ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. இவரின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜெகன்மோகன் ரெட்டி, புதிதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். தற்போது ஆந்திர முதல்வராக இருக்கிறார். இவரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா. முதலில் இருவரும் ஒன்றாக இருந்தனர். கடந்த 2013-ம் ஆண்டு ஜெகன் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்தபோதும், ஒய்எஸ்ஆர் கட்சி தொடங்கும்போதும் ஷர்மிளா ஆந்திராவில் பாத யாத்திரை நடத்தினார்.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதும் ஜெகனுக்காகப் பிரசாரம் செய்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சரவையில் ஷர்மிளா இடம்பெறவில்லை. ராஜ்ய சபா சீட்டும் கிடைக்கவில்லை. மேலும் தெலங்கானாவிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க ஷர்மிளா திட்டமிட்டார். இதில் ஜெகனுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ஷர்மிளா கடந்த ஆண்டு `ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி’யை (ஒய்எஸ்ஆர்டிபி) தொடங்கினார். அப்போது அவர், "2023-ல் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு முக்கியப் போட்டியாளராகத் தனது ஒய்எஸ்ஆர்டிபி கட்சி இருக்கும். தெலங்கானா மாநிலத்தில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனது கட்சி போட்டியிடும்" எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து பலரும் ஷர்மிளாவை பாஜக-வின் `பி’ டீம் என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால், மறுபுறம் அண்ணனுக்கு ஆந்திரம், தங்கைக்கு தெலங்கானா என்ற கணக்கு இருப்பதாகவும் பேச்சும் அடிபடுகிறது.
தெலங்கானாவில் தன் ஆதரவாளர்களைக்கொண்டு ஜெகன் அரசியல் செய்ய நினைத்தால், ஆந்திரத்திலுள்ள சந்திரசேகர ராவின் ஆதரவாளர்களும் அதையே செய்யக்கூடும். ஏற்கெனவே சந்திரபாபு - ஜெகன் இடையே மோதல் இருந்துவரும் நிலையில் இது மேலும் வலுவடையும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் ஷர்மிளா கவலைகொள்வதாகத் தெரியவில்லை. தீவிரமாகப் பாத யாத்திரை மேற்கொண்டுவருகிறார். அவ்வாறு செல்லும்போது ஆளுங்கட்சியான டிஆர்எஸ் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளைச் சுமத்திவருகிறார். இதற்கு சந்திரசேகர ராவ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில், வாராங்கல்லில் ஷர்மிளா பயன்படுத்தும் கேரவன் பேருந்து மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
மேலும் அதற்குத் தீ வைத்தனர். இந்தச் சம்பவத்தின்போது ஷர்மிளா பேருந்தில் இல்லை. இதனால் இரண்டு கட்சித் தொண்டர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதற்கு பதிலளித்த ஷர்மிளா, ``பாத யாத்திரையை நிறுத்தவே பேருந்தை முதல்வர் சந்திரசேகர ராவ் தீயிட்டுக் கொளுத்தி பயமுறுத்துகிறார். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் எனது பாத யாத்திரை தொடரும்” எனக் கூறியிருக்கிறார்.

மேலும் இந்தச் சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, ஹைதராபாத்திலுள்ள முதல்வர் சந்திரசேகர ராவின் இல்லமான பிரகதி நோக்கி காரில் ஒய்.எஸ்.ஷர்மிளா, கடந்த நவம்பர் 30-ம் தேதி சென்றார். அப்போது மோதலில் சேதப்படுத்தப்பட்ட காரை ஓட்டிக்கொண்டு சென்றார். இது பற்றித் தகவலறிந்த போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தினர். மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் திரும்பிச் செல்லும்படி கூறினர். ஆனால் ஷர்மிளா கேட்கவில்லை.
மேலும் காரிலிருந்து இறங்குவதற்கும் மறுத்துவிட்டார். இதையடுத்து கிரேனைக் கொண்டுவந்த போலீஸார் அவரின் காரை ‛டோவ்' செய்து போலீஸ் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். காரோடு அவரை போலீஸார் கிரேன் மூலம் ‛டோவ்' செய்து தூக்கிச் சென்றனர். இதனால் அவரின் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரின் காருக்குப் பின்னால் ஓடினர்.
இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகிவருகிறது. இது குறித்து அறிந்த ஷர்மிளாவின் தாய் விஜயலட்சுமி போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார். தகவலறிந்த போலீஸார் அவரையும் வீட்டைவிட்டு வெளியேற விடாமல் தடுத்து வீட்டுக் காவலில் வைத்தனர். இது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் காலங்களில் இந்தப் பிரச்னை மேலும் தீவிரமடையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.