Published:Updated:

`தேசியவாத சிந்தனை; `டாப்' தலைவர்களுடன் டச்' - பி.ஜே.பி-யில் இணைகிறாரா தோனி?

தோனி
தோனி ( Twitter )

தோனியை மட்டும் சேர்த்துவிட்டால் அது வின்னிங் பாயின்டாக மாறிவிடும். அவரது பாப்புலாரிட்டியை வைத்து கண்டிப்பாக எதிர்க்கட்சிகளை தேர்தல் ரேஸில் தவிடுபொடியாக்கிவிடலாம் எனக் கணக்கு போடுகிறதாம் பி.ஜே.பி.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி முதல் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மீதான விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அவரது `ஸ்லோ' இன்னிங்ஸால் இந்திய அணி டெத் ஓவர்களில் தடுமாறுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுகிறது. பினிஷிங்கில் தடுமாறுகிறார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக விளையாடிவருகிறார் தோனி. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியை விமர்சித்த முன்னாள் வீரர் சச்சின் அடுத்தடுத்த ஆட்டங்களில் அவரது செயல்பாடுகளைப் பாராட்டினார்.

தோனி
தோனி
AP

இந்த நிலையில்தான், தோனியின் ஓய்வு முடிவு குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்த வண்ணம் இருந்தன. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்குக் கடைசிப் போட்டி எதுவோ அதுவே தோனியின் கடைசிப் போட்டி என்ற தகவல்கள் பரவின. ஆனால் தோனியோ, ``நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது குறித்து தெரியாது. ஆனால், நான் ஓய்வுபெற வேண்டும் எனப் பலர் நினைக்கிறார்கள். அதுவும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாகவே ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

தோனியின் ஓய்வுப் பேச்சு இப்படி ஓடிக்கொண்டிருக்கிற நிலையில், இன்னொருபுறம் அவர் அரசியலில் கால்பதிக்க உள்ளார் எனத் தகவல்களும் வெளியாகியுள்ளன. தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் பி.ஜே.பி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி வரும் டிசம்பருடன் முடிகிறது. ஆனால், அக்டோபரில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அப்போதே ஜார்க்கண்ட்டுக்கும் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலுக்குதான் தோனியை இழுக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாக deccan chronicle தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மீண்டும் தங்கள் ஆட்சியை தக்கவைத்துகொள்ள நினைக்கும் பி.ஜே.பி, தோனியை தனது பிரசார முகமாக பயன்படுத்திகொள்ள ஆசைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தோனி
தோனி
AP

``தோனியை மட்டும் சேர்த்துவிட்டால், அது வின்னிங் பாயின்டாக மாறிவிடும். அவரது பாப்புலாரிட்டியை வைத்து கண்டிப்பாக எதிர்க்கட்சிகளை தேர்தல் ரேஸில் தவிடுபொடியாக்கிவிடலாம்" எனக் கணக்கு போடுகிறதாம் பி.ஜே.பி. ஒருவேளை அவர் கட்சியில் சேர மறுப்பு தெரிவித்துவிட்டாலும், பிரசாரம் மட்டும் அவரை செய்யவைக்கலாம் என்றும் அம்மாநில பி.ஜே.பி திட்டம்போடுகிறது என்றும், இதுதொடர்பாக பி.ஜே.பி-யின் `டாப்' தலைவர்கள் தோனியுடன் டச்சில் உள்ளதாக விவரிக்கிறது அந்த செய்தித் தொகுப்பு. இப்போதைக்கு ஓய்வு பெறவில்லை என்று தோனி கூறினாலும், ``எப்போது ஓய்வு பெற்றாலும் பி.ஜே.பி-க்கு அவர் உதவுவார்" என நம்பிக்கொண்டிருக்கிறதாம் மாநில தலைமை.

``ஓய்வா... ஸாரி, நான் இன்னும் அத பத்தி யோசிக்கவே இல்ல பாஸ்!” - கூல் `தோனி’

இதுதொடர்பாக பேசியுள்ள பி.ஜே.பி மூத்த நிர்வாகி ஒருவர், ``தோனி அரசியலில் சேர விருப்பம் காட்டியுள்ளார். இதற்காக அவருடன் தொடர்பில் இருக்கிறோம். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர், அவர் கட்சியில் சேருவார். சேரும் தேதி தோனியாலேயே தீர்மானிக்கப்படும். பி.ஜே.பி தேசியவாதத்தை நம்புகிறது என்பதால் அவர் பி.ஜே.பி-யில் இணைகிறார். அவருக்கும் தேசியவாதத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. அதற்கு சான்றுதான் நடந்துவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தேசியவாதத்தை பிரதிபலிக்கும் வகையில் நமது ராணுவத்தின் சிம்பளை கீப்பிங் கிளவ்சில் அணிந்திருந்தார் தோனி.

தோனி
தோனி
AP

தனது தேசியவாத சித்தாந்தத்துக்குப் பாதிக்காமல் சமூகத்துக்கு பங்களிக்கக்கூடிய வகையில் உழைத்து வரும் ஒரே கட்சி பா.ஜ.க மட்டுமே. இதில் தோனியால் இணைந்து பணியாற்ற முடியும்" எனக் கூறி நெருப்பை பற்றவைத்துள்ளனர். மோடியையும், தோனியையும் காண்பித்தே இந்தத் தேர்தலை சந்திக்க ஜார்க்கண்ட் பி.ஜே.பி திட்டமிட்டுள்ளதாக விவரிக்கும் இந்தச் செய்தித்தொகுப்பு, கடந்த வருடம் அமித் ஷா, பியூஸ் கோயல் ஆகியோர் தோனியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்ததையும் மேற்கோள்காட்டியுள்ளது. ஆனால், `கூல் கேப்டன்' தோனி பி.ஜே.பி-யில் சேருவரா அல்லது இது வெறும் வதந்தியா என்பது இனிவரும் நாள்களில்தான் தெரியவரும். ஒருவேளை வதந்தியாக இருக்கும்பட்சத்தில் இந்த விவகாரத்தை அவர் எப்படி கையாளப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் இப்போதே எழுந்துள்ளது.

news credit- deccanchronicle

அடுத்த கட்டுரைக்கு