சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தமிழகமே எங்கள் உந்துசக்தி!

ஆய்ஷி கோஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆய்ஷி கோஷ்

“அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பேரச்சம் எழுந்தது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5-ம் தேதி முகமூடி அணிந்த கும்பல் ஒன்று குண்டாந்தடிகள், கூர் ஆயுதங்கள் கொண்டு மாணவிகளைத் துரத்தித் துரத்தித் தாக்கிய சம்பவம் மொத்தத் தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்தக் கும்பலின் முக்கிய இலக்கு, ஜே.என்.யூ மாணவர் பேரவைத் தலைவரான ஆய்ஷி கோஷ். மண்டை உடைக்கப்பட்டு, கை எலும்பு முறிக்கப்பட்டு, முகத்தில் குருதி வழிய... அன்றைக்கு ஆய்ஷி கோஷ் கதறிய காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. பிறகு அவர்தான் தாக்குதலுக்குக் காரணம் என்று டெல்லி காவல்துறை சொன்னதற்கு எதிராக பலத்த கண்டனங்கள் கிளம்பின. ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்னை வந்தவரைச் சந்தித்தேன்.

“கல்விக்கட்டண உயர்வுக்கு எதிரான தொடர் போராட்டத்தை நீங்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அப்படியொரு தாக்குதலை எதிர்பார்த்தீர்களா?’’

“ஜே.என்.யூ-வின் வரலாற்றில் அப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை. எங்களுக்குள் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் இருக்கும் கருத்துவேறுபாடுகள் குறித்துக் கலந்துரையாடல் நடத்துவதே ஜே.என்.யூ-வின் கலாசாரம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., இப்படிப்பட்ட வன்முறை நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, எதிர்க்குரலை நசுக்கலாம் என்று பார்க்கிறார்கள்.”

“அந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஜே.என்.யூ மாணவர்கள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள்?”

“அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பேரச்சம் எழுந்தது. நிறைய மாணவர்கள் விடுதியைக் காலிசெய்து ஊருக்குச் சென்றுவிட்டு சகஜநிலை திரும்பிய பிறகுதான் பல்கலைக்கழகத்துக்கு வந்தார்கள். அதுபோன்ற மேலும் சில தாக்குதல்கள் நடைபெற்றிருந்தால், பலரும் படிப்பை நிறுத்திவிட்டு ஜே.என்.யூ-விலிருந்து சென்றிருப்பார்கள்.”

“ஜே.என்.யூ-வை மூட வேண்டும் என்று சிலர் பேசிவருகிறார்களே?”

“ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ‘ஆர்கனைசர்’, ‘பாஞ்சஜன்யா’ போன்ற பத்திரிகைகளில் இதைத் தொடர்ந்து எழுதிவருகிறார்கள்.

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ்

ஜே.என்.யூ-வைக் குண்டுவைத்துத் தகர்க்க வேண்டும் என்றுகூட அவர்கள் எழுதினார்கள். ஜே.என்.யூ என்பது ஓர் அற்புதமான சிந்தனைக்களம். பட்டியலின சாதியினர், பழங்குடியினர், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்கள், பெண்கள், பல மொழிகளையும் பேசுபவர்கள் எனப் பலரின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றும் இடமாக ஜே.என்.யூ இருக்கிறது. இந்தப் பன்மைத்துவம்தான், ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே கலாசாரத்தை வலியுறுத்து பவர்களுக்கு உறுத்துகிறது.”

“ஆர்.எஸ்.எஸ்ஸும்., பா.ஜ.க-வும்தான் அந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று எப்படிக் குற்றம் சாட்டுகிறீர்கள்?”

“ஏ.பி.வி.பி என்பது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் பிரிவு. வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி, திட்டமிட்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் அவர்கள்தான். இதில் என்ன கொடுமையென்றால், அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜே.என்.யூ-வில் பேராசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டதுதான். அதை எதிர்த்து ஜே.என்.யூ-வில் உள்ள பல துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்தப் பணி நியமனம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட என்மீது மூன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்கள். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர்கூட இதுவரை கைதுசெய்யப்படவில்லை. மேலும், ஜனவரி 5-ம் தேதி சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்ய மாட்டோம் என்று போலீஸார் அறிவித்துள்ளார்கள். அந்தத் தாக்குதலின் பின்னால் இருப்பது யாரென்பதைப் புரிந்துகொள்ள இத்தனை ஆதாரங்கள் போதாதா?”

“மத்திய பா.ஜ.க அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் எங்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தி. பெரியார் பிறந்த மண்ணில் திராவிடச் சிந்தனை எந்த அளவுக்கு வேரூன்றியுள்ளது என்பதை இங்கும் நடைபெறும் போராட்டங்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதுகூட சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி-க்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதை ஓர் அழகான விஷயமாகப் பார்க்கிறேன். இந்தச் சமூகநீதிச் சிந்தனை இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இல்லை. அந்த மாநிலங்கள் தமிழகத்திடம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.”