Published:Updated:

`பா.ஜ.கவுக்கு குமாரசாமி ஆதரவு?’ - கர்நாடக ம.ஜ.த திடீர் பல்டி

சத்யா கோபாலன்

பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக ம.ஜ.த தலைவர் பேசியுள்ளது கர்நாடக அரசியலில் புது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பா- குமாரசாமி
எடியூரப்பா- குமாரசாமி

கர்நாடகாவில் நடந்து வந்த ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இல்லாததால் சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததில் தொடங்கிய அரசியல் குழப்பம் நீண்ட சமாதான போராட்டத்துக்குப் பிறகு ஆட்சி கவிழ்ப்பில் முடிவுற்றது.

குமாரசாமி
குமாரசாமி

இதையடுத்து, அதிக இடங்களைக் கொண்ட பா.ஜ.க ஆட்சியமைக்க நேற்று ஆளுநரிடம் உரிமை கோரியது. நேற்று மாலை 6 மணிக்கு பா.ஜ.க-வின் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். `வரும் திங்கள் கிழமை கர்நாடக சட்டசபையில் என் பெரும்பான்மையை நிரூபிப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கர்நாடகாவில் உள்ள தாஜ் ஹோட்டலில் மதச்சார்பற்ற எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆட்சி கவிழ்ப்பு, அடுத்தகட்ட நகர்வு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ம.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் ஜி.டி தேவகவுடா, `` 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ம.ஜ.தவை, பா.ஜ.க-வின் பி (B) டீம் என காங்கிரஸ் விமர்சித்தது. காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டனர்.

ஜி.டி தேவகௌடா
ஜி.டி தேவகௌடா
Twitter/@GTDevegowda

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க-வுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என சில எம்.எல்.ஏ-க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருப்பதா அல்லது ஆளும் கட்சியான பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுவதா என்பதை குமாரசாமிதான் முடிவு செய்ய வேண்டும். அவரின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியைச் சேர்ந்த 34 எம்.எல்.ஏ-க்களும் ஒற்றுமையாக இருந்து குமாரசாமிக்கு ஆதரவு அளிப்போம்.

`தேர்தலின்போது நாம் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருப்பதாக நினைத்து, மக்கள் நமக்கு வாக்களித்தனர். ஆனால், நாம் அவர்களை ஏமாற்றிவிட்டோம். இப்போதாவது நாம் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என சில எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர். இனி அனைத்தும் குமாரசாமியின் கைகளில்தான் உள்ளது. ஆதரவு தெரிவிப்பது பற்றி இதுவரை பா.ஜ.க-விடம் எதுவும் பேசவில்லை. இது எம்.எல்.ஏ-க்களின் கருத்து மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.

குமாரசாமி
குமாரசாமி

கடந்த வாரம் வரை தன் கட்சி எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரம் மூலம் பா.ஜ.க இழுத்து வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய ம.ஜ.த-வின் இந்த முடிவு கர்நாடக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, ‘ இந்த முதல்வர் இருக்கை யாருக்கும் நிரந்தரம் இல்லை. இதுவரை 23 முதல்வர்கள் இதில் அமர்ந்து ஆட்சி செய்துள்ளனர். அரசியலில் எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என குமாரசாமி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.