Published:Updated:

`முயற்சி செய்தோம்.. ஆனால் பாதுகாக்க முடியவில்லை!’ - ராஜினாமா செய்த ஜே.என்.யூ விடுதி வார்டன்

விடுதி வார்டன் கடிதம்
விடுதி வார்டன் கடிதம்

``நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், விடுதிக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை” என்று விடுதி வார்டன் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதியிலிருந்த மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், மாணவர்கள் பலரும் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தவாறு உள்ளன. இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் மூத்த விடுதி வார்டன் மீனா ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.என்.யூ
ஜே.என்.யூ

ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தில், ``சபர்மதி விடுதியின் மூத்த வார்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், விடுதிக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை” என்று எழுதியுள்ளார்.

பா.ஜ.க, ஐ.டி பிரிவின் பொறுப்பாளர் அமித் மால்வியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `வன்முறைகள் வெடிக்கும்போதெல்லாம் மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் அல்லாத இடதுசாரி செயற்பாட்டாளர் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பது எப்படி?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏ.பி.வி.பி-யின் தேசிய செய்தித் தொடர்பாளர் பேசும்போது, ``ஜே.என்.யு.எஸ்.யூ உறுப்பினர்கள் மாணவர்களை அடிப்பது மற்றும் தேர்வுகளுக்குப் பதிவு செய்யவிடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நிரூபிக்க எங்களிடம் வீடியோக்கள் உள்ளன. அவர்கள் போலிக் கதையை உருவாக்குகிறார்கள். கல்வி கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையாக இந்தப் போராட்டம் தொடங்கியது. ஆனால், வளாகத்தில் எந்தக் கல்வி நடவடிக்கையையும் அவர்கள் விரும்பவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜெகதீஷ் குமார்
ஜெகதீஷ் குமார்

இதுதொடர்பாகப் பேசிய ஜே.என்.யூ-வின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், ``அனைத்து மாணவர்களும் அமைதியைக் கடைப்பிடிக்கக் கேட்டுக்கொள்கிறேன். செமஸ்டர் தேர்வுக்காகப் பதிவு செய்ய மாணவர்களுக்கு எந்தவித இடையூறுகளும் இருக்காது. அவர்கள் இதுகுறித்துப் பயப்படத் தேவையில்லை. மாணவர்களின் கல்வி நலன்களைப் பாதுகாப்பதுக்கே பல்கலைக்கழகம் முன்னுரிமை அளிக்கும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு