Published:Updated:

‘‘ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்கும்!’’

ஜீவஜோதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீவஜோதி

- புதிய அரசியல்வாதி ஜீவஜோதி

ஜீவஜோதியை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிட முடியாது. 2001-ல், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானலில் கொலைசெய்யப்பட்டார். ‘இந்தக் கொலையைச் செய்தது சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்தான்’ என்று புகார் கொடுத்ததுடன், கடும் சட்டப்போராட்டம் நடத்தி ராஜகோபாலுக்கு தண்டனையையும் பெற்றுத்தந்தவர் ஜீவஜோதி. இதற்கிடையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தவர், தற்போது பா.ஜ.க-வில் சேர்ந்ததால் பொதுத்தளத்துக்கு வந்துள்ளார்.

‘‘என் கணவர் கொலைக்குப் பிறகு, ஒரு பெண்ணாக பல போராட்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தேன். ஆரம்பத்தில் வீட்டிலேயே அழுதுகொண்டு முடங்கிக் கிடந்தேன். என் சூழல் உணர்ந்த அப்போதைய உதவி ஆணையர் ராமச்சந்திரன் சார்தான் மகளிர் தையலகம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். இப்போது மணப்பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் வடிவமைப்பை பெரியளவில் செய்துவருகிறேன். இதில் நிறைவான வருமானமும் கிடைக்கிறது.

அசைவ உணவுகளை அம்மா பிரமாதமாகச் சமைப்பார். ஏற்கெனவே சிறியளவில் ஹோட்டல் நடத்திவந்தோம். இப்போது வேறு இடத்தில் கொஞ்சம் பெரியளவில் மறைந்த அப்பா ராமசாமி பெயரிலேயே தொடங்கிவிட்டோம். அம்மாவும் தம்பியும் இதைக் கவனித்துவருகின்றனர்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘தண்டனையை அனுபவிக்காமலேயே சரவணபவன் ராஜகோபால் இறந்துவிட்டார் எனக் கூறினீர்களே?’’

‘‘என் கணவர் கொலை வழக்கில், நான் எதிர்பார்த்தபடியே சிறப்பான தீர்ப்பு வந்தது. ராஜகோபால் கொஞ்சகாலமாவது அந்தத் தண்டனையை அனுபவித்திருந்தால், நான் பட்ட கஷ்டங்களுக்கு மருந்தாக இருந்திருக்கும். ஒருமுறை நீதிபதியே ராஜகோபாலைப் பார்த்து, ‘ஒரு நாள்கூட சிறையில் இருக்க மாட்டீங்களா?’ என்று கோபமாகக் கேட்டார். நீதிபதிக்கே அந்த ஆதங்கம் இருந்ததென்றால், எனக்கு எவ்வளவு ஆதங்கம் இருக்கும்!’’

‘‘உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?’’

‘‘எனக்கு என் மாமியாரையும் சேர்த்து இரண்டு அம்மாக்கள். என் கணவர் பாண்டு என்கிற தண்டபாணி, என் முயற்சிகளுக்கு முழுமையாக சப்போர்ட் செய்பவர். அவர் இல்லையென்றால் நான் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது. மகன் பவின், ஆறாம் வகுப்பு படிக்கிறான். என் அம்மா என்னை எதிலும் விட்டுக்கொடுக்க மாட்டார். ‘அக்கா... அக்கா’ என என்னையே சுற்றிச் சுற்றி வரும் பாசமான தம்பி. இவர்கள்தான் என் உலகம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றனவே?’’

‘‘ஆம், பாஜ.க-வில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்துவிட்டேன். அதிகாரபூர்வமான இணைப்புக்கான நிகழ்ச்சி, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும். நான் கட்சியில் இணைந்ததற்கு பா.ஜ.க-வின் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம்தான் முக்கிய காரணம்.’’

ஜீவஜோதி
ஜீவஜோதி

‘‘அரசியல்மீது ஆர்வம் வந்தது எப்படி?’’

‘‘ஆரம்பத்திலிருந்தே எனக்கு அரசியல்மீது பெரிய ஆர்வம் உண்டு. டி.வி பார்த்தாலும், செய்தித்தாள் படித்தாலும் அதில் அரசியல் தொடர்பான செய்திகளைத்தான் விரும்புவேன். ஜெயலலிதா அம்மாவை எனக்குப் பிடிக்கும். அவரின் ஆளுமையைப் பார்த்து நான் வியந்துள்ளேன்.’’