Published:Updated:

`புதிய அத்தியாயம் தொடங்குகிறது!' - ஜார்க்கண்டில் பா.ஜ.கவை வீழ்த்திய ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதிவியேற்கவுள்ளார்.

 ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன் ( ANI )

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பின்னடைவைச் சந்தித்துள்ளது. ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சிதான் ஜார்க்கண்டில் நடந்து வந்தது. ரகுபர் தாஸின் பதவிக்காலம் ஜனவரி 5-ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. தேர்தல் ரேஸில் பா.ஜ.க தனித்துக் களமிறங்கியது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் களம்கண்டன. ஜார்க்கண்ட் சிறிய மாநிலம் இங்கு மொத்தமே 81 தொகுதிகள்தாம் உள்ளன. 41 இடங்களைக் கைப்பற்றும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

வாக்கு எண்ணிக்கை..!
வாக்கு எண்ணிக்கை..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் வாக்குகள் அதிகம். இந்த மாநிலத்தில் மொத்தம் 28 ரிசர்வ் தொகுதிகள் உள்ளன. இதைக்கருத்தில் கொண்டே ரகுபர் தாஸ் அரசு, பழங்குடியின மக்களுக்காக நிறைய திட்டங்களை முன்னிலைப்படுத்தியது. பழங்குடியின மக்களின் கல்விக்காக உதவித்தொகை, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.1 லட்ச ஊக்கத்தொகை வழங்கியது. ரிசர்வ் தொகுதிகளைக் கைப்பற்றினால் மெஜாரிட்டி பெற்றுவிடலாம் என்பது பா.ஜ.க கணக்காக இருந்தது. 28 ரிசர்வ் தொகுதிகளில் 22 தொகுதிகளை பா.ஜ.க-வினர் டிக் செய்திருந்தனர்.

சிறிய மாநிலமாக இருந்தாலும் பா.ஜ.கவுக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி கவனம் இருந்தது. இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து, இரண்டு அணிகளும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. இருந்த போதிலும் மூன்று சுற்றுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றிய தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க 28 இடங்களையும் மற்ற கட்சிகள் 11 இடங்களையும் பெற்றுள்ளன.

ரகுபர் தாஸ்
ரகுபர் தாஸ்

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பா.ஜ.க ஆட்சியை இழந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து தேர்தல் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த ,``இந்த நாளிலிருந்து புதிய அத்தியாயம் தொடங்குகிறது. ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு புதிய மைல்கல். வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, 5 ஆண்டுக்கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த முதல், முதலமைச்சர் ரகுபர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் ஆளுநரை நேரில் சந்தித்த முதலமைச்சர் ரகுபர் தாஸ், தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.