தமிழக காவல் துறையில் டி.ஜி.பி திரிபாதிக்கென்று தனிப்பட்ட பெயரும் புகழும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தளவுக்கு காக்கிச் சீருடையை அதிகம் நேசித்தவர் திரிபாதி ஐ.பி.எஸ். காவல்துறையின் முக்கிய பதவியாக கருதப்படும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக திரிபாதி ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக டி.ஜி.பி-யாக (சட்டம், ஒழுங்கு) இருந்த டி.கே.ராஜேந்திரன் இந்த மாதத்துடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, அடுத்த டி.ஜி.பி யார் என்ற கேள்வி தமிழக காவல்துறையில் எழுந்தது. சீனியாரிட்டி பட்டியலில் இருந்த திரிபாதி தமிழக டி.ஜி.பி-யாக டிக் செய்யப்பட்டார். காவல் துறையில் `திரிபி' என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் திரிபாதி ஐ.பி.எஸ்ஸுக்குப் பின்னால் `தில்' பக்கங்கள் உள்ளன.
திரிபாதியின் சொந்த மாநிலம் ஒடிசா. டெல்லியில் உள்ள ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 1985-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று, தமிழக காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். 9 மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றியவர் திரிபாதி.

அதன்பிறகு டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்ற அவர் திருச்சியில் கமிஷனராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு தென்சென்னை இணை கமிஷனராகப் பணியாற்றினார். ரவுடிகளுக்கு சிம்மசொப்பணமாக திகழ்ந்தார் திரிபாதி.
ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்ற திரிபாதி, காவல்துறை நிர்வாகப்பிரிவில் பணியாற்றினார். அப்போது அவரின் நிர்வாகத் திறமை வெளிப்பட்டது. தென்மண்டல ஐ.ஜி, ஆயுதப்படை, குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையகம் ஆகிய இடங்களில் பணியாற்றினார்.

ஏ.டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்ற அவர், சிறைத்துறை, சென்னை போலீஸ் கமிஷனராக இரண்டு முறை, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாகப் பணியாற்றினார். டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்ற பிறகு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றினார். தற்போது அவர் தமிழக காவல் துறையில் முக்கியப் பதவியாக கருதப்படும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அவரின் காவல்துறை நண்பர்களிடம் பேசியபோது, ``திருச்சியில் திரிபாதி பணியாற்றியபோதுதான் காவல் துறை பணியோடு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார். அதாவது, குடிசைகளைத் தத்தெடுப்பது என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். புகார் பெட்டிகளை அமைத்தார். பீட் ஆபீஸர் சிஸ்டத்தைக் கொண்டுவந்தார். அதன்மூலம் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டது. பொதுமக்கள் மத்தியில் போலீஸார் மீது மதிப்பு ஏற்பட வழிவகுத்தவர்களில் ஒருவர் திரிபாதி எனலாம். சிறைத்துறையில் திரிபாதி பணியாற்றிய காலத்தில் மகாத்மா காந்தி கம்யூனிட்டி கல்லூரிகளை முக்கிய சிறைகளில் தொடங்கினார். இதன்மூலம் சிறைக் கைதிகள் பட்டதாரிகளாகினர். அதோடு சிறைத்துறையில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார்.

கைதிகளின் நலன்சார்ந்த விஷயங்களில் அக்கறை செலுத்தினார். 2002-ம் ஆண்டு குடியரசுத் தலைவராலும் (Police medal for Meritorious service) 2001-ம் ஆண்டு இந்திய அரசு சார்பிலும் விருதுகள் (Dr. Malcom S. Adiseshiah special award) அவருக்குக் கிடைத்தது. இந்திய காவல்துறை அதிகாரிகளில் சர்வதேச விருதுகளைப் பெற்ற முதல் காவல்துறை அதிகாரி திரிபாதி.
2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ``Intenational Community Policing award" என்னும் விருது ICAP(International Association Of Chiefs of police)ஆல் வழங்கப்பட்டது. மேலும், 2002-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற விழாவில் Innovations in Governance என்னும் விருதைப் பெற்றார். தன்னுடைய பணிக்காலத்தில் முக்கியப் பதவிகளை வகித்த திரிபாதியின் சிம்ப்ளிசிட்டி காவல்துறையினருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடிக்கும்" என்றனர்.

ரவுடி வீரமணி, மணல்மேடு சங்கர், சென்னை வேளச்சேரியில் நடந்த வங்கிக் கொள்ளையர்கள் என போலீஸார் நடத்திய என்கவுன்டர்களின்போது திரிபாதியின் துப்பாக்கி மூளை பின்புலமாக இருக்கும். தைரியத்துக்குப் பெயர் போன திரிபாதி, ஜெயலலிதாவின் குட்புக்கில் நீண்டகாலமாக இடம் பிடித்தவர்.
ஐ.பி.எஸ். அதிகாரியாகுவதைவிட ஐ.ஏ.எஸ் அதிகாரியாகுவதே திரிபாதியின் சிறுவயது கனவு. அதற்கான முயற்சிகள் அவர் மேற்கொண்டபோது சிலகாரணங்களால் ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறவில்லை. இதனால் கிடைத்த ஐ.பி.எஸ். வேலையை மனநிறைவுடன் அவர் செய்து தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தினார். தமிழக காவல்துறையில் திரிபாதிக்கு என்று தனிப்பட்ட பெயர் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் பணியாற்றிய இடங்களில் பெரியளவில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்வார். நேரடியாக விசாரணையில் இறங்குவது திரிபாதியின் ஸ்டைல்.

தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பில் பணியாற்றிவரும் டி.கே.ராஜேந்திரன் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த டி.ஜி.பி-யாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நாளை பதவி ஏற்க உள்ளதாக டி.ஜி.பி. அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ள திரிபாதிக்கு நேரிலும் போனிலும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் திரிபாதிக்கு நிகர் திரிபாதி என்ற காவல்துறையில் ஒரு பேச்சு உள்ளது. தற்போது டி.ஜி.பி-யாக பதவி ஏற்கும் திரிபாதிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அதைச் சமாளிப்பாரா திரிபாதி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.