Published:Updated:

`ஐ.ஏ.எஸ் கனவை உதறிவிட்டு அரசியல்; 31 வயதில் எம்.எல்.ஏ!'- யார் இந்த அம்பா பிரசாத்?

`என் தந்தை அரசியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். அவரை தேர்தலிலிருந்து விலகி வைக்க சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன.'

அம்பா பிரசாத்
அம்பா பிரசாத்

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 31 வயதான அம்பா பிரசாத். ஐ.ஏ.எஸ் கனவுகளை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தவர் அம்பா பிரசாத். ஜார்க்கண்ட் அரசியல் களம் ஒன்றும் இவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. தந்தை, தாய் இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினருக்காக சட்டப் போராட்டத்தைக் கையிலெடுத்தார். இவரது அரசியல் பயணத்துக்கு இதுவே அடித்தளமானது.

அம்பா பிரசாத்தின் தந்தையான யோகேந்திரா பிரசாத் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் பார்காகோ தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். ஹேமந்த் சோரன் ஆட்சியில் மந்திரிப் பதவி இவரைத் தேடிவந்தது. அதனால், 2013-ம் ஆண்டு விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அம்பா பிரசாத்
அம்பா பிரசாத்

அரசியல் வருகை

யோகேந்திரா பிரசாத்துக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையேயான உறவு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அமைச்சர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. 2014-ம் ஆண்டு அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். யோகேந்திராவுக்கு எதிராக மட்டும் இதுவரை 24 வழக்குகள் பதிவாகியுள்ளன. யோகேந்திராவுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது மனைவி நிர்மலா தேவி களமிறக்கப்பட்டார். அதுவரை அரசியல் வாசமே இல்லாமல் இருந்த அம்பா பிரசாத் அம்மாவுக்கு உதவியாக தேர்தல் பணி செய்வதற்காக ஜார்க்கண்ட் வந்தார். அப்போது அவர் டெல்லியில் சட்டப்படிப்பு முடித்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். குடும்பச் சூழல் ஜார்க்கண்ட் அரசியல் நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் அவர் மீண்டும் டெல்லி செல்லவில்லை.

பார்காகோ துப்பாக்கிச்சூடு!

பார்காகோ தொகுதியில் போட்டியிட்ட நிர்மலா தேவி வெற்றிபெற்றார். பார்காகோ சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மின் உற்பத்திக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் மாநில அரசு ஈடுபட்டது. மக்களிடமிருந்து நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு எடுத்துக்கொண்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கவில்லை. இதை எதிர்த்து, நிர்மலா தேவி தலைமையில் 2016-ம் ஆண்டு யோகேந்திரா பிரசாத் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இது பார்காகோ துப்பாக்கிச்சூடு என ஜார்க்கண்ட் மக்களால் அறியப்படுகிறது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மாநிலத்திலே இருக்கக் கூடாது!

இந்த வழக்கில் யோகேந்திரா பிரசாத், நிர்மலா தேவி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கிராமவாசிகள் காவல்நிலையத்துக்குள் பலவந்தமாக நுழைந்து காவல்நிலையத்திலிருந்து நிர்மலா தேவியை மீட்டனர். இதன் பின்னர், வழக்கின் விசாரணை தொடங்கியபோது, ​​நிர்மலா தேவி சித்ரவதை செய்யப்பட்டார். இந்தச் சமயத்தில்தான் பெற்றோருக்காகவும், ஜார்க்கண்ட் மக்களுக்காகவும் சட்டப் போராட்டத்தைக் கையிலெடுத்தார் அம்பா பிரசாத். உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில், `இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்’ அம்பா பிரசாத்தின் தாய், தந்தைக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அம்பா பிரசாத்தின் சகோதரரும் சிறைக்கு அனுப்பப்பட்டார். பல கடினமான சூழ்நிலைகளைத் தாண்டி நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு சகோதரனைச் சிறையிலிருந்து விடுவித்தார் அம்பா.

`கண்டிஷன் பெயில்; மாவோயிஸ்ட் குழுக்களுடன் தொடர்பு?'- தந்தை தொகுதியில் வரலாறு படைத்த அம்பா பிரசாத்!

இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து சட்ட உதவிகளைப் பெற்றுள்ளார். கடந்த நான்கு வருடங்களாகக் களத்தில் பணியாற்றி வரும் அம்பா, ஜார்க்கண்ட் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார். இவரது துடிப்பான செயல்பாடுகள் மூலம் மக்களுடன் நல்ல பெயர் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போதே இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அது உறுதியாகவில்லை. இந்நிலையில்தான் பார்காகோ தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதுகுறித்து பேசியுள்ள அம்பா பிரசாத், ‘என் தந்தை அரசியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். அவரை தேர்தலிலிருந்து விலகி வைக்கச் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. இப்படியான சூழ்நிலையில் என்னால் ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்குத் தயாராக முடியவில்லை. ஜார்க்கண்ட் திரும்ப முடிவு செய்தேன். இங்கு வந்து வழக்கறிஞராக என் பணியைத் தொடர்ந்தேன். இந்த மாநிலம் மோசமான நிலையிலிருந்தது. என் தந்தையின் விடுதலைக்காக டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினேன். இந்த வழக்கில் வாதாடுவதற்காக எனக்கு ஒரு நல்ல வழக்கறிஞரை வழங்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தேன்.

அந்த நேரத்தில்தான் கபில் சிபில், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷீத் ஆகியோரைச் சந்தித்தேன். இந்தப் பணிகளின் போது அஹமது படேல் எனக்கு நிறைய உதவிகளைச் செய்தார். என்னுடைய தந்தை குறித்த முழுத்தகவலும் ராகுலுக்குக் கிடைத்தது. சட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் ராகுல் உதவினார்.

அம்பா பிரசாத்
அம்பா பிரசாத்

எனக்குக் காங்கிரஸ் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களும் எனக்கு உதவி செய்யத் தொடங்கினர். நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கவுள்ளதாகப் பேச்சு எழுந்தது. கடைசி நேரத்தில் அது முடிவாகவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பார்காகோ தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர். களத்தில் 4 வருடமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். இங்கு இருக்கும் பெண்களின் நிலை குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் நலனுக்காகப் பாடுபடுவேன். பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக நான் பணியாற்றுவேன். இதனால் அவர்கள் தன்னம்பிக்கை அடைவார்கள்" என்கிறார் உறுதியோடு.