்வதும் செல்லாது. அந்தத் தேர்வுக்கென சில நடைமுறைகள் இருக்கின்றன. நாங்கள் அனைத்தையும் சட்டரீதியாகச் சந்திக்கவிருக்கிறோம்.’’

‘` `ஜூலை 11-ம் தேதி அறிவித்தபடி பொதுக்குழு நடைபெறும்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாகக் கூறுகிறார்களே?’’

``அந்தப் பொதுக்குழு அறிவிப்பே செல்லாது. கட்சியின் சட்டவிதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியும். சட்டத்துக்குப் புறம்பாக இவர்கள் அப்படிக் கூட்டினால், அது பொதுக்குழு அல்ல, வெறும் பொதுக்கூட்டம்தான்.’’

``பா.ஜ.க-விடம் நீங்கள் உதவி கேட்டதாகக்கூடத் தகவல்கள் வருகின்றன. அது உண்மையா?’’

``பா.ஜ.க-விடம் நாங்கள் முறையிடவுமில்லை. அவர்கள் எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிடவுமில்லை.’’